top of page

அபிராமி அந்தாதி 56-60

Updated: Oct 21

ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து இவ்வுலகு எங்குமாய்
நின்றாள், அனைத்தையும் நீங்கி நிற்பாள்என்தன் நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவா; இப்பொருள் அறிவார்
அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் என் ஐயனுமே.

அபிராமி அன்னையே! ஒரே பொருளாய் முதலில் அரும்பி பின் பல பொருட்களாய் விரிந்து, இவ்வுலகம் எங்கும் இருக்கும் எல்லா பொருட்கள் ஆகி அவை எல்லாவற்றுக்கும் அப்பாலாகவும் நிற்கிறாய். (இத்தனை மகிமை உள்ளவள் சிறியேனான) என் நெஞ்சினுள்ளே எப்போதும் நீங்காது நின்று எல்லாவற்றையும் நடத்துகிறாய். இந்த இரகசியத்தின் உட்பொருளை (அல்லது இந்தப் பரம்பொருளாகிய தேவியை) அறியக் கூடியவர்கள், பிரபஞ்சங்கள் தோன்றும் முன் அவற்றைத் தன் வயிற்றில் வைத்துக் கொண்டு சிறு பாலகனாய் ஆலிலையில் துயின்ற மாயவனும் என் ஐயனான சிவபெருமானுமே ஆவர்.


57. ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு அண்டமெல்லாம் உய்ய அறம்செய்யும் உன்னையும் போற்றி ஒருவர்தம்பால் செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று பொய்யும் மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உன்தன் மெய்யருளே.

ஏ, அபிராமி! என் தந்தை சிவபெருமான் அளந்த இரு நாழி நெல்லைக் கொண்டு முப்பத்திரண்டு அறமும் செய்து உலகத்தைக் காத்தவளே! நீ எனக்கு அருளிய செந்தமிழால் உன்னையும் புகழ்ந்து போற்ற அருளினாய்! அதே சமயத்தில் நின் தமிழால் ஒருவனிடத்திலே சென்று இருப்பதையும், இல்லாததையும் பாடும்படி வைக்கிறாய்! இதுவோ உனது மெய்யருள்? 'ஐயன் அளந்த படியிருநாழி' என்பது உமையம்மை தனது கண்களை விளையாட்டாகப் பொத்தி பிரபஞ்சத்தையே இருளடையச் செயததற்குப் பரிகாரமாக, முப்பத்திரண்டறங்கள் செய்யும்படி ஆணையிட்டு இரு நாழி நெல்லை அவருக்கு அளித்தார். அதனைப் பெற்ற அபிராமி, காத்தலைச் செய்யும் காமாட்சியாகி, முப்பத்திரெண்டு அறங்களையும் புரிந்து, உலகைப் காத்தாள் என்பது வழக்கு.


58. அருணாம் புயத்தும் என் சித்தாம் புயத்தும் அமர்ந்திருக்கும் தருணாம் புயமுலைத்தையல் நல்லாள், தகை சேர்நயனக் கருணாம் புயமும் வதனாம் புயமும் கராம்புயமும், சரணாம் புயமும் அல்லாற் கண்டிலேன் ஒருதஞ்சமுமே.

அபிராமி! சூரியனை கண்டு வைகறையில் மலர்ந்த தாமரையினிடத்தும் என்னுடைய மனத்தாமரையிலும் வீற்றிருப்பவளே! குவிந்த தாமரை மொக்குப் போன்ற திருமுலையுடைய அலங்காரமான அம்பிகையே! நல்லவளே! பெருமையுடைய திருக்கண்கள் என்னும் கருணைத் தாமரைகளும், முகத்தாமரையும், பாதத் தாமரையுமேயல்லாமல், வேறொரு புகலிடத்தை நான் தஞ்சமாக அடைய மாட்டேன். தருணம் – இளமை.


59. தஞ்சம் பிறிது இல்லை ஈது அல்லது, என்று உன் தவநெறிக்கே நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன், ஒற்றை நீள்சிலையும் அஞ்சு அம்பும் இக்கு அலராகி நின்றாய்: அறியார் எனினும் பஞ்சு அஞ்சு மெல் அடியார், அடியார் பெற்ற பாலரையே.

அபிராமித் தாயே! நீண்ட கரும்பு வில்லையும், ஐவகை மலர் அம்புகளையும் கொண்டவளே! உன் திருவடிகளைத் தவிர்த்து வேறு கதி இல்லை என்று அறிந்திருந்தும், உன்னுடைய தவநெறிகளைப் பயிலாமலும், நெஞ்சத்தில் நினையாமலும் இருக்கின்றேன். அதற்காக நீ என்னைத் தண்டிக்கக் கூடாது. புறக்கணிக்காமல் எனக்கு அருள் பாலிக்க வேண்டும். உலகத்திலுள்ள பேதைகளாகிய பஞ்சும் நாணக்கூடிய மெல்லிய அடிகளை உடைய பெண்கள் தாங்கள் பெற்ற குழந்தைகளைத் தண்டிக்க மாட்டார்கள் அல்லவா? அதே போன்றே நீயும் எனக்கு அருள வேண்டும்.


60. பாலினும் சொல் இனியாய். பனி மா மலர்ப் பாதம் வைக்க மாலினும், தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார் சடையின் மேலினும், கீழ்நின்று வேதங்கள் பாடும் மெய்ப் பீடம் ஒரு நாலினும், சால நன்றோ அடியேன் முடை நாய்த் தலையே?

பாலைவிட இனிமையான சொல்லை உடையவளே! தாயே! உன் பனிமலர்ப் பாதங்களை பதிக்க திருமாலை விடவும், எல்லாத் தேவர்களும் வணங்க நின்றவனாம் சிவபெருமானின் கொன்றை மலர் அணிந்த அழகிய சடை முடியை விடவும், கீழே நின்று உன் புகழ் பாடும் நான்கு வேத பீடங்களை விடவும் நாயேனாகிய அடியேனின் முடை நாற்றம் வீசும் தலை சால நன்றாகியதோ? விரும்பி என் தலை மேல் வைத்தாயே!) முடை : புலால். துர்நாற்றம்.

34 views0 comments

Recent Posts

See All

96. கோமளவல்லியை, அல்லியந் தாமரைக் கோயில் வைகும் யாமள வல்லியை, ஏதம் இலாளை, எழுதரிய சாமள மேனிச் சகலகலா மயில்தன்னை, தம்மால் ஆமளவும் தொழுவார், எழு பாருக்கும் ஆதிபரே. இளமையும் மென்மையும் கொண்ட கொடி போன்ற எ

91. மெல்லிய நுண் இடை மின் அனையாளை விரிசடையோன் புல்லிய மென் முலைப் பொன் அனையாளை, புகழ்ந்து மறை சொல்லியவண்ணம் தொழும் அடியாரைத் தொழுமவர்க்கு, பல்லியம் ஆர்த்து எழ, வெண் பகடு ஊறும் பதம் தருமே. அபிராமித் தே

86. மால் அயன் தேட, மறை தேட, வானவர் தேட நின்ற காலையும், சூடகக் கையையும் கொண்டு, கதித்த கப்பு வேலை வெங் காலன் என்மேல் விடும்போது, வெளி நில் கண்டாய் பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே. பாலையும்,

bottom of page