அபிராமி அந்தாதி 61-65

Updated: Oct 26

61. நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து, நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய், நின்னை உள்ளவண்ணம் பேயேன் அறியும் அறிவு தந்தாய், என்ன பேறு பெற்றேன் தாயே, மலைமகளே, செங்கண் மால் திருத் தங்கைச்சியே.

தாயே! மலையரசர் மகளே! கருணையினால் சிவந்த கண்களையுடைய திருமாலின் தங்கையே! நாயை விட ஈனப்பிறவியான என்னையும் இங்கே ஒரு பொருட்டாக மதித்து (என் முயற்சி சிறிதும் இன்றி நீயே உன் கருணையினால்) விரும்பி வந்து), என்னை தன்னையே மறக்குமாறு செய்து ஆட்கொண்டு விட்டாய்! அது மட்டுமல்லாமல், உன்னை உள்ளபடியே (எந்தக் காரணமும் பார்க்காத அவ்யாஜ கருணை) அறிந்து கொள்ளும் அறிவையும் பேயேனாகிய எனக்குத் தந்தாய். நான் பெறுதற்கரிய பேறல்லவோ பெற்றேன்!

62. தங்கச் சிலை கொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத வெங் கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக் கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகனகச் செங் கைக் கரும்பும், மலரும், எப்போதும் என் சிந்தையதே.

ஏ, அபிராமி! உன் கணவர் பொன் மலையை வில்லாகக் கொண்டு, திரிபுர அசுரர்களின் முப்புரங்களையும் சிரித்தே கொளுத்தும் சிவந்த கண்களை உடைய, யானைத்தோலைப் போர்த்திய சிவந்த மேனியை கொண்ட சிவபெருமானின் உடலில் பாதியை அடைய அன்னவனின் திருமேனியையும், உன்னுடைய குரும்பையொத்த கொங்கையெனும் அம்பினைக் குறி வைத்த தலைவியே! ( அல்லது, கொங்கையால் சோர்வடையச் செய்தவளே!) பொன் போன்ற சிவந்த கைகளில் கரும்பு வில்லோடும், மலர் அம்போடும், என் சிந்தையில் எப்போதும் உறைந்திருப்பாய்.

63. தேறும்படி சில ஏதுவும் காட்டி, முன் செல்கதிக்குக் கூறும் பொருள், குன்றில் கொட்டும் தறி குறிக்கும் சமயம் ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும், வேறும் சமயம் உண்டு என்று கொண்டாடிய வீணருக்கே.

அபிராமி அன்னை பேதையர்களுக்கு தேறிச் சென்று நற்கதியடைவதற்குச் சில உண்மையான வழிகளைக் காட்டுகிறாள். அவள் முதன்மையான ஆறு சமயங்களை அருளி அவற்றின் தலைவியாய் இருப்பது அறிந்திருந்தும், வேறு சமயங்கள் உயர்ந்தவை எனப்பேசி திரியும் வீணர்களின் செயல் பெரிய மலையைத் தடி கொண்டு தகர்ப்பேன் என்பது போல் உள்ளது.

64. வீணே பலி கவர் தெய்வங்கள் பால் சென்று, மிக்க அன்பு பூணேன், உனக்கு அன்பு பூண்டுகொண்டேன், நின்புகழ்ச்சி அன்றிப் பேணேன், ஒரு பொழுதும், திருமேனி ப்ரகாசம் அன்றிக் காணேன், இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே.

தேவையான நற்பலன்களை அளிக்க இயலாத தெய்வத்திற்கு செய்யப்படும் பூசனைகள், பலிகள் அனைத்தும் வீணே என்று அபிராமி பட்டர் இந்த பாடலில் கூறுகிறார். தம்மை வணங்குபவர்களிடமிருந்து காணிக்கைகளைகவர்ந்து கொண்டு ஆனால் அவர்கள் விரும்பியதை அருளும் வலு இல்லாத தெய்வங்களிடம் சென்று அவர்களிடம் அன்பு பூண மாட்டேன். உன்னுடைய புகழ் வார்த்தையன்றி வேறொரு வார்த்தை பேச மாட்டேன். நீண்ட நெடிய இந்த உலகத்திலும் நான்கு திசைகளிலும் வானத்திலும் எங்கு நோக்கினும் உன் திருமேனி திருவொளி அன்றி வேறெதுவும் காணேன்.

65. ககனமும் வானும் புவனமும் காண, விற் காமன் அங்கம் தகனம் முன் செய்த தவம்பெருமாற்கு, தடக்கையும் செம் முகனும், முந்நான்கு இருமூன்று எனத் தோன்றிய மூதறிவின் மகனும் உண்டாயது அன்றோ வல்லி. நீ செய்த வல்லபமே.

ஏ, ஆனந்தவல்லி அபிராமி! உனது கணவனாகிய சிவபெருமான் ஒரு காலத்தில் மன்மதனை மண்ணுலகமும், விண்ணுலகமும், இடைப்பட்ட பெருவெளியும் காணும்படியாக எரித்தார். அப்படிப்படவருக்கும் நீ ஆறுமுகமும், நீண்ட வலிய பன்னிரு திருக்கரங்களும் சிறந்த அறிவும் கொண்ட அழகனாகிய முருகனைப் பெற சக்தியைக் கொடுத்தாய். உன்னுடைய அன்புதான் என்னவோ! தடக்கை = வலிய, பெரிய கை.


6 views0 comments

Recent Posts

See All

96. கோமளவல்லியை, அல்லியந் தாமரைக் கோயில் வைகும் யாமள வல்லியை, ஏதம் இலாளை, எழுதரிய சாமள மேனிச் சகலகலா மயில்தன்னை, தம்மால் ஆமளவும் தொழுவார், எழு பாருக்கும் ஆதிபரே. இளமையும் மென்மையும் கொண்ட கொடி போன்ற எ

91. மெல்லிய நுண் இடை மின் அனையாளை விரிசடையோன் புல்லிய மென் முலைப் பொன் அனையாளை, புகழ்ந்து மறை சொல்லியவண்ணம் தொழும் அடியாரைத் தொழுமவர்க்கு, பல்லியம் ஆர்த்து எழ, வெண் பகடு ஊறும் பதம் தருமே. அபிராமித் தே

86. மால் அயன் தேட, மறை தேட, வானவர் தேட நின்ற காலையும், சூடகக் கையையும் கொண்டு, கதித்த கப்பு வேலை வெங் காலன் என்மேல் விடும்போது, வெளி நில் கண்டாய் பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே. பாலையும்,