ராகம் : பைரவி
76. குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம், நின் குறிப்பு அறிந்து மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி, வண்டு கிண்டி வெறித்தேன் அவிழ் கொன்றை வேணிப் பிரான் ஒரு கூற்றை, மெய்யில் பறித்தே, குடிபுகுதும் பஞ்ச பாண பயிரவியே.
சிவனாகிய பைரவனின் துணைவியான பஞ்ச பாணங்களையுடைய பைரவியே! உன் திருவுருவங்களையே மனத்தில் நினைத்து தியானிக்கின்றேன். உன்னுடைய திருவருளைக் துணை கொண்டு, மருட்டுகின்ற யமன்வரும் வழியைக் கண்டு கொண்டேன். கண்டதும் அல்லாமல், அவன் வருவதற்கு முன், அவன் வழியை அடைத்தும் விட்டேன் (எல்லாம் நின் திருவருளே). வண்டுகளால் துளைக்கப்பட்டு வெறியூட்டும் தேன் சொட்டுகின்ற கொன்றை மாலையை அணிந்த சிவபெருமானின் இடப்பாகத்தை வெற்றி கொண்டு, தானொரு பாதியாக அமர்ந்தவளே!
77. பயிரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்ச பாணி, வஞ்சர் உயிர் அவி உண்ணும் உயர் சண்டி, காளி, ஒளிரும் கலா வயிரவி, மண்டலி, மாலினி, சூலி, வராகி என்றே செயிர் அவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே.
அம்மா அபிராமி! நீ பைரவர் வணங்கக்கூடிய பைரவி (அச்சத்தை தருபவள்; “உயிர் அவி பயிரவி” – தேவேந்திர சங்க வகுப்பு); பஞ்சமி; பாசத்தையும், அங்குசத்தையும் உடைய பாசாங்குசை; ஐவகை மலர் அம்புகளையுடைய பஞ்சபாணி; வஞ்சகரின் உயிரை மாய்த்து, அவர்கள் இரத்தத்தைக் குடிக்கின்ற மேலான சண்டி; மகா காளி; விளங்குகின்ற கலைகளாகிய வயிரங்களுடைய சிறந்த வட்டமான மேகலையை உடையவள், சூரிய, சந்திர மண்டலத்திலுள்ளோர்க்கு மண்டலி; சூலத்தையுடைய சூலி; உலகளந்த வராகி என்றெல்லாம் அடியார் பல்வேறு நாமங்களைச் சொல்லி வணங்குவர். குற்றமற்ற வேதங்களிலும், நின் திரு நாமங்கள் இவ்வாறு கூறப்படுகின்றன. அதையே அடியார்கள் மீண்டும் மீண்டும் சொல்லி வாழ்த்தி வணங்கி வழிபடுகின்றனர்.
பஞ்சமி என்றால் ப்ராம்ஹி, மாகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராஹி, இந்த்ராணி மற்றும் சாமுண்டி ஆகிய சப்த கன்னிகள் என்னும் எழுவரில் ஐந்தாவதானவள். பஞ்சமி என்பதற்கு பஞ்சமி - ஐந்து தொழில்கள் உடையவள் என்றும் பஞ்சபூதங்களின் தலைவி என்றும் பொருள் சொல்லுவது வழக்கம். தேவி மகாத்மியத்தில் சிவன், விஷ்ணு, பிரம்மா, முருகன் எனும் குமாரன், மற்றும் இந்திரன் ஆகியவர்களின் சக்திகளான சக்தி, வைஷ்ணவி அல்லது வராகி, பிரம்மி, கௌமாரி, இந்திரை எனும் ஐந்து பெண் சக்திகளும் கூட்டாகச் சேர்ந்து பஞ்சமி ரூபத்தில் ரக்தபீஜ அசுரனை அழித்ததாக கதை.
"செயிர் அவி நான்மறை சேர் திருநாமங்கள்" என்பது குற்றங்கள் இல்லாத நால்வகை வேதங்களில் இடம்பெறும் திருநாமங்கள் .
78. செப்பும் கனக கலசமும் போலும் திருமுலைமேல் அப்பும் களப அபிராம வல்லி, அணி தரளக் கொப்பும், வயிரக் குழையும், விழியின் கொழுங்கடையும், துப்பும் நிலவும் எழுதிவைத்தேன், என் துணை விழிக்கே.
என் தாய் அபிராமியே!! என் கண்களில் எப்போதும் நிலை நிற்கும் வண்ணம் உன் மாணிக்கப் பூண் அணிந்த பொற்கலசம் போன்ற திருமுலையும் அம்முலைமேல் பூசிய மணம் வீசும் சிறந்த சந்தனக் கலவையும் நீ அணிகின்ற முத்தாலான காதணிகளும், வைரத்தால் ஆன குண்டலங்களும் கருணை மிகு உந்தன் கடைக்கண் பார்வையும், குளிர்ச்சியை உமிழ்கின்ற நிலவைப் போன்ற திருமுகமும் கொண்ட உனது அழகியத் திருவுருவை என் மனத்தில் வரைந்து வைத்தேன்.
79. விழிக்கே அருள் உண்டு, அபிராம வல்லிக்கு, வேதம் சொன்ன வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு அவ்வழி கிடக்க, பழிக்கே சுழன்று, வெம் பாவங்களே செய்து, பாழ் நரகக் குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு, என்ன கூட்டு இனியே?
அபிராமி அன்னையின் விழிகளிலே அருள் உண்டு. வேதமுறைப்படி அவளை வழிபட எனக்கு நெஞ்சமும் உண்டு. ஆகவே அம்மையை வழிபடும் முறை தவிர்த்து, வீணான பழியையும் பாவங்களையுமே செய்து பாழும் நரகத்தில் அழுந்தும் கயவர்களோடு இனி நமக்கு என்ன நட்பு? (அபிராமி அன்னை சிறந்த துணையாவாள்).
80. கூட்டியவா என்னைத் தன் அடியாரில், கொடிய வினை ஓட்டியவா, என்கண் ஓடியவா, தன்னை உள்ளவண்ணம் காட்டியவா, கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா, ஆட்டியவா நடம் ஆடகத் தாமரை ஆரணங்கே.
அபிராமித்தாயே! பொற்றாமரையில் வாழும் பேரழகானவளே! என்னை உன் அடியார்கள் கூட்டத்தில் சேர்த்தவளே! என்னை நோக்கி ஓடிவந்து நான் செய்த கொடிய வினைகளையெல்லாம் ஒழித்தவளே!. ஒன்றையும் அறியாத எனக்கு, உன்னுடைய உண்மை உருவைக் காட்டியவளே! உன்னைக் கண்ட என் கண்ணும், மனமும் களிநடம் புரிகின்றது. இவ்வாறெல்லாம் என்னை நாடகமாடச் செய்தவளே! உன்னுடைய கருணையைத்தான் என்னவென்பேன்!