ராகம் : துர்கா
அணங்கே! அணங்குகள் நின் பரிவாரங்கள் ஆகையினால்
வணங்கேன் ஒருவரை வாழ்த்துகிலேன் நெஞ்சில்வஞ்சகரோடு
இணங்கேன், எனது உனது என்றிருப்பார் சிலர் யாவரொடும்
பிணங்கேன், அறிவு ஒன்று இலேன், என்கண் நீ வைத்தபேர் அளியே
அழகிய அபிராமி அன்னையே... அனைத்துத் தெய்வங்களும் உந்தன் பரிவாரங்கள். ஆதலினால் நான் அவர்களை வணங்க மாட்டேன்; ஒருவரையும் போற்றவும் மாட்டேன். நெஞ்சத்தில் வஞ்சகம் கொண்ட கொடியவரோடு நட்பு கொள்ள மாட்டேன்.சில ஞானிகள் மட்டுமே தங்களது மெய், பொருள், ஆவி அனைத்தும் உன்னுடையது என்று இருப்பார்கள். அத்தகைய ஞானிகளோடு பிணங்காது சேர்ந்து உறவாடுவேன்! அன்னையே அறிவில்லாத எளியேன் என் மீது நீ வைத்த பேரன்பால், வஞ்சகர் தொடர்பில்லாது ஞானியர் தொடர்பு கிட்டியது. அவர் நட்பை நான் என்றும் விலக்கேன்.
82. அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே. அகிலாண்டமும் நின் ஒளியாக நின்ற ஒளிர் திருமேனியை உள்ளுதொறும், களி ஆகி, அந்தக்கரணங்கள் விம்மி, கரைபுரண்டு வெளியாய்விடின், எங்ஙனே மறப்பேன், நின் விரகினையே?
வண்டுகள் மொய்க்கும் தாமரையில் அமர்ந்திருக்கும் பேரழகியே! அபிராமி அன்னையே! இவ்வுலகமெல்லாம் ஒளியாக நின்ற உந்தன் ஒளிரும் திருமேனியை எண்ணும்போதெல்லாம், எந்தன் ஆழ்மனது மகிழ்ச்சியுற்று விம்மி, மகிழ்வெள்ளத்தில் கரைபுரண்டு ஆகாயத்தோடு ஒன்றி விடுகின்றது. இவ்வளவு பேரருள் காட்டியருளிய உன் தவநெறியை, உனது சாமர்த்தியத்தை, நான் எப்படி மறப்பேன்? அந்தக் கரணங்கள் = ஆழ்மனம். வெளியாய் விடில் = ஆகாயத்தோடு ஒன்றிவிடும்போது / ஆகாயமாய் நிற்கும் உந்தன் பேரொளியோடு ஒன்றி விடும்போது.
83. விரவும் புது மலர் இட்டு, நின் பாத விரைக்கமலம் இரவும் பகலும் இறைஞ்ச வல்லார், இமையோர் எவரும் பரவும் பதமும், அயிராவதமும், பகீரதியும், உரவும் குலிகமும், கற்பகக் காவும் உடையவரே.
அன்னையே, அபிராமி! உன்னுடைய மணம் வீசும் உனது திருவடித் தாமரைகளில் தேன் சிந்தும் புதுமலர்களை வைத்து இரவு, பகலாக தியானம் செய்யும் பெரியோர்கள், தேவர்கள் முதலிய யாவரும் இந்திர பதவி, ஐராவதம் என்ற யானை, ஆகாய கங்கை, வலிமையான வஜ்ஜிர ஆயுதம், கற்பகச் சோலை முதலியவைகளை முறையாகப் பெற்று பெருவாழ்வு வாழ்கின்றனர். (அவர்கள் என்றும் யாரிடத்தும் சென்று எதையும் இரங்கிப் பெறவேண்டிய அவசியமே இல்லை. ஆயினும் அவர்களுக்கு அன்னையின் திருவடிகளை விடுத்து வேறு எந்த செல்வமும் பெரிதல்ல.)
84. உடையாளை, ஒல்கு செம்பட்டுடையாளை, ஒளிர்மதிச் செஞ் சடையாளை, வஞ்சகர் நெஞ்சு அடையாளை, தயங்கு நுண்ணூல் இடையாளை, எங்கள் பெம்மான் இடையாளை, இங்கு என்னை இனிப் படையாளை, உங்களையும் படையாவண்ணம் பார்த்திருமே.
இவ்வுலகத்தோரே! என் அபிராமி அனைத்தையும் உடையவள். இடையில் ஒளிவீசும் செம்பட்டு அணிந்தவள். ஒளி வீசும் பிறைச் சந்திரனை அணிந்த சடையை உடையவள். வஞ்சகர்களின் நெஞ்சிலே குடி கொள்ளாதவள். வாடும் மெல்லிய நூல் போன்ற இடையை உடையவள். சிவபெருமானின் இடப்பாகத்தில் குடி கொண்டவள். என் அன்னையாகிய இவள் அந்நாள் என்னை அடிமையாகக் கொண்டாள். என்னை இனி இவ்வுலகில் பிறக்க வைக்க மாட்டாள். அத்தகைய தேவியை நீங்களும் தொழுது போற்றுங்கள். நீங்களும் பிறவி எடுக்காப் பேறெய்த அவளையே தியானம் செய்யுங்கள். ஒல்குதல் : தளர்தல், மெலிதல், அசைதல்;
85. பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும், பனிச் சிறை வண்டு ஆர்க்கும் புதுமலர் ஐந்தும், கரும்பும், என் அல்லல் எல்லாம் தீர்க்கும் திரிபுரையாள் திரு மேனியும், சிற்றிடையும், வார்க் குங்கும முலையும், முலைமேல் முத்து மாலையுமே.
அபிராமியே! நான் எத்திசையை நோக்கினும் உன்னுடைய படைகளாகிய பாசமும், அங்குசமும், பனி போன்ற சிறகுகள் கொண்ட வண்டுகள் மொய்த்திருக்கும் மலர் அம்பு ஐந்தும், கரும்பு வில்லும், என்னுடைய துன்பங்களெல்லாம் தீர்க்கக் கூடிய திரிபுர சுந்தரியாகிய நின் திருமேனி அழகும், சிற்றிடையும், கச்சையணிந்த குங்குமம் தோய்ந்த மார்பகங்களும், அவற்றின் மேலே அசையும் முத்துமாலையும் என் கண்முன் காட்சியாய் நிற்கின்றன.