top of page

அபிராமி அந்தாதி 96-100

Updated: Mar 27ராகம் : மத்யமாவதி


96. கோமளவல்லியை, அல்லியந் தாமரைக் கோயில் வைகும்

யாமள வல்லியை, ஏதம் இலாளை, எழுதரிய

சாமள மேனிச் சகலகலா மயில்தன்னை, தம்மால்

ஆமளவும் தொழுவார், எழு பாருக்கும் ஆதிபரே.


இளமையும் மென்மையும் கொண்ட கொடி போன்ற என் அபிராமி அன்னையை, அழகிய அல்லி, தாமரை மலர்களால் ஆன திருக்கோவிலில் வாழும் பச்சை நிறப் பேரழகியை, குற்றமற்றவளை, எழுதுவதற்கரிய அழகுடைய கருநிற மேனி கொண்டவளை, சகல கலைகளிலும் வல்ல மயில் போன்றவளை, தம்மால் கூடுமானவரை தொழுகின்ற அடியவர்கள் ஏழுலகையும் ஆட்சி புரியும் அதிபர்கள் ஆவார்கள்.


97. ஆதித்தன், அம்புலி, அங்கி குபேரன், அமரர்தம் கோன்,

போதிற் பிரமன் புராரி, முராரி பொதியமுனி,

காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, காமன் முதல்

சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர், தையலையே.


என்னுடைய அன்னை அபிராமியை புண்ணியம் பல செய்த சூரியன், சந்திரன், அக்கினி, குபேரன், தேவர்களின் தலைவன் இந்திரன், தாமரை மலரில் உதித்த பிரம்மன், முப்புரங்களை எரித்த சிவபெருமான், முரனைத் தண்டித்த திருமால், பொதியமலை முனியாகிய அகத்தியர், கொன்று போர் புரியும் கந்தன், கணபதி, மன்மதன் முதலான சாதனைகள் பல படைத்த எண்ணற்றோர் எங்கள் அன்னை அபிராமியைப் போற்றுவார்கள்.

அமரர் தம் கோன் = அமரர்களின் அரசன் இந்திரன்; போதிற் பிரமன்= மாலின் நாபிக் கமலத்துதித்த பிரம்மன்; காதிப் பொரு படை கந்தன் = போரிடும் பெரும்படையை கொண்ட வலிமை மிக்க முருகன்.


98. தைவந்து நின் அடித் தாமரை சூடிய சங்கரற்கு

கைவந்த தீயும், தலை வந்த ஆறும், கரந்தது எங்கே?

மெய் வந்த நெஞ்சின் அல்லால் ஒருகாலும் விரகர் தங்கள்

பொய்வந்த நெஞ்சில் புகல் அறியா மடப் பூங் குயிலே.


உன்னுடைய தாமரைப் பாதங்களில் தைத்த மலர்மாலை அணிவித்த சிவனின் கைகளில் அக்கினியைக் காணவில்லை, தலையில் கங்கையுமில்லை; எங்கே ஒளிந்தன? உண்மையான அன்பு செலுத்தும் அடியார்கள் மனதை விட்டு, வஞ்சகமும் பகட்டுத் தந்திரமும் கொண்ட பொய் மனத்தவர் நெஞ்சில் ஒருபோதும் வந்து புகுந்தறியாத , அழகும் இளமையும் கொண்ட பூங்குயிலே! அபிராமியே!

தை வந்து = தைத்த மலர் மாலை; விரகு = தந்திரம், சாமர்த்தியம், பகட்டு. மடம் =அழகு, இளமை .

கை வந்த தீ = தாருகாவனத்து அக்கினி அசுரனை அடக்கித் தீயைப் பூச்செண்டு போல் கையில் எடுத்துக்கொண்டார். தலை வந்த ஆறு= தன் வேகத்தை யாராலுமே தாங்க முடியாது என்ற வீராப்புடனிருந்த ஆகாய கங்கையை அடக்கினார். தன்னுடைய பராக்கிரமத்தின் அடையாளங்களான தீயையும் கங்கையையும் துறந்து சாதாரணனாக சிவன் அபிராமியை வணங்குவதை இந்த செய்யுளில் அபிராமி பட்டர் வர்ணிக்கிறார்.

99. குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை, கோல இயல்

மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை, வந்து உதித்த

வெயிலாய் இருக்கும் விசும்பில், கமலத்தின்மீது அன்னமாம்,

கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே


கயிலாய மலையாளராகிய சிவபெருமானுக்கு முன்னொரு காலத்தில் இமவான் திருமணம் செய்து கொடுத்த சமயத்தில் அன்புடன் அளித்த கனத்தை உடைய பொற் காதணிகளை அணிந்த அம்மை அபிராமியே ! கடம்பவனத்தில் உறைந்த குயிலே! இமயமலையில் தோன்றிய அழகிய மயிலே! ஆகாயத்தில் நிறைந்திருப்பவளே! தாமரை மீது அன்னமாக அமர்ந்திருக்கும் திருக்கோலத்தையுடையவளே! (மதுரை மீனாட்சி திருக்கோவிலின் தல மரமாகிய கடம்ப மரத்தின் மேல் வசிக்கும் இசையின் உருவகமான குயிலாகவும், இமயத்தில் அழகிய மயிலாகவும், சிதம்பரத்தில் ஞானசூரிய ஒளியாகவும், திருவாரூரில் அன்னமாகவும் அம்பிகை விளங்குகின்றாள் என்பது வழக்கு).


100. குழையைத் தழுவிய கொன்றையந் தார் கமழ் கொங்கைவல்லி

கழையைப் பொருத திருநெடுந் தோளும், கருப்பு வில்லும்

விழையப் பொரு திறல் வேரியம் பாணமும் வெண் நகையும்

உழையைப் பொருகண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே!


காதில் அணிந்துள்ள குழைகளைத் தொடும் படியாகத் தொடுக்கப்பட்டிருக்கும் கொன்றை மாலையை அணிந்து அந்த மாலையால் மணம் கமழும் கொங்கைகளைக் கொண்டுள்ள அன்னையே! உன்னுடைய மூங்கிலை பொருது வென்ற அழகிய நீண்ட திருத்தோள்களும், கரும்பாகிய வில்லும், கலவிபோருக்கு விருப்பத்தை கூட்டும் தேன் துளிர்த்து மணம் மிகுந்த ஐவகை மலர் அம்பும், வெண்மையான முத்துப்பல் இதழ்ச் சிரிப்பும், மானை ஒத்த மருண்ட கண்களுமே எப்பொழுதும் என் நெஞ்சில் நிறைந்திருக்கிறது. அத் திருமேனியையே நான் வழிபடுகின்றேன்.

விழைவு=விருப்பம், புணர்ச்சி; வேரி=தேன்; அம் = அழகிய;


நூற்பயன்

ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம்

பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவி அடங்கக்

காத்தாளை, அங்குச பாசம் குசுமம் கரும்பும் அங்கை

சேர்த்தாளை, முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே.


எங்கள் தாயானவளை, அபிராமி வல்லியை, எல்லா உலகங்களையும் பெற்றவளை, மாதுளம் பூப்போன்ற நிறத்துடையவளை, உலகமெல்லாம் காத்தவளை, அங்குசமும் பாசமும் மலர் பாணமும் கரும்பு வில்லும் தன் நான்கு அழகிய திருக்கைகளீல் வைத்தவளை, மூன்று கண்கள் உடையவளை வணங்கும் அடியவர்களுக்கு ஒரு தீங்கும் நேராது; உலகில் வளமும் நலமும் பெற்று வாழ்வர்.318 views0 comments

Recent Posts

See All

அபிராமி அந்தாதி : பாடல் 31-35

ராகம் : பந்துவராளி உமையும், உமையொரு பாகனும் ஏக உருவில் வந்துஇங்கு எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார்; இனி எண்ணுதற்குச் சமயங்களும்...

அபிராமி அந்தாதி 86-90

ராகம் : சாரங்கா 86. மால் அயன் தேட, மறை தேட, வானவர் தேட நின்ற காலையும், சூடகக் கையையும் கொண்டு, கதித்த கப்பு வேலை வெங் காலன் என்மேல்...

அபிராமி அந்தாதி 91-95

ராகம் : சுருட்டி 91. மெல்லிய நுண் இடை மின் அனையாளை விரிசடையோன் புல்லிய மென் முலைப் பொன் அனையாளை, புகழ்ந்து மறை சொல்லியவண்ணம் தொழும்...

bottom of page