ராகம் : ஸாவேரி
ஆனந்தமாய் என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்
வான் அந்தமான வடிவு உடையாள் மறை நான்கினுக்கும்
தான் அந்தமான சரணாரவிந்தம் தவள நிறக்
கானம் தம் ஆடரங்கு ஆம் எம்பிரான் முடிக் கண்ணியதே.
ஆனந்த உருவமே தானாகி, என் அறிவாகவும், என் வாழ்வில் அமுதமாகவும் நிறைந்திருக்கின்றாள் (சச்சிதானந்த உருவுடையாள்). அவள் ஆகாயத்தில் தொடங்கி பிருதுவி, நீர், நெருப்பு, காற்று என்ற ஐம்பெரும் வடிவுடையவள். வேதம் நான்கினுக்கும் தானே தொடக்கமாகவும் முடிவாகவும் இருப்பவள். இப்படிப்பட்ட தாயின் திருவடித் தாமரைகள் வெண்ணிற சாம்பல் நிறைந்த மயானத்தில் / திருவெண்காட்டில் திருநடனம் புரியும் எம்பிரான் ஈசன் முடிமேல் (ஊடல் தீர்க்கும் பொருட்டு அவர் தேவியை வணங்கியதால்) மாலையாகத் திகழ்வன. (கண்ணி என்பது தலையில் சூடும் மாலை.)
12. கண்ணியது உன் புகழ் கற்பது உன் நாமம் கசிந்து பக்தி
பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில் பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான் முன்செய்த
புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே.
என் அம்மையே! ஏழ் உலகையும் பெற்றவளே! நான் எப்பொழுதும் ஊனுருக கருதுவது உன்புகழே! நான் கற்பதோ உன் நாமம். என் கல் போன்ற மனம் சற்று விரிசல் விட்டு, அதிலிருந்து கசியும் அன்பினால் உன் திருவடித் தாமரையை வணங்குகிறேன். நான் இரவென்றும் பகலென்றும் பாராமல் சென்று சேர்ந்திருப்பது உன் அடியார் கூட்டம். இவைகளுக்கெல்லாம் காரணமாக நான் முற்பிறவிகளில் செய்த புண்ணியம் தான் என்ன!
13. பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைக்கண்டனுக்கு
மூத்தவளே என்றும்மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே
ஒரு பூ மலர்வதைப் போல், இந்த ஏழு உலகங்களையும் மலரவைத்தவளே! எவ்வாறு ஈன்றாயோ அவ்வாறே அருள் கொண்டு உலகத்தைக் காப்பவளே! பின்பு ஏதோ ஒரு காலத்தில் உலகத்தை உன்னில் அடக்கிக் கொண்டவளே! விஷத்தை உண்ட நீலகண்டனுக்கு (ஆலகால விஷத்தை உண்டதால் கறை எனப்பட்டது) மூத்தவளே (ஆதி சக்தியிலிருந்தே சிவன் பிரம்மா விஷ்ணு முதலானோர் தோன்றினார்கள் என்பதால்)! என்றும் மூப்பை அடையாத இளமை பொருந்திய திருமாலுக்குத் தங்கையே! அரும் பெரும் தவத்தின் தலைவியே! (தவள் - தவம் புரிபவள்.) அபிராமி அன்னையே! உன்னையன்றி மற்றொரு தெய்வத்தை வணங்கேன்.
14. வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள்
சிந்திப்பவர் நல்திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே
பந்திப்பவர் அழியாப் பரமானந்தர் பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி. நின் தண்ணளியே
அபிராமி அன்னையே! உன்னை வணங்குபவர்கள் தேவர்கள் மற்றும் அசுரர்கள், உன்னை விரும்பி தொழுபவர்கள் நான்கு முகங்களையுடைய பிரம்மனும் விஷ்ணுவும்! நின்னை மனத்திற்கு கட்டுப்படுத்தியவர் என்றும் அழியாத பரமானந்த நாதனாகிய சிவபெருமானே! இவர்களைக் காட்டிலும் உலகத்தில் நின்னைத் தரிசனம் செய்வார்க்கே நீ எளிதில் அருள் புரிகின்றாய். என் தாயே! உன் கருணைதான் என்னே! வியத்தற்குரிய தன்மையது!
15. தண்ணளிக்கு என்று முன்னே பல கோடி தவங்கள் செய்வார்
மண் அளிக்கும் செல்வமோ பெறுவார்? மதி வானவர் தம்
விண் அளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடும் அன்றோ?
பண் அளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே.
உன் குளிர்ச்சியான திருவருள் பெறுவதற்காக பல கோடி தவங்கள் செய்பவர் இந்த மண்ணுலகம் கொடுக்கும் செல்வங்களை மட்டுமா பெறுவார்? சிறந்த தேவேந்திரன் ஆட்சி செய்யக்கூடிய விண்ணுலக போகத்தையும் பெறுவர். மற்றும் அழியாத முக்திப் பேற்றையும் அடைவார்கள் அல்லவா! அன்னையே! அபிராமித் தாயே! இசையின் பிறப்பிடமாகும் சொற்களைச் சொல்லும், நறுமணம் வீசும் எம் பசுங்கிளியே!
அபிராமி அந்தாதி பாடல்களை இங்கே கற்கவும்.