ராகம் : காம்போதி
36. பொருளே! பொருள் முடிக்கும் போகமே! அரும்போகம் செய்யும்
மருளே! மருளில் வரும்தெருளே என் மனத்து வஞ்சத்து
இருளேதும் இன்றி ஒளிவெளியாகி இருக்கும் உன்றன்
அருளேது அறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே!
நீ பலவகை செல்வமாக இருக்கின்றாய். பிறகு அவ்வைசுவரியங்களால் நுகரப்படும் போகமாகவும் நீ திகழ்கின்றாய். பிறகு அப்போகத்தை அனுபவிக்கப்படி செய்யும் மாயையாகவும் இருக்கின்றாய் , அம்மாயையில் தோன்றி முடிவில் விளங்கும் தெளிவாகவும் விளங்குகின்றாய்; இவ்வாறு பல கூறுபாடுகளாகவுள்ள நீயே என் மனத்தில் அஞ்ஞான மாயை அகற்றி தூய ஞான ஒளியை ஏற்றியிருக்கின்றாய். பரவொளியாய் விளங்கும் அபிராமியே! நின் திருவருளின் மகிமையை உணர மாட்டாது மயங்குகின்றேன். குவிந்த தனங்களையுடைய அபிராமியே!
37. கைக்கே அணிவது கன்னலும் பூவும்; கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண்முத்து மாலை; விடஅரவின்
பைக்கே அணிவது பண்மணிக் கோவையும் பட்டும், எட்டுத்
திக்கே அணியும் திருவுடையான் இடம் சேர்பவளே!
என் அபிராமி அன்னையே! நின் அருட் கரங்களில் அணிவது இனிய கரும்பும், மலர்க் கொத்துமாகும். தாமரை மலரைப் போன்ற மேனியில் அணிந்து கொள்வது, வெண்மையான நன்முத்து மாலையாகும். விஷம் பொருந்திய நாகத்தின் படம் போல் உள்ள அல்குலைக் கொண்ட இடையில் அணிவது பலவித நவமணிகளால் செய்யப்பட்ட மேகலையும் பட்டுமேயாகும். அனைத்துச் செல்வங்களுக்கும் தலைவனாகிய எம்பெருமான் எட்டுத் திசைகளையுமே ஆடையாகக் கொண்டுள்ளான். அப்படிப்பட்ட எம்பிரானின் இடப்பாகத்தில் பொலிந்து தோன்றுகின்றாய் நீ!
38. பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும், பனிமுறுவல்
தவளத் திருநகையும் துணையா எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணை முலையாள்
அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே.
என் அன்னை அபிராமி பவளக்கொடி போலும் சிவந்த வாயை உடையவள். குளிர்ச்சி தரும் முத்துப்பல் சிரிப்பழகி, அது மட்டுமா? எம் ஈசன் சங்கரனின் தவத்தை உடுக்கை போன்ற இடை நோகும்படியுள்ள இணைந்த முலைகளால் குலைத்தவள். அப்படிப்பட்டவளைப் பணிந்தால் தேவர் உலக ராஜதானியான அமராவதியே கிடைக்கும். ஆகவே அவளைப் பணியுங்கள்.
39. ஆளுகைக்கு உன்தன் அடித்தாமரைகள் உண்டு; அந்தகன்பால்
மீளுகைக்கு உன்தன் விழியின் கடையுண்டு; மேல் இவற்றின்
மூளுகைக்கு என்குறை; நின்குறையே அன்று; முப்புரங்கள்
மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாள்நுதலே!
அபிராமி! நின் திருவடித் தாமரைகள் இருக்கின்றன. அவற்றிற்கு என்னை ஆளும் அருள் உண்டு. உன்னுடைய கடைக்கண் கருணையுண்டு. ஆகையால் எமனிடத்திலிருந்து எனக்கு மீட்சியுண்டு. நான் உன்னை முயன்று வணங்கினால் பயன் உண்டு. வணங்காவிடின் அது என் குறையே; உன் குறையன்று. அழகிய நெற்றியை உடையவளே! முப்புரத்தை அழிக்க வில்லையும் அம்பையும் எடுத்த சிவபெருமானின் இடப்பாகத்தில் அமர்ந்தவளே! அபிராமியே!
40. வாணுதல் கண்ணியை, விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியைப் பேதைநெஞ்சில்
காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியைக் காணும் அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணமன்றோ முன்செய் புண்ணியமே.
ஒளி பொருந்திய நெற்றியுடையவள் அபிராமி! தேவர்களும் வணங்க வேண்டும் என்ற நினைப்பை உண்டு பண்ணக்கூடியவள்! அறியாமை நிறைந்த நெஞ்சுடையார்க்கு எளிதில் புலப்படாதவள். என்றும் கன்னியானவள். இப்படிப்பட்டவளை நான் அண்டிக் கொண்டு வணங்க எண்ணினேன். இதுவே நான் முற்பிறவிகளில் செய்த புண்ணியமாகும்.
பேதமை = அறியாதிருத்தல்; அண்ணியம் = அண்மை, நெருக்கம்; அண்ணியள் அல்லாத = தொலைவில் இருக்கும்; அண்ணித்தல் என்றால் அருளுதல் என்றும் பொருள்.
அபிராமி அந்தாதி பாடல்களை இங்கே கற்கவும்.