top of page

அபிராமி அந்தாதி 41-45

Updated: Oct 13, 2022

புண்ணியம் செய்தனமே மனமே! புதுப் பூங்குவளைக்

கண்ணியும், செய்ய கணவரும் கூடிநம் காரணத்தால்

நண்ணி இங்கேவந்து தம் அடியார்கள் நடுவிருக்கப்

பண்ணி நம் சென்னியின் மேல் பத்மபாதம் பதித்திடவே.


இப்பொழுது மலர்ந்த கருங்குவளைப்பூவைப் போன்ற கண்களை உடைய நம் அன்னையும் சிவந்த அவளது கணவரும் (நாம் செய்த நல்வினைக்காக மட்டும் இல்லாமல் கருணை கொண்ட காரணத்தால் ) இணைந்து, நம்மை ஆண்டு அருள்வதற்காக விரும்பி, நாமிருக்கும் இடமான இங்கே வந்து தம் அடியவர்களின் கூட்டத்தின் நடுவே நம்மை இருக்கும்படி அருள் செய்து நம் தலையின் மேல் தங்களின் தாமரைத் திருவடிகளை நிலையாக நிறுத்தி இருக்கிறார்கள். ஆகா, இந்த பாக்கியம் கிட்டுவதற்கு என்ன புண்ணியம் செய்திருக்கிறாய் மனமே !.42. இடங்கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, இளகி, முத்து

வடங்கொண்ட கொங்கை மலைகொண்டு, இறைவர் வலிய நெஞ்சை

நடங்கொண்ட கொள்கை நலங்கொண்ட நாயகி நல்லரவின்

படங்கொண்ட அல்குல் பனிமொழி வேதப் பரிபுரையே.


அம்மையே! உன்னுடைய தனங்கள் ஒன்றுக்கொன்று இடமின்றி பருத்து மதர்த்திருக்கின்றது. தளர்ச்சியின்றிச் செழித்தும் குழைந்தனவுமான கொங்கைகளாகிய மலைகளின் மீது அழகிய முத்துமாலையை அணிந்து, சிவபெருமானின் வலிமை பொருந்திய மனத்தை எண்ணியபடியெல்லாம் ஆட்டி வைக்கும் உறுதியையும் அதற்கேற்ற பேரெழிலையும் கொண்டவள் நீ. அபிராமி சுந்தரியே! நல்ல பாம்பின் படம் போன்ற அல்குலை உடையவளே! குளிர்ச்சியான மொழிகளையுடையவளே! வேதச் சிலம்புகளைத் திருவடிகளில் அணிந்து கொண்டவளே! தாயே! கொள்கை - பிள்ளைகளுக்கு அருள் செய்யும் கொள்கை


43. பரிபுரச் சீறடிப்! பாசாங்குசை! பஞ்சபாணி! இன்சொல்

திரிபுர சுந்தரி சிந்துர மேனியள் தீமைநெஞ்சில்

புரிபுர வஞ்சரை அஞ்சக் குனிபொருப்புச் சிலைக்கை

எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே.


சிலம்பணிந்த அழகிய பாதங்களை உடையவளே! பாசத்தையும் அங்குசத்தையும் உடையவளே! பஞ்ச பாணங்களையும், இனிமையான சொல்லையுமுடைய திரிபுர சுந்தரியே! எரியும் நெருப்பினை ஒத்த சிவந்த மேனியை உடையவளே! கொடிய மனத்தையுடைய முப்புரத்தை ஆண்ட அசுரரை அஞ்சி நடுங்கும்படி முப்புரத்தை அழித்த சிவபெருமானின் இடப்பாகத்தில் அமர்ந்தவளே! பரிபுரம் : சிலம்பு; குனித்தல் : வளைத்தல் ;44. தவளே! இவள் எங்கள் சங்கரனார் மனைமங்கலமாம்

அவளே, அவர்தமக்கு அன்னையும் ஆயினள்; ஆகையினால்

இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியுமாம்

துவளேன் இனியொரு தெய்வமுண்டாக மெய்த்தொண்டு செய்தே.


தவளே : இருந்தவளே / இருந்த அவளே; பெரியவளே! (அவளே) எங்கள் இறைவனாகிய சங்கரனின் இல்லத் துணைவியாய் இல்லத்திற்கு நன்மையைச் சேர்ப்பவளே! அவருக்கே அன்னையாகவும் ஆனவளே! (அன்னை ஆதிப்பரம்பொருள்; அவளே மும்மூர்த்திகளையும் படைத்து அவர்கள் முத்தொழில்களையும் செய்ய பணிக்கிறாள். ஒரே நேரத்தில் அன்னை சங்கரனாருக்கு மனைவியாகவும் பரமசிவத்தை ஈன்ற பராசக்தியாகவும் இருக்கிறாள்.) ஆகையால் நீயே யாவர்க்கும் மேலானவள்! ஆகவே, உனக்கே இனி உண்மையான தொண்டு செய்வேன். ஆதலால், இனி மேல் வேறு தெய்வங்களைத் தொழுது தொண்டு செய்து அயர்ச்சி அடையமாட்டேன்.45. தொண்டு செய்யாது நின் பாதம் தொழாது, துணிந்திச்சையே

பண்டு செய்தார் உளரோ? இலரோ? அப்பரிசு அடியேன்

கண்டு செய்தால் அது கைதவமோ? அன்றிச் செய்தவமோ?

மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே; பின் வெறுக்கை அன்றே.


அன்னையே! உனக்கு பணிவிடை செய்யாமல், உன் பாதங்களை வணங்காமல், உன்னுடைய இச்சைவழி வந்த கடமைகளை செய்த ஞானிகளும் உளர். அவர்களின்படி நான் நடந்தால் நீ வெறுப்பாயோ, அல்லது பொறுத்து அருள் செய்வாயோ, எனக்குத் தெரியாது! ஆயினும், நான் தவறே செய்தாலும், என்னை வெறுக்காமல் பொறுத்துக் கொண்டு நீ அருள் பண்ணுவதே நீதியாகும்.

கடமை மட்டுமே தவறாமல் செய்தால் போதும்; இறைவியை வணங்கத் தேவையில்லை - என்று கர்ம மீமாம்சை வழி நின்றவர்கள் முன்னொரு காலத்தில் இருந்தார்கள். அவர்கள் உன் அருள் பெற்று நிலையான வாழ்வு அடைந்தார்களா இல்லையா ... அதனை நான் அறியேன். அவர்கள் நற்கதி அடைந்தார்கள் என்றால் அவர்களை போல் அடியேனும் என் இச்சைக்குரிய செயல்களை செய்தால் அது வஞ்சகமாகுமா? அல்லது அந்த மெய்ஞ்ஞானியர்களைப் போல் என் செயல்கள் எல்லாம் நான் செய்யும் தவமாகுமா?

இச்சை என்ற கைதவம் என்றால் வஞ்சனை, பொய், சூது; செய்தவம் என்றால் செய்கின்ற தவம், தவம் செய்தல்; செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும் (அவ்வையார் இயற்றிய கொன்றை வேந்தன்) : தவம் செய்வதை விட்டு விட்டால் அறியாமை (கைதவம்) ஆட்கொண்டு விடும்.
35 views0 comments

Recent Posts

See All

அபிராமி பதிகம் 11

ராகம் : மத்தியமாவதி தாளம்: கண்டசாபு மிகையுந் துரத்த வெம் பிணியுந் துரத்த வெகுளி யானதுந் துரத்த மிடியுந் துரத்த நரை திரையும் துரத்த மிகு வேதனைகளுந் துரத்த பகையுந் துரத்த வஞ்சனையுந் துரத்த பசி யென்ப

அபிராமி பதிகம் 10

விருத்தம் ராகம் : மனோலயம் கருநீல வடிவமார் மாடேறி உத்தண்ட கனதண்ட வெம் பாசமுங் கைக்கொண்டு சண்டமா காலன்முன் எதிர்க்கமார்க் கண்டன் வெருண்டு நோக்க இரு நீலகண்ட னெனும் நின்பதியை உள்ளத்தில் இஆன்ப

அபிராமி பதிகம் 9

விருத்தம் ராகம் : திலங் எனது இன்னல் இன்னபடியென்று வேறொருவர்க்கு இசைத்திடவும் அவர்கள் கேட்டு இவ் வின்னல் தீர்த்து உள்ளத்துஇரங்கி நன்மைகள் செயவும் எள்ளளவு(ம்) முடியாது நின் உ(ன்)னத மருவுங் கடைக் கண

bottom of page