ராகம் : நாயகி
46. வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம் அடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியதன்றே; புது நஞ்சைஉண்டு
கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்துபொன்னே!
மறுக்கும் தகைமைகள் செய்யினும், யான் உன்னை வாழ்த்துவேனே!
வெறுக்கும் செயல்களைச் செய்துவிட்டாலும் தம் அடியவர்களை பெரியவர்கள் பொறுத்துக் கொள்ளும் செயல் புதியது இல்லையே. அப்போதே தோன்றிய ஆலால விடத்தை உண்டு அதனால் கறுக்கும் திருத்தொண்டையை உடைய சிவபெருமானின் இடப்பாகத்தில் கலந்த பொன்மகளே! நான் தகாத வழியில் செல்பவன்; ஆயினும் யான் உன்னை எப்போதும் வாழ்த்துவேனே.
47. வாழும்படி ஒன்று கண்டு கொண்டேன் மனத்தே ஒருவர்
வீழும்படி அன்று, விள்ளும் படி அன்று, வேலைநிலம்
ஏழும் பருவரை எட்டும் எட்டாமல் இரவுபகல்
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே.
அழிவற்ற இன்பத்தில் வாழும்படியாக ஒரு பரம்பொருளை மெய்ஞ்ஞானத்தால் அறிந்துகொண்டேன். அந்த வழியைக் கண்டவர் யாரும் அழிவதில்லை. அந்த வழியைக் கண்டவர்கள் மற்றவர்களுக்கு அதனைச் சொல்லுவதும் எளிதில்லை. கடலால் சூழப்பட்ட ஏழு தீவுகளும் எட்டு உயர்ந்த மலைகளும் எட்டாமல் (அப்பாலுக்கு அப்பாலாய்) இரவில் வரும் நிலவென்னும் சுடர், பகலில் வரும் பகலவன் என்னும் சுடர் இவ்விரண்டு சுடர்களிலும் ஒளியாக நின்று சுடர்கின்றது அந்தப் பேரொளி.
48. சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப்
படரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதிந்து நெஞ்சில்
இடரும் தவிர்த்து இமைப்போது இருப்பார் பின்னும் எய்துவரோ;
குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே.
சுடர் வீசும் நிலாத்துண்டு தங்கி வாழும் சடைமுடியை உடைய சிறு குன்று போன்ற சிவபெருமானின் மேல் ஒன்றிப் படர்கின்ற மணம்வீசும் பச்சைக் கொடியைப் போன்ற அம்மையை மனத்தில் நிலையாகக் கொண்டு இன்ப துன்பங்கள் என்ற இடர்களைத் தவிர்த்து இமைப்பொழுதாகிலும் தியானத்தில் இருப்பார் குடலும் இறைச்சியும் குருதியும் தோயும் இந்த உடம்பை மீண்டும் எய்துவார்களா? மாட்டார்கள்.
துன்றும் - தங்கும்
49. குரம்பை அடுத்துக் குடிபுக்க ஆவி வெங்கூற்றுக்கிட்ட
வரம்பை அடுத்து மறுகும் அப்போது வளைக்கை அமைத்து
அரம்பை அடுத்த அரிவையர் சூழவந்து அஞ்சல்என்பாய்;
நரம்பை அடுத்த இசைவடிவாய் நின்ற நாயகியே.
உடலை அடிப்படையாகக் கொண்டு அதனில் குடிவந்த உயிர் வெம்மையுடைய கூற்றுவன் (யமன்) வரும் கால அளவினை அடையும் போது வளையல்கள் அணிந்த உன் திருக்கரங்களை அசைத்து அரம்பையைப் போன்ற பெண்கள் சூழ வந்து அஞ்சாதே என்று கூறுவாய் நரம்பைக் கொண்டு இசை எழுப்பும் வீணையைப் போன்ற இசைக்கருவிகளின் இசை வடிவாய் நிற்கும் தலைவியே.
50. நாயகி; நான்முகி; நாராயணி; கை நளின பஞ்ச
சாயகி; சாம்பவி; சங்கரி; சாமளை; சாதிநச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி; மாதங்கி என்று
ஆய கியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே.
அம்மையின் திருப்பெயர்கள் பலவற்றைக் கூறி அவளைத் துதித்து அவள் திருவடிகளே நமக்குக் காவல் என்கிறார்.
உலகனைத்துக்கும் தலைவி; நான்முகனான பிரம்மதேவரின் சக்தி; நாராயணனின் சக்தி; தாமரை போன்ற திருக்கரங்களில் ஐந்து மலரம்புகளைத் தாங்கியவள்; சம்புவான சிவபெருமானின் சக்தி; இன்பம் அருள்பவள்; பச்சை வண்ணமுடையவள்; கொடும் விஷத்தை வாயில் கொண்ட பாம்பை அணிந்தவள்; பலவிதமான மாலைகளை அணிந்தவள்; உலகங்கள் காக்கும் வராக ரூபிணி; திரிசூலம் ஏந்தியவள்; மதங்க முனிவரின் திருமகள்; என்று பலவித புகழ்களை உடையவளின் திருப்பாதங்கள் நமக்கு காவலாகும். அகி : பாம்பு ;