அபிராமி அந்தாதி 51-55

51. அரணம் பொருள் என்றருள் ஒன்றிலாத அசுரர் தங்கள் முரண்அன்றழிய முனிந்த பெம்மானும், முகுந்தனுமே சரணம் சரணம் எனநின்ற நாயகி தன் அடியார் மரணம், பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே.

திரிபுரத்தை நிலையென்று நினைத்த இரக்கத் தன்மையற்ற அசுரர்களை அழித்த சிவபெருமானும் திருமாலும் வணங்கக்கூடிய அபிராமியே! அன்னையே! உன்னையே சரணம் சரணம் என்று அண்டிய அடியார்கள் பிறப்பு இறப்பு என்ற இரண்டையும் இவ்வுலகில் அடையமாட்டார்கள்! அவர்கள் பொய்மையான உலக வாழ்வினின்றும் விடுபட்டு பெருநிலை அடைவர்.


52. வையம், துரகம், மதகரி, மாமகுடம், சிவிகை பெய்யும் கனகம், பெருவிலை ஆரம், பிறைமுடித்த ஐயன் திருமனையாள் அடித்தாமரைக்கு அன்பு முன்பு செய்யும் தவம் உடையார்க்கு உளவாகிய சின்னங்களே.

பிறையணிந்த சிவபெருமானின் துணைவியாகிய உன்னிடம் அன்பு கொண்டு தவம் செய்யும் அடியார்களுக்கு சின்னமாக திகழ்வது தேர், குதிரை, மதம் மிக்க யானை, பெரிய கிரீடம், பல்லக்கு, பிற மன்னர்கள் திறையாக வழங்கும் பொன், மிக்க விலையுடைய பொன் மாலை முதலியவைகள். ஸாம்ராஜ்யதாயினியான தேவியை முற்பிறப்பில் வழிபட்டவர்கள் இந்த பிறப்பில் எல்லா நலன்களையும் பெற்ற சக்கரவர்த்திகளாய் திகழ்வார்கள் என்பது கருத்து. வையம் : தேர்.


53. சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும், பென்னம் பெரிய முலையும் முத்தாரமும் பிச்சிமொய்த்து கன்னங்கரிய குழலும் கண் மூன்றும் கருத்தில் வைத்துத் தன்னந்தனி இருப்பார்க்கு இது போலும் தவமில்லையே.

ஏ, அபிராமி! உன் சிற்றிடையில் சாத்தப்பட்ட செம்மையான பட்டாடையும், அழகிய பெரிய நகில்களின் மேல் அணிந்த முத்தாரமும், வண்டுகள் மொய்க்கும் பிச்சிப்பூவை சூடிய கன்னங்கரிய குழலும், மூன்று திருக்கண்களையும் கருத்திலே கொண்டு தியானித்திருக்கும் அடியார்களுக்கு இதைவிடச் சிறந்த தவம் ஏதுமில்லை.


54. இல்லாமை சொல்லி ஒருவர் தம்பால்சென்று இழிவுபட்டு நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடுதவம் கல்லாமை கற்ற கயவர்தம்பால் ஒரு காலத்திலும் செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.

ஏ, வறிஞர்களே! நீங்கள் வறுமையால் பாதிக்கப்பட்டு, ஒருவரிடத்திலே பொருளுக்காகச் சென்று, அவர்கள் உங்களை இழிவு படுத்தாமல் இருக்க வேண்டுமானால், தவத்தையே செய்யாத பழக்கமுடைய கயவர்களிடத்திலிருந்து என்னைத் தடுத்தாட் கொண்ட முப்புர நாயகியின் பாதங்களையே சேருங்கள்.


55. மின்னாயிரம் ஒரு மெய்வடிவாகி விளங்குகின்றது அன்னாள்; அகமகிழ் ஆனந்தவல்லி; அருமறைக்கு முன்னாய் நடுஎங்குமாய் முடிவாய முதல்விதன்னை உன்னாது ஒழியினும் உன்னினும் வேண்டுவது ஒன்று இல்லையே. அபிராமி! நீ ஆயிரம் மின்னல்கள் சேர்ந்தாற் போன்ற வடிவுடையவள்!

தன்னுடைய அடியவர்களுக்கு அகமகிழ்ச்சி தரக்கூடிய ஆனந்த வல்லி! அருமையான வேதத்திற்கு தொடக்கமாகவும் நடுவாகவும், முடிவாகவும் விளங்கும் முதற் பொருளானவள்! உன்னை மானிடர் நினையாது விட்டாலும், நினைத்திருந்தாலும், அதனால் உனக்கு ஆகக்கூடிய பொருள் ஒன்றும் இல்லையே!

10 views0 comments

Recent Posts

See All

96. கோமளவல்லியை, அல்லியந் தாமரைக் கோயில் வைகும் யாமள வல்லியை, ஏதம் இலாளை, எழுதரிய சாமள மேனிச் சகலகலா மயில்தன்னை, தம்மால் ஆமளவும் தொழுவார், எழு பாருக்கும் ஆதிபரே. இளமையும் மென்மையும் கொண்ட கொடி போன்ற எ

91. மெல்லிய நுண் இடை மின் அனையாளை விரிசடையோன் புல்லிய மென் முலைப் பொன் அனையாளை, புகழ்ந்து மறை சொல்லியவண்ணம் தொழும் அடியாரைத் தொழுமவர்க்கு, பல்லியம் ஆர்த்து எழ, வெண் பகடு ஊறும் பதம் தருமே. அபிராமித் தே

86. மால் அயன் தேட, மறை தேட, வானவர் தேட நின்ற காலையும், சூடகக் கையையும் கொண்டு, கதித்த கப்பு வேலை வெங் காலன் என்மேல் விடும்போது, வெளி நில் கண்டாய் பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே. பாலையும்,