top of page

அபிராமி அந்தாதி 6-10

Updated: Mar 26



ராகம் : பிலஹரி


சென்னியது, உன் பொன் திருவடித் தாமரை. சிந்தையுள்ளே

மன்னியது, உன் திரு மந்திரம் - சிந்துர வண்ணப் பெண்ணே

முன்னியநின் அடியாருடன் கூடி முறை முறையே

பன்னியது என்றும் உந்தன் பரமாகம பத்ததியே.


செந்நிற திருமேனியுடைய அபிராமித் தாயே! என்றும் என் தலைமேல் இருக்கக்கூடியது, நின் பொலிவு பெற்ற தாமரை மலர் போன்ற திருவடியே! என்றும் என் சிந்தையுள்ளே நிலை பெற்று இருக்கக் கூடியது நின் திருமந்திரமே! (மனத்தால் நின் திருவடியையே சிந்திப்பேன்.) செந்தூர நிறமுடைய அழகிய தேவி, நான் இனி என்றும் கலந்திருப்பது நின்னையே மறவாது தொழும் அடியார்களையே! (வாக்காலும் உன்னை துதிப்பேன்.) நான் தினந்தோறும் பாராயணம் செய்வது, உன்னுடைய மேலான ஆகம நெறியையே! (உடலாலும் உன்னையே வணங்குவேன்.)



7. ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி தளர்வு இலது ஓர்

கதியுறுவண்ணம் கருது கண்டாய் கமலாலயனும்,

மதியுறுவேணி மகிழ்நனும், மாலும், வணங்கி, என்றும்

துதியுறு சேவடியாய் சிந்துரானன சுந்தரியே.


தாமரை மலரில் உதித்து அதை இருக்கையாக கொண்ட பிரம்மனும், சந்திரனை திருமுடியில் தரித்த உன் கணவனான சிவபெருமானும் திருமாலும் வணங்கிப் போற்றுகின்ற சிவந்த பாதங்களுடன் செந்தூரத் திலகம் கொண்டு விளங்கும் பேரழகானவளே! தயிரைக் கடையும் மத்துப் போன்று உலகில் பிறப்பு இறப்பு என்று சுழன்று திரியும் என் உயிர் வருந்தாமல் தளர்ச்சி இல்லாததாகிய நல்லதொரு மோட்ச கதியை அடைய அருள் புரிவாயாக!



8. சுந்தரி எந்தை துணைவி, என் பாசத்தொடரை எல்லாம்

வந்து அரி சிந்துர வண்ணத்தினாள், மகிடன் தலைமேல்

அந்தரி, நீலி, அழியாத கன்னிகை, ஆரணத்தோன்

கம் தரி கைத்தலத்தாள்-மலர்த்தாள் என் கருத்தனவே


என் அபிராமி அன்னையே பேரழகானவள். அவள் என் தந்தை சிவபெருமானின் துணைவி. என்னுடைய அகம், புறமாகிய அனைத்து பந்த பாசங்களையும் போக்கக் கூடியவள். செந்நிறத் திருமேனியாள். அன்றொரு நாள் சாமுண்டியாக மகிஷாசுரனின் சிரத்தின் மேல் நின்று, அவனை வதம் செய்தவள் (அகந்தையை அழித்தவள்). நீல நிறமுடைய நீலி (காளி); என்றும் கன்னியானவள். தன்னுடைய கையில் பிரம தேவனுடைய கபாலத்தைக் கொண்டிருப்பவள். அவளுடைய மலர்த்தாளையே என்றும் என் கருத்தில் கொண்டுள்ளேன்.



9. கருத்தன எந்தைதன் கண்ணன,வண்ணக் கனகவெற்பின்

பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேர் அருள்கூர்

திருத்தன பாரமும், ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்,

முருத்தன மூரலும், நீயும், அம்மே வந்து என்முன் நிற்கவே.


அபிராமித்தாயே! என் தந்தை சிவபெருமானின் கருத்திலும், திருவிழிகளிலும் நின்று விளங்கி பொன் மலையென மதர்த்து நிற்பது நின் திருமுலையே ஆகும். நீ உயிர்களிடத்தில் கொண்டு இருக்கும் பரிவைக் காட்டுவதான திருமுலைகள் அமுதப் பிள்ளையாகிய ஞானசம்பந்தருக்கு பால் நல்கின. இப்படிப்பட்ட அருள்மிக்க கனமான கொங்கையும், அதில் விளங்கக் கூடிய ஆரமும், சிவந்த கைகளில் விளங்கும் வில்லும் அம்பும், சிவந்த இதழ் நகையோடு நின் பூரண திருக்கோலமுடன் என் முன் காட்சியருள வேண்டும். செங்கைச் சிலை - சிவந்த கைகளில் விளங்கும் வில் ; மூரல் : மனம் மகிழ்ந்து முகம் மட்டும் மலர்வது முறுவல். அந்த முறுவலில் ஓரளவு வாய் திறந்து இலேசாகப் பல் தெரிய முறுவல் காட்டுவது மூரல். முருத்தன– மென்மையான, அல்லது , கல்யாண முருக்கம்பூ போன்ற சிவந்த உதடுகளில்; முருத்தன மூரல் - பூவின் மொட்டு அவிழ்வதைப் போல் இருக்கும் உன் அழகிய புன்னகை;



10. நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை,

என்றும் வணங்குவது உன் மலர்த் தாள் எழுதாமறையின்

ஒன்றும் அரும்பொருளே அருளே உமையே இமயத்து

அன்றும் பிறந்தவளே அழியா முத்தி ஆனந்தமே.


நான் நின்றாலும், இருந்தாலும், கிடந்தாலும், எந்நிலையில் இருப்பினும் நின்னையே நினைத்து தியானிக்கின்றேன். நான் வணங்குவதும் நின் மலர் போன்ற பாதங்களையே ஆகும். உணர்தற்கரிய பெருமை வாய்ந்த வேதப் பொருளில் ஒன்றிய பொருளே! அறிதற்கரிய பொருளே! அருளே உருவான உமையே! அக்காலத்தில் இமயமலையில் பிறந்தவளே! என்றும் அழியாத முக்தி ஆனந்தமாக விளங்குபவளே!


அபிராமி அந்தாதி பாடல்களை இங்கே கற்கவும்.

72 views0 comments

Recent Posts

See All

அபிராமி அந்தாதி 96-100

ராகம் : மத்யமாவதி 96. கோமளவல்லியை, அல்லியந் தாமரைக் கோயில் வைகும் யாமள வல்லியை, ஏதம் இலாளை, எழுதரிய சாமள மேனிச் சகலகலா மயில்தன்னை,...

அபிராமி அந்தாதி 91-95

ராகம் : சுருட்டி 91. மெல்லிய நுண் இடை மின் அனையாளை விரிசடையோன் புல்லிய மென் முலைப் பொன் அனையாளை, புகழ்ந்து மறை சொல்லியவண்ணம் தொழும்...

அபிராமி அந்தாதி 86-90

ராகம் : சாரங்கா 86. மால் அயன் தேட, மறை தேட, வானவர் தேட நின்ற காலையும், சூடகக் கையையும் கொண்டு, கதித்த கப்பு வேலை வெங் காலன் என்மேல்...

bottom of page