ராகம் : ஸஹானா
66. வல்லபம் ஒன்று அறியேன், சிறியேன், நின் மலரடிச் செம் பல்லவம் அல்லது பற்று ஒன்று இலேன், பசும் பொற் பொருப்பு வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய். வினையேன் தொடுத்த சொல் அவமாயினும், நின் திரு நாமங்கள் தோத்திரமே.
பசுமையான பொன்மலையை வில்லாக உடைய சிவபிரானின் இடப்பாகத்தில் அமர்ந்தவளே! நான் பெரிய செயல் திறன் படைத்தவன் அல்ல. மிகவும் சிறியவன். சிவந்த தளிர் போன்ற நின் மலர்ப்பாதத் துணையன்றி வேறொரு பற்றுமில்லாதவன். ஆகையால் தீவினைகள் பல செய்த பாவியாகிய இருக்கும் நான் உன்னைப் பாடிய பாடலில் சொற் குற்றங்கள் இருப்பினும், தாயே! நீ தள்ளி விடுதல் ஆகாது. ஏனெனில், அது உன்னைப் பாடிய தோத்திரங்களேயாகும். வல்லபம் = திறமை; பல்லவம் = தளிர். .
67. தோத்திரம் செய்து, தொழுது, மின் போலும் நின் தோற்றம் ஒரு மாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர் வண்மை, குலம், கோத்திரம், கல்வி, குணம், குன்றி, நாளும் குடில்கள் தொறும் பாத்திரம் கொண்டு பலிக்கு உழலா நிற்பர் பார் எங்குமே.
அன்னையே! அபிராமி! உன்னையே பாடி, வணங்காமல், மின்னல் போன்ற ஒளியுடைய நின் தோற்றத்தை ஒரு கணம் கூட மனதில் நினையாதவர்கள் கொடைக்குணம், சிறந்த குலம், கல்வி, நற்பண்பு இவையெல்லாம் குன்றி, வீடு வீடாகச் சென்று, ஓடேந்தி உலகெங்கும் பிச்சை எடுத்துத் திரிவர். வண்மை = வள்ளல்தன்மை
68. பாரும், புனலும், கனலும், வெங் காலும், படர் விசும்பும், ஊரும் முருகு சுவை ஒளி ஊறு ஒலி ஒன்றுபடச் சேரும் தலைவி, சிவகாம சுந்தரி, சீறடிக்கே சாரும் தவம், உடையார் படையாத தனம் இல்லையே.
சிவத்தின்பால் பெரும் காதலுற்றுப் என்றும் பிரியாதுறையும் சுந்தரியே! நீ பிரபஞ்சம், நீர் , நெருப்பு, காற்று, எங்கும் படர்ந்திருக்கும் ஆகாயம் என்ற ஐவகைப் பூதங்களாகவும், சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற அவைகளின் தன்மையாகவும் நிற்கக் கூடியவள். உன்னுடைய செல்வம் பொருந்திய திருவடிகளைச் சார்ந்தவர்கள் சிறந்த தவத்தைப் பெறுவர். அத்துடன் அவர்கள் அடையாத செல்வமும் இல்லை எனலாம் (எல்லாச் செல்வமும் பெறுவர்).
69. தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வு அறியா மனம் தரும், தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே கனம் தரும் பூங் குழலாள், அபிராமி, கடைக்கண்களே,
மேகம் போலும் அடர்ந்த கூந்தலையுடையவளே! நின்னுடைய அருள் பெருக்கும் கடைக்கண்களை வணங்கினாலே போதும். அக்கண்களே அடியார்களுக்குச் சிறந்த செல்வத்தைத் தரும். நல்ல கல்வி தரும். சோர்வடையாத மனத்தைத் தரும். தெய்வீக அழகைத் தரும். நெஞ்சில் வஞ்சம் கலவாத (உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத) உறவினர்களைத் தரும். உன்னிடமும் எல்லோரிடமும் அன்புடன் இருக்கும் அன்பர்களுக்கு எல்லா பெருமையையும் எல்லா நல்லனவைகளையும் தரும்.
70. கண்களிக்கும்படி கண்டுகொண்டேன், கடம்பாடவியில் பண் களிக்கும் குரல் வீணையும், கையும் பயோதரமும், மண் களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி, மதங்கர்க்குலப் பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டிதன் பேரழகே.
அபிராமி தாயே ! உன்னை என் கண்கள் ஆனந்தத்தில் திளைக்குமாறு கண்டு கொண்டேன். கடம்ப வனமாகிய மதுரையில் உறைந்த அபிராமி அன்னையே! நின் பேரழகைக் கண்டு கொண்டேன். இசை விரும்பி உறைகின்ற குரல், வீணை தாங்கிய அழகிய கரங்கள், திருமுலை தாங்கிய திருமார்பு, மண்மகள் மகிழும் பச்சை நிறம் - இவைகளெல்லாம் கொண்ட மதங்கர் எனும் குலத்தில் தோன்றிய பேரழகானவளே! உன்னைக் கண்டு கொண்டேன். (பிரம்மாவின் குமாரனாகிய மதங்க முனிவரின் மகளும், இசை, மற்றும் எல்லா கலைகளிலும் சிறந்தவளான சரஸ்வதியின் வடிவம்).