ராகம் : பூபாளம்
தாரமர் கொன்றையும் சண்பகமாலையும் சாத்தும் தில்லை
ஊரார் தம் பாகத்து உமைமைந்தனே! உலகு ஏழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதியே! நிற்க கட்டுரையே.
கொன்றைப்பூ மாலையும், சண்பக மாலையும் அணிந்து நிற்கும் தில்லை வாழ் அம்பலவாணனுடைய வாம பாகத்தில் உறைந்திருக்கும் உமையின் மைந்தனே! மேகம் போன்ற கருநிற மேனியை உடைய பேரழகு விநாயகரே! ஏழுலகையும் பெற்ற சீர் பொருந்திய அபிராமித் தாயின் அருளையும், அழகையும் எடுத்துக்கூறும் இப்பிரபந்தத்திற்கு ஏற்ற சொற்பொருள்கள் உள்ளத்துள்ளே தோற்றுவிக்க எப்பொழுதும் என் சிந்தையுள்ளே உறைந்து அருள் புரிவாயாக. கட்டுரைத்தல் – பொருந்தும்படி திருவாய் மலர்ந்தருளுதல்; தம் உள்ளத்துள்ளே நின்று சொற்பொருள்களைத் தோற்றுவிக்க வேண்டுமென்று பிரார்த்திக்கிறார் அபிராமி பட்டர்.
கொன்றை சிவபெருமானுக்கும் சண்பகம் அம்பிக்கைக்கும் உரிய மலர்கள்.
உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக்குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழுத்துணையே.
பொருள்: உதய சூரியனின் செம்மையான கதிரைப் போலவும், நெற்றியின் மையத்திலிடுகின்ற சிந்தூரத் திலகமும், ஞானம் கைவரப் மெய்ஞ்ஞானம் பெற்றவர்கள் மதிக்கின்ற மாணிக்கமும், மாதுளை மலரும், தாமரை மலரில் தோன்றிய திருமகள் துதி செய்கின்ற மின்னற் கொடியும், மென் மணம் வீசும் குங்குமக் குழம்பும் ஆகிய அனைத்தையும் போன்றதென்று நூல்கள் யாவும் பாராட்டிக் கூறும் திருமேனியைக் கொண்ட அபிராமி அன்னையே எனக்கு எவ்விடத்தும் எக்காலத்தும் துணையாவாள். உணர்வுடையோர் – பக்தியிலும், அன்பிலும், அறிவிலும், ஞானத்திலும் சிறந்தவர்; மென்கடி- மென்மையான வாசனை வீசும்;
துணையும் தொழும் தெய்வமும், பெற்றதாயும் சுருதிகளின்
பணையும், கொழுந்தும் பதி கொண்டவேரும் பனிமலர்பூங்
கணையும், கருப்புச்சிலையும், மென்பாசாங்குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே.
பொருள்: அபிராமி அன்னையை நான் அறிந்து கொண்டேன். அவளே எனக்குத் துணையாகவும், தொழுகின்ற தெய்வமாகவும், பெற்ற தாயாகவும் விளங்குகின்றாள். அவளே வேதமென்னும் விருட்சத்தின் கிளையும், அதன் முடிவிலுள்ள கொழுந்தும், கீழே பரவிப் பதிந்துள்ள அதன் வேரும், குளிர்ச்சி பொருந்தியவையான மலரம்புகள், கரும்பு வில், மென்மைமிகு பாசாங்குசம் ஆகியவற்றைத் திருக்கரத்தில் ஏந்தி நிற்கும் திரிபுரசுந்தரி என்னும் உண்மையை நான் உணர்ந்து கொண்டேன்.
தொழும் தெய்வம் என்பது குருவின் மூலமாக மந்திர தீட்சை பெற்று அதைத் தொடர்ந்து நடைமுறைபடுத்தும் உபாசனை தெய்வத்தை குறிக்கும். சுருதிகளின் கொழுந்து என்பது வேதாங்கம் ஆகும். ‘பதிகொண்ட வேரும்’ -- பதி என்ற சொல்லானது சைவ சித்தாந்தத்தில் பரம்பொருளான சிவத்தை குறிப்பதாகும். அந்த பரம்பொருளுக்கே சக்திதான் ஆதாரம். சிவனான வேத மரத்தின் கிளை, கொழுந்து, இலை, மற்றும் வேராக பதிபொருளுக்கு அடிப்படையான உமையம்மை திகழ்கின்றாள்.
‘பனிமலர் பூங்கணை’ என்பது மன்மதன் வைத்திருக்கும் மலர் கணைகளான அம்புகள். அவனை தன் அழகினால் வென்றவள் அபிராமி. காமன் உமையிடம் சரணடைந்து தன் ஆயுதங்களான கரும்பு வில்லையும், மலர் கணையையும், மென்மையான பாசத்தையும், அங்குசத்தையும், அவளிடம் ஒப்படைத்தான். மென் பாசம் என்பது கயிறாகப் பயன்படும் மென்மையான மலர் கொடி.
அறிந்தேன் எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன் உனது திருவடிக்கே, திருவே! வெருவிப்
பிரிந்தேன் நின்அன்பர் பெருமைஎண்ணாத கரும நெஞ்சால்
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே.
பொருள்: அருட்செல்வம் மிக்க திருவே! வேறொருவரும் அறிய முடியாத ரகசியத்தை நான் அறிந்து, அதன் காரணமாக உன் திருவடிகளை அடைந்தேன். உன் அடியவர்களின் பெருமையை உணரத் தவறிய நெஞ்சத்தின் காரணமாக நரகலோகத்தின் தொடர்பு கொண்ட மனிதரைக் கண்டு அஞ்சி விலகிக்கொண்டேன். இனி நீயே எனக்கு த் துணை.
அருட்செல்வத்தை அன்பர்களுக்கு வழங்கும் அபிராமியே! நின் பெருமையை உணர்த்தும் அடியார்களின் கூட்டுறவை நாடாமல் தீவினை மிக்க நான் நரகத்தில் வீழ்ந்த மனிதரையே நாடிக் கொண்டிருந்தேன். இப்பொழுது நான் எவரும் அறியாத வேதப் பொருளை தெரிந்து கொண்டு தீயவழி மக்களை பிரிந்து உன் திருவடியிலேயே இரண்டறக் கலந்து விட்டேன். இனி நீயே எனக்குத் துணையாவாய்.
மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றைவார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும், பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என்புந்தி எந்நாளும் பொருந்துகவே.
பொருள்: மனிதர்களும் தேவர்களும் பெருமைமிக்க முனிவர்களும் வந்து தலை தாழ்த்தி வணங்கிப் போற்றும் செம்மையாகிய திருவடிகளையும் மெல்லியல்பும் கொண்ட கோமளவல்லி அன்னையே! தன்னுடைய நீண்ட சடாமுடியில் கொன்றையும், குளிர்ச்சி தரும் இளம் சந்திரனையும் மற்றும் பாம்பையும் கங்கையையும் கொண்ட தூயோனாம் சிவபிரானும் நீயும் என் சிந்தையை விட்டு எந்நாளும் இடையறாது பொருந்தி இருப்பீர்களாக!
பொருந்திய முப்புரை! செப்புரை செய்யும் புணர்முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி! வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை! அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம்என் சென்னியதே.
பொருள்: அபிராமி அன்னையே! உயிர்களிடத்திலே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூவகை நிலைகளிலும் நிறைந்து இருப்பவளே! செப்பை உவமையாக சொல்லும் இணந்த தனங்களின் பாரம் தாங்காது வருந்தும் வஞ்சிக் கொடியைப் போன்ற மெல்லிடையைக் கொண்ட மனோன்மணியும் (மனோன்மணி: மனத்தை ஞானநிலைக்கு எழுப்புபவள். புருவமத்திக்கு மேலே பிரமரந்திரத்திற்குக் கீழ் உள்ள எண்வகை நிலைகளில் இறுதிநிலை உன்மனி அல்லது மனோன்மணி ஆகும்.) நீள் சடைகொண்ட சிவபிரான் உண்ட நஞ்சைக் கழுத்தளவில் நிறுத்தி அமுதமாக்கிய அம்பிகையும், அழகிய தாமரை மலரின்மேல் அமர்ந்தருளும் சுந்தரியும், அந்தரியும் ஆன உன் பொன்னடி என் தலையின் மீது பொருந்தியுள்ளது. அதை நான் வணங்குகிறேன்.
முப்புரை : திரிபுர அசுரர்களின் முந்நகரங்களுக்கும் இறைவி; பிங்கலை, இடகலை, சூழுமுனை என்ற மூன்று நாடிகளிலும் இருப்பவள்; மனம், புத்தி, சித்தம் மூன்றிலும் உறைபவள்; முத்தேவர்களாகி இருப்பவள்; முச்சக்தியான இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி ரூபிணி என்றும் பொருள் கொள்ளலாம்.