top of page

அபிராமி பதிகம் - விருத்தம் 1

Updated: Nov 28, 2022


காப்பு ராகம் : நாட்டை


தூயதமிழ்ப் பாமாலை சூட்டுதற்கு மும்மதன்நால்

வாய்ஐங் கரன்றாள் வழுத்துவாம் - நேயர்நிதம்

எண்ணும் புகழ்க்கடவூர் எங்கள்அபி ராமவல்லி

நண்ணும்பொற் பாதத்தில் நன்கு


நேயர் நிதம் - அன்பர்கள் தினந்தோறும்

எண்ணும் - நினைக்கும்

புகழ்க் கடவூர் - புகழ் பெற்ற திருக்கடவூரில்(எழுந்தருளிருக்கும்)

எங்கள் அபிராமவல்லி - எங்கள்அபிராமவல்லி(யை)

நண்ணும் - அணுகி

பொற்பாதத்தில் - பொன்போன்ற திருப்பாதத்தில்

நன்கு - நன்றாக

தூயதமிழ்ப் பாமாலை - புனிதமான செந்தமிழ் பாக்களால்தொடுக்கப்பட்ட மாலையை

சூட்டுவதற்கு - அணிவிப்பதற்கு

மும்மதன் - இச்சை, கிரியை, ஞானம் என்னும் மூன்று சக்திகளை உடைய

நால்வாய் - தொங்கும் வாயுடைய

ஐங்கரன் தாள் - ஆக்கல், அளித்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற தொழில்களை புரியும் ஐந்து கரங்களை உடைய விநாயகப் பெருமானின் பாதக் கமலங்களை

வழுத்துவாம்வணங்குவோம்


எந்த செயல் தொடங்குவதற்கு முன் கணபதியைத் தோத்திரம் செய்து வணங்குவது என்பது தமிழ் இலக்கியத்தில் காணப்படும் ஒரு மரபாகும். அந்த வகையில் தான் இயற்றப் போகும் இந்த பதிக ஆரம்பத்தில் விநாயகப்பெருமானை துதித்து தூய தமிழ்ப் பாமாலை அணிவிப்பதற்கு வேண்டுகிறார். நாமும் அவருடன் வேண்டிக்கொள்கிறோம்.


திருக்டையூர்த் திருத்தலத்தில், பிள்ளையார் “கள்ள வினாயகர்”என்ற பெயருடன் எழுந்தருளியுள்ளார். அபிராமி பட்டர் இவ்விநாயகரையும் தன் பதிகத்தால் துதி செய்துள்ளார்.


விருத்தம் : 1 ராகம் : சௌராஷ்ட்ரம்

கங்கையொடுதும்பையும்அணிந்தவர்வியக்குங்

கலாமதியைநிகர்வதனமுங் கருணை பொழி விழிகளும் விண்முகில்கள் வெளிறெனக் காட்டிய கரும் கூந்தலுஞ், சங்கையில்லாது ஒளிரு மாங்கல்ய தாரணந் தங்குமணி மிடறு மிக்க சதுர்பெருகு துங்கபா சாங்குசம் இலங்கு கர தலமும்விர லணியும் அரவும் புங்கவர்க்கு அமுதருளு மந்தர குசங்களும், பொலியுநவ மணிநூ புரம் பூண்ட செஞ் சேவடியை நாளும் புகழ்ந்துமே போற்றியென வாழ்த்த விடைமேல் மங்களம் மிகுந்த நின் பதியுடன் வந்து, அருள் செய் வளர் திருக் கடவூரில் வாழ் வாமி! சுபநேமி! புகழ்நாமி! சிவசாமி மகிழ் வாமி! அபிராமி! உமையே!


பொருளுரை

சடையில் கங்கை நதியையும், தும்பை மலரையும் அணிந்த பரமசிவன் வியந்து பாராட்டும்படியாக பதினாறு கலைகளையுடைய சந்திரனை ஒத்த அல்லது, சந்திரனின் காந்தி தவழ்கின்ற முகத்தையுடையவளும், அருள் நிறைந்த பார்வையை உடையவளும் வானிலுள்ள கரு மேகங்கள் வெண்மையோ எனக் கூறும்படி கருமையான கூந்தலை உடையவளும் அப்பழுக்கு இல்லாமல் ஒளிரும் திருமாங்கல்யம் நிலைத்திருக்கும் மணியைப் போன்று ஒளிர்கின்ற கழுத்து (உடையவளும்) மிகப் பெருமை வாய்ந்த, ஒளிர்கின்ற அங்குசம், பாசம் முதலியவற்றை தரித்துள்ள நான்கு கரங்களும், மோதிரங்களும் வேத உச்சாரணத்தால் ஒலி செய்யும் தவஸ்ரேஷ்டர்களுக்கு அமிர்தத்தை பொழியும் முலைகளும் (இதயத்திலிருந்து பொழியும் ஞானப்பால்) நவரத்னங்களால் ஆன சிலம்புகளை அணிந்துள்ள செம்மையான திருவடிகளை தினமும் ஏற்றிப் புகழ்ந்து பாடி துதி செய்ய, சிவமாகிய உந்தன் கணவனுடன் காளை வாகனத்தில் அமர்ந்து வந்து அருள்வாய் திருக்கடவூர் ஸ்தலத்தில் வாழும் (சிவனின்) வாம (இடது) பாகத்தில் உள்ளவளே நல்ல சக்ராயுதத்தை ஏந்தியவளே! புகழ் பெற்ற நாமம் உள்ளவளே! பரமசிவன் மகிழும் தேவியே! மிக்க அழகுடையவளே! உமா என்ற பெயருடையவளே!


பதவுரை

கங்கையொடு தும்பையும் அணிந்தவர்

சடையில் நதியையும், மலரையும் அணிந்த சிவன்

வியக்கும்

வியந்து பாராட்டும்

கலாமதியை நிகர் வதனமும்

பதினாறு கலைகளையுடைய சந்திரனை ஒத்த அல்லது, சந்திரனின் காந்தம் தவழ்கின்ற முகத்தையுடையவளும் சந்திரனின் காந்தம் தவழ்கின்ற முகத்தையுடையவளும்

கருணை பொழி விழிகளும்

அருள் நிறைந்த விழிகளையுடையவளும்

விண்முகில்கள் வெளிறெனக் காட்டிய கருங்கூந்தலும்

வானிலுள்ள கரு மேகங்கள் வெண்மையோ எனக் கூறும்படி கருமையான கூந்தலை உடையவளும் (கரிய மேகங்களும் அம்பாளின் கூந்தலின் கருமைக்கு ஈடாகா)

சங்கையில்லாது ஒளிரு மாங்கல்ய தாரணம் தங்கு

அப்பழுக்கு இல்லாமல் ஒளிரும் திருமாங்கல்யம் நிலைத்திருக்கும் (தங்கியிருக்கும்)

மணி மிடறு

மணியை ஒத்த கழுத்து(உடையவளும்)

மிக்க சதுர்பெருகு

மிகப் பெருமை வாய்ந்த

துங்க பாசாங்குசம் இலங்கு சதுர் கரதலமும்

ஒளிர்கின்ற அங்குசம், பாசம் முதலியவற்றை தரித்துள்ள நான்கு கரங்களும்

விரலணியும்

மோதிரங்களும்

அரவும் புங்கவர்க்கு

வேத உச்சாரணத்தால் ஒலி செய்யும் தவஸ்ரேஷ்டர்களுக்கு

அமுதருளும் மந்தர குசங்களும்

அமிர்தத்தை பொழியும் முலைகளும் (ஹிருதயத்திலிருந்து பொழியும் ஞானப்பால்)

நவமணி நூபுரம் பூண்ட பொலியும் செஞ்சேவடியை

நவரத்னங்களாலான சிலம்புகளை அணிந்துள்ள செம்மையான திருவடிகளை

நாளும் புகழ்ந்துமே போற்றி என வாழ்த்த

தினமும் ஏற்றிப் புகழ்ந்து, பாடி துதி செய்ய

மங்களம் மிகுந்த நின் பதியுடன் விடைமேல் வந்து அருள் செய்

சிவமாகிய உந்தன் கணவனுடன் காளை வாகனத்தில் அமர்ந்து வந்து அருள்வாய்

வளர் திருக்கடவூரில் வாழ்

திருக்கடவூர் ஸ்தலத்தில் வாழும்

வாமி

(சிவனின்) வாம(இடது) பாகத்தில் உள்ளவளே

சுபநேமி

நல்ல சக்ராயுதத்தை ஏந்தியவளே; திருமாலின் தங்கையானதால் அன்னையும் சக்கரத்தை திருக்கையில் ஏந்தியுள்ளாள்.

புகழ் நாமி

புகழ் பெற்ற நாமம் உள்ளவளே

​சிவசாமி மகிழ் வாமி

பரமசிவன் மகிழும் தேவியே

அபிராமி

மிக்க அழகுடையவளே

உமையே

​உமா என்ற பெயருடையவளே

பதிகப்பாடல் 1 தாளம் : கண்டசாபு

கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர் கபடு வராத நட்பும், கன்றாத வளமையும், குன்றாத இளமையும், கழு பிணி இல்லாத உடலும், சலியாத மனமும், அன்பகலாத மனைவியும், தவறாத சந்தனமும், தாழாத கீர்த்தியும், மாறாத வார்த்தையும், தடைகள் வாராத கொடையும், தொலையாத நிதியமும், கோணாத கோலும், ஒரு துன்பமில்லாத வாழ்வும், துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவிப்பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய் அலையாழி அறி துயிலும் மாயனது தங்கையே , ஆதி கடவூரின் வாழ்வே, அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி அருள்வாமி அபிராமியே.


பதவுரை

கலையாத கல்வியும்

முழுமையான அறிவு தரக்கூடிய கல்வியும்

குறையாத வயதும்

நீண்ட ஆயுளும்

கபடு வாராத நட்பும்

ஏமாற்றம் அளிக்காத நட்பும்

கன்றாத வளமையும்

அழியாத செல்வங்களும்

குன்றாத இளமையும்

மங்காத இளமையும்

கழுபிணியிலாத உடலும்

சூலப்பிணி போன்ற நோய்கள் வராத உடலும்

சலியாத மனமும்

சீ என்று ஒதுக்ககூடிய எண்ணங்கள் இல்லாத மனமும்

அன்பு அகலாத மனைவியும்

தன்னை மிகவும் நேசிக்கும் துணையாளும்

தவறாத சந்தானமும்

சொன்னசொல் தவறாத குழந்தைகளும்

தாழாத கீர்த்தியும்

குறையாத புகழும்

மாறாத வார்த்தையும்

சொன்ன சொல் தவறாமையும்

தடைகள் வாராத கொடையும்

தானம் செய்வதற்கு வேண்டிய செல்வம் தடையில்லாமல் கிடைக்கவும் அல்லது தானம் செய்ய வேண்டிய தருணங்களில் தடைகள் வராமலும்

தொலையாத நிதியமும்

செல்வங்கள் திருடு போகாமலும்

கோணாத கோலும்

தர்ம நீதி தவறாத அரசாட்சியும்

ஒரு துன்பம் இல்லாத வாழ்வும்

மனவருத்தம் இல்லாத வாழ்க்கையும்

துய்ய நின்பாதத்தில்

தூய்மையான நின் திருத்தாள்களில்

அன்பும் உதவி

அன்புடன் உதவி புரிந்து

பெரிய தொண்டரொடு

மகிமைமிக்க நின் அடியார்கள் கூட்டத்துடன்

கூட்டு கண்டாய்

(என்னை) சேர்த்து விட்டாய்

அலைஆழி அறிதுயிலும்

அலைகடலில் பள்ளிக்கொண்டிருக்கும்

மாயனது தங்கையே

திருமாலுக்கு சகோதரியே

ஆதி கடவூரின் வாழ்வே

​ஆதி கடவூர் என்ற திருத்தலதில் எழுந்தருளிய

அமுதீசர் ஒரு பாகம் அகலாத

அம்ருதகடேஸ்வரரின் ஒரு பக்கத்தில் என்றும் நிலைத்திருக்கும்

சுகபாணி

நன்மைதரும் கரத்தினளே

அருள்வாமி

அருள்பாலித்து (சிவனின்) இடது பாகத்தில் அமர்ந்திருப்பவளே

அபிராமியே

அழகுடையவளே

விளக்கவுரை இந்தப் பதிகத்தில் ஒரு மனிதனுக்கு வேண்டியது அனைத்தையும் வரமாக அன்னையிடம் கேட்கின்றார். தனிப்பட்ட முறையில் மட்டுமில்லாது அவன் எதிர்பார்க்கும் நன்மைகளை குடும்பத்திலிருந்தும், சமுதாயத்திலிருந்தும், அவனை ஆளும் அரசனிடமிருந்தும் எதிர் பார்க்கின்றார். கல்வி, நோயற்ற வாழ்வு முதலியன அவனை தனிப்பட்ட முறையில் ஏற்றமுறச் செய்பவை. தவறாத சந்தானம், அன்பகலாத மனைவி : குடும்பத்திலிருந்து எதிர்பார்ப்பது; கபடு வாராத நட்பு, தடைகள் வராத கொடை முதலியன, அவன் சமூகத்திலிருந்து கேட்பது; தொலையாத நிதி, கோணாத கோல் : அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்ப்பது. பாடுபட்டு சேர்த்த நிதி கொடைக்கு உதவவேண்டுமென்றால் தடைகள் வராமலும், தொலையாமலும், திருடர் பயம் இல்லாமலும் இருக்க வேண்டும். அதற்கு அரசனின் செங்கோலாட்சி நன்கு நடைபெற வேண்டும். இவையெல்லாம் ஒட்டுமொத்தமாக் கிடைப்பதற்கு, தான் மட்டுமின்றி சமூகத்தில் உள்ள அனைவரும் தொண்டர்களாக, அடியார்களாக, நல்லவர்களாக இருக்க வேண்டும், அதன்படி அவர்களுடன் ஒன்று சேர்ந்து வாழ அருளியதற்கு அம்பிகையை போற்றுகிறார்.

104 views0 comments

Recent Posts

See All
bottom of page