top of page

அபிராமி பதிகம் 2

Updated: Mar 23


விருத்தம் - ராகம் : பூர்வீ கல்யாணி


சந்திர சடாதரி! முகுந்த சோதரி! துங்க

சலச லோசன மாதவி!

சம்ப்ரம பயோதரி! சுமங்கலி! சுலட்சணி!

சாற்றருங் கருணாகரி!

அந்தரி! வராகி! சாம்பவி! அமர தோதரி!

அமலை! செகசால சூத்ரி!

அகிலாத்ம காரணி! வினோதசய நாரணி!

அகண்டசின் மயபூரணி!

சுந்தரி! நிரந்தரி! துரந்தரி! வரைராச

சுகுமாரி! கௌமாரி! உத்-

துங்க கல்யாணி! புஷ்பாதிராம் புயபாணி!

தொண்டர்கட்கு அருள் சர்வாணி!

அந்தரி, மலர் பிரமராதி துதி, வேத வொலி

வளர் திருக் கடவூரில் வாழ்

வாமி! சுபநேமி! புகழ்நாமி! சிவசாமி மகிழ்

வாமி! அபிராமி உமையே!





பதவுரை

சந்திர சடாதரி

சந்திரனை முன்தலையில் தரித்தவள்

முகுந்த சோதரி

​மாலவனின் பின் வந்தவள்

துங்க சலச லோசன

ஒளிர்விடும் தாமரை போன்ற, கண்களை உடைய

மாதவி

கொடி போன்றவள்

சம்ப்ரம பயோதரி

ஏதேமமாய் எல்லோருக்கும் உணவை (பாலன்னம்) வழங்குபவள்

சுமங்கலி

என்றும் மங்களமானவள்

சுலட்சணி

மிக லட்சணம் பொருந்தியவள்

சாற்ற(அ)ரும் கருணாகரி

வாழ்த்தியவர்களுக்கு கருணை புரிபவள்

அந்தரி

துர்க்கை

வராகி

வாராஹி

அமர தோதரி

தேவர்களின் வேதனையைப் போக்கியவள்

அமலை

அப்பழுக்கு இல்லாதவள்

செக சால சூத்ரி

ஜெகஜ் ஜாலம் என்று கூறும்படியாக (மந்திர வாதியை போல்) அண்டாண்ட உலகங்களின் படைப்புக்குக் காரணமானவள்

அகிலாத்ம காரணி

பரமாத்ம தத்துவத்தின் சூஷ்மமானவள்

வினோத சய நாரணி

விசித்ரமான, ஜயமளிக்கும் துர்க்கை

அகண்ட சின்மய பூரணி

முழுமையான அறிவுமயமான பூரணமானவள்

சுந்தரி

அழகானவள்

நிரந்தரி

என்றும் நிலையானவள்

துரந்தரி

பொறுப்பு ஏற்பவள்

வரை ராஜ சுகுமாரி

மலையவானின் அழகிய மகள்

கெளமாரி

என்றும் குமரியானவள்

உத்துங்க கல்யாணி

உத்தமமான கல்யாண குணத்தினள்

புஷ்பாஸ்திராம்புய பாணி

தாமரையனைய கைகளில் புஷ்ப அஸ்திரத்தை ஏந்தியவள் அல்லது தாமரையை ஆயுதமாகக் கொண்டவள்

தொண்டர்கட்கு அருள் சர்வாணி

தொண்டர்களுக்கு அருளும் பார்வதி தேவி, உபாசகர்களுக்கு எல்லாவற்றையும் அளிப்பவள்

அந்தரி

ஆகாசம் முழுவதும் படர்ந்திருப்பவள்

பிரமராதி மலர் வேதவொலி துதி வளர்

பிரம்மாதி தேவர்களால் மலர்களாலும் வேதவொலியினாலும் அனவரதமும் துதி செய்யப்படுபவள்

திருக்கடவூரில் வாழ்

திருக்கடையூர் ஸ்தலத்தில் வாழும்

வாமி

(சிவனின்) வாம(இடது) பாகத்தில் உள்ளவளே

சுபநேமி

நல்ல சக்ராயுதத்தை ஏந்தியவளே

புகழ் நாமி

புகழ் பெற்ற நாமம் உள்ளவளே

சிவசாமி மகிழ் வாமி

பரமசிவன் மகிழும் தேவியே

அபிராமி

மிக்க அழகுடையவளே

உமையே

உமா என்ற பெயருடையவளே

விளக்கவுரை

தொண்டர்கட்கு அருள் சர்வாணி - தன்னை அண்டிவந்தவர்களுக்கு ஸர்வத்தையும் அளிப்பவள் கெளமாரி - ஸப்த மாதர்களில் ஒருவர். அந்தரி - பராகாச வடிவி. அந்தரம் என்றால் ஆகாசம் ‘பராகாசா’ என்பது அம்பிகையின் ஒரு திரு நாமம். நாரணி:~ நாராயணி - நாராயணன் தங்கையாயிருந்து திருமாலின் காப்பாற்றும் தொழிலை நடத்துபவள் புஷ்பாஸ்திராம்புய பாணி: மென்மையான மலரொன்று எப்படி ஆயுதமாக இருக்க முடியும் என்கிற எண்ணம் தோன்றுவது இயற்கையே. அம்பிகையின் கைகளில் உள்ள ‘தாமரை மொட்டு’ ஒரு குறியீடு . தாமரைமொட்டு ஸ்தூலமான அசுரனை அழிப்பதற்காக அல்லாமல், மனிதத்துவத்தின் வளர்ச்சியைக் குறிப்பதாகும். அறிவின் விரிவால், மனிதன் தெய்வத்தன்மையை நோக்கிச் சென்று ஸச்சிதானந்தத்தைக் குறிக்கும் மலர்ந்த தாமரையை அடைய வேண்டும் என்பதையே சுட்டிக் காட்டுகிறது.


பாடல் தாளம் : கண்டசாபு


காரளக பந்தியும் பந்தியின் அலங்கலும் கரிய புருவச் சிலைகளும் கர்ண குண்டலமு மதிமுக மண்டலமும் நுதற் கத்தூரிப் பொட்டு மிட்டுக் கூரணிந்திடு விழியும் அமுத மொழியுஞ் சிறிய கொவ்வையின் கனியதரமும் குமிழனைய நாசியும் குந்த நிகர் தந்தமும் கோடு சோடான களமும் வாரணிந் திறுமாந்த வனமுலையும் மேகலையும் மணி நூபுரப் பாதமும் வந்தெனது முன்நின்று மந்தகாச முமாக வல்வினையை மாற்றுவாயே: ஆரமணி வானிலுறை தாரகைகள் போல நிறை . ஆதி கடவூரின் வாழ்வே! அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி! அருள் வாமி! அபிராமியே!



கார் அளக பந்தியும்

அலை போன்று சுருண்ட அழகான கருங்கூந்தலும்

பந்தியின் அலங்கலும்

அதன் ஒளியும்

கரிய புருவச் சிலைகளும்

வானவில் போன்ற வடிவுடைய கரிய புருவமும்

கர்ண குண்டலமும்

காதுகளில் அணிந்துள்ள தாடங்கமும்

மதி முக மண்டலமும்

சந்திரைனையொத்த முகப்பிரகாசமும்

நுதல் கத்தூரிப் பொட்டும் இட்டு

நெற்றியில் இட்ட கஸ்தூரி திலகமும்

கூர் அணிந்திடு விழியும்

கூர்மையான அழகான இரு விழிகளும்

அமுத மொழியும்

இனிய வாக்கும்

சிறிய கொவ்வையின் கனி அதரமும்

கொவ்வைப் பழம் போன்ற உதடு(களு)ம்

குமிழ் அனைய நாசியும்

சிறிய சிமிழ் போன்ற மூக்கும்

குந்த நிகர் தந்தமும்

அளவான பல் வரிசையும்

கோடு சோடான களமும்

சங்கு போன்ற கழுத்தும்

வார் அணிந்திறுமாந்த வனமுலையும்

கச்சம் அணிந்த மேலான மார்பகமும்

மேகலையும் - ஓட்டியாணமும்

மணி நூபுரப் பாதமும்

மணிகளாலான சிலம்பு அணிந்த பாதங்களும்

வந்து எனது முன் நின்று

என் முன்னே தோன்றி

மந்தகாசமுமாக

ஒரு சிறு புன் முறுவலுடன்

வல் வினையை மாற்றுவாயே

என் கொடிய வினைகளை போக்கிடுவாயே

வானில் உறை தாரகைகள் ஆரமணி போல நிறை

நட்சத்திரக் கூட்டங்கள் அழகாக வானில் அணிவகுத்து விளங்குகின்ற

ஆதி கடவூரின் வாழ்வே

ஆதி கடவூர் என்ற திருத்தலதில் எழுந்தருளிய

அமுதீசர் ஒரு பாகம் அகலாத

அம்ருதகடேஸ்வரரின் ஒரு பக்கத்தில் என்றும் நிலைத்திருக்கும்

சுகபாணி

நன்மைதரும் கரத்தினளே

அருள்வாமி அபிராமியே

அருள்பாலித்து (சிவனின்)இடது பாகத்தில் அமர்ந்திருப்பவளே அழகுடையவளே!

விளக்கவுரை

கேசாதி பாத வர்ணணையை மனதில் நிலை நிறுத்தி தியானம் செய்ய அருமையானதொரு பதிகம் இது. முத்துமாலையும் கோடு சோடான களமும் - சங்கு போன்ற கழுத்தும் வார் அணிந்திறுமாந்த வனமுலையும் - கச்சம் அணிந்த மேலான மார்பகமும் மேகலையும் - ஓட்டியாணமும் மணி நூபுரப் பாதமும் - மணிகளாலான சிலம்பு அணிந்த பாதங்களும் மந்தகாசமுமாக வந்து கிரீடமும் அணிந்து பூர்ண சந்திரன் போன்ற முகப்பொலிவுடன் விளங்குகிறாள் மீனாக்ஷி. ஒலிக்கின்ற காற் சதங்கை மணிகளைக் கொண்டவளாய், தாமரை மலரையொத்த ப்ரபையுடனும் இருக்கிறாள். இயற்கையாகவே சிவந்த அவளுடைய அதரகாந்தியின் முன் கோவைப் பழம் வெட்கப்படும்படியாக இருக்கிறது. அன்னையின் இணையில்லா புன்சிரிப்பு நம் வினையை எரிக்க வல்லது.

67 views0 comments

Recent Posts

See All
bottom of page