விருத்தம் ராகம் : ஆனந்த பைரவி
எண்ணிக்கை இல்லாத துன்பங்கள் மேன்மேல் ஏறிட் டொறுக்க அந்தோ!
எவ்விதம் உளஞ் சகித் துய்குவேன் இப்பொழுது
எடுத்திட்ட சன்மம் இதனில்
நண்ணியென் னளவு சுகமானதொரு நாளினும்
நான் அனு பவித்த தில்லை
நாடெலாம் அறியுமிது கேட்பதேன்? நின்னுளமும்
நன்றாய் அறிந்தி ருக்கும்;
புண்ணியம் பூர்வ சனனத்தினிற் செய்யாத
புலைய னானாலும் நினது
பூரண கடாட்ச வீட்சண்ணியஞ் செய்தெனது
புன்மையை அகற்றி யருள்வாய்,
மண்ணவர்கள் விண்ணவர்கள் நித்தமும் பரவுமிசை
வளர்த் திருக்கடவூரில் வாழ் வாமி, சுபநேமி,
புகழ் நாமி, சிவசாமி மகிழ் வாமி, அபிராமி உமையே
பதவுரை
எண்ணிக்கையில்லாத துன்பங்கள் | எண்ணமுடியாத துயரங்கள் |
மேன்மேல் ஏறிட்டொறுக்க | ஒன்றன் மேல் ஒன்றாய் வந்து என்னை வறுக்க |
அந்தோ எவ்விதம் உளம் சகித்து உய்குவேன் | நான் எப்படி பொறுத்திருப்பேன் |
இப்பொழுது எடுத்திட்ட சன்மம் இதனில் | எனது இந்த ஜன்மத்தில் |
நண்ணி என்னளவு | சின்னஞ்சிறிய |
சுகமானது ஒரு நாளினும் நான் அனுபவித்ததில்லை | இன்பத்தையும் நான் ஒரு நாள் கூட அனுபவத்தில்லை |
நாடெலாம் அறியும் | இந்த வழக்கமான நிலை நாட்டில் உள்ளோர் யாவரும் அறிவர் |
இது கேட்பது ஏன் | இப்படி(எவ்விதம் உளம் சகித்து உய்குவேன் என்று) நான் ஏன் கேட்க வேண்டும்? |
நின் உளமும் நன்றாய் அறிந்திருக்கும் | உனக்கே இது தெரிந்திருக்கும் |
புண்ணியம் பூர்வ சனனத்தினில் | முன் பிறவிகளில் புண்ணிய காரியங்கள் |
செய்யாத புலையனானாலும் | செய்யாத கீழ் மகனானாலும் |
நினது பூரண கடாட்ச வீட்சண்ணியம் செய்து | உனது நிறைவான கடைக்கண் அருள் பார்வையினால் |
எனது புன்மையை அகற்றி அருள்வாய் | எனது இழிவை நீக்கி அருள் புரிந்திடுவாய் |
மண்ணவர்கள், விண்ணவர்கள் நித்தமும் பரவும் | பூவுலகத்தோரும், தேவர்களும் தினமும் போற்றிப் புகழும் |
வளர் திருக்கடவூரில் வாழ் | திருக்கடையூர் ஸ்தலத்தில் வாழும் |
வாமி | (சிவனின்) வாம(இடது) பாகத்தில் உள்ளவளே |
சுபநேமி | நல்ல சக்ராயுதத்தை ஏந்தியவளே |
புகழ் நாமி | புகழ் பெற்ற நாமம் உள்ளவளே |
சிவசாமி மகிழ் வாமி | பரமசிவன் மகிழும் தேவியே |
அபிராமி | மிக்க அழகுடையவளே |
உமையே | உமா என்ற பெயருடையவளே |
விளக்கவுரை
இப்பொழுது எடுத்திட்ட சன்மம் இதனில் : இப்பொழுது எடுத்த ஜன்மம் என்ற பொருள் பட இருப்பதால் இதற்கு முன்னும் பல ஜன்மங்கள் எடுத்திருக்க வேண்டும். இந்த ஜன்மத்தில் துன்பப்படுவது முன் ஜன்மத்தில் செய்த பாவங்களின் எதிரொலிதான் என்று நினைக்கிறார். ஆகையால்தான் முன் ஜன்மத்தில் புண்ணியம் செய்யாத சண்டாளன் என்றும் நொந்து கொள்கிறார். பாடல் தாளம் : கண்டசாபு
பல்குஞ் சரந்தொட்டு எறும்பு கடையானதொரு
பல்லுயிர்க் குங் கல்லிடைப்
பட்ட தேரைக்கும் அன்றுற்பவித்திடு கருப்
பையுறு சீவனுக்கும்
மல்குஞ் சரா சரப் பொருளுக்கும் இமையாத
வானவர் குழாத்தி னுக்கும்
மற்றுமொரு மூவர்க்கு மியாவருக்கும் அவரவர்
மனச் சலிப்பு பில்லாமலே
நல்குந் தொழிற் பெருமை உண்டாயிஆருந்து மிகு
நவநிதி உனக் கிஆருந்தும்
நானொருவன் வறுமையிற் சிறியனானால் அந்
நகைப் புனக்கே அல்லவோ?
அல்கலந் தும்பர்நா டளவெடுக் குஞ்சோலை
ஆதி கடவூரின் வாழ்வே!
பதவுரை
பல் குஞ்சரந் தொட்டு எறும்பு கடையானது ஒரு | தந்தமுள்ள யானயிலிருந்து ஒரு சிறு எறும்பு வரை |
பல் உயிர்க்கும் | பல வகையான உயிர்களுக்கும் |
கல் இடைப்பட்ட தேரைக்கும் | (பாறாங்)கல்லுக்குள் இருக்கும் தேரை என்ற ஜீவராசிக்கும் |
அன்று உற்பவித்திடு கருப்பை உறு சீவனுக்கும் | அன்றைக்குத்தான் கர்ப்பப்பையில் உதித்த ஜீவனுக்கும் |
மல்கும் சராசரப் பொருளுக்கும் | வளரும் அசையும் ஜீவராசிகளுக்கும், அசையாப் பொருள்களுக்கும் |
இமையாத வானவர் குழாத்தினுக்கும் | இமைமூடாத தேவர்களுக்கும் |
மற்றும் ஒரு மூவர்க்கும் | மும்மூர்த்திகளுக்கும் |
யாவருக்கும் | அனைவருக்கும் |
அவரவர் மனச் சலிப்பு இல்லாமலே | அவரவர் மனச்சோர்வு அடையாதபடி |
நல்கும் தொழில் பெருமை உண்டாயிருந்து | (தேவையானதை) கொடுக்கும் படியான சிறந்த செயல் கொண்டவளாயிருந்து (அதற்கு வேண்டிய) |
மிகு நவநிதி | அளப்பரியா செல்வம் |
உனக்கிருந்தும் | உனக்கு இருக்கும் பொழுது |
நான் ஒருவன் வறுமையில் சிறியன் ஆனால் | நான் ஒருவன் இங்கு ஏழ்மையில் வாடும்படியானால் |
அந்நகைப்பு உனக்கே அல்லவோ | அந்த இகழ்ச்சி உனக்குத்தானே |
அல்கல் உந்து உம்பர் நாடு அளவெடுக்கும் சோலை | (அல்கல் - தங்கும், உந்து - உயர்ச்சி ) பூஞ்சோலைகளால் உயர்ச்சி பெற்று தேவலோகம் போல் காட்சியளிக்கும் |
ஆதி கடவூரின் வாழ்வே | ஆதி கடவூர் என்ற திருத்தலதில் எழுந்தருளிய |
அமுதீசர் ஒரு பாகம் அகலாத | அம்ருதகடேஸ்வரரின் ஒரு பக்கத்தில் என்றும் நிலைத்திருக்கும் |
சுகபாணி | நன்மைதரும் கரத்தினளே |
அருள்வாமி | அருள்பாலித்து (சிவனின்)இடது பாகத்தில் அமர்ந்திருப்பவளே |
அபிராமியே | அழகுடையவளே |
விளக்கவுரை
‘சந்திர சடாதரி’ பதிகத்தில் அம்பிகையை ‘துரந்தரி’ என்கிறார். துரந்தரி என்றால் பொறுப்பானவள் என்றும் பொருள் கொள்ளலாம். பெரிய மிருகமாகிய யானையிலிருந்து அந்த க்ஷணம் உதித்திருக்கும் கரு வாசிக்கும் உயிர் வாழ உணவு அளிக்கின்றவள் எவ்வளவு பொறுப்பானவளாக இருக்க வேண்டும்!
கவிஞர்கள் பலர் நிந்தாஸ்துதியில் வல்லவர்கள். அண்ட சராசரத்திற்கும் உன்னால் உணவு அளிக்கும்படியான செல்வம் உன்னிடம் இருக்கும்போது உன் பக்தனான நான் வறுமையில் வாடுவது தகுமோ என்கிறார். அவர் வேண்டுவது பொருட் செல்வம் அல்ல, அருள் செல்வமாகும்.