அபிராமி பதிகம் 8
Updated: Jun 10
வஞ்சகக் கொடியோர்கள் நட்புவேண்டாமலும்
மருந்தினுக்கா வேண்டினும்
மறந்தும் ஓர் பொய்மொழி சொலாமலும் தீமையாம்
வழியினிற் செல்லாமலும்
விஞ்சு நெஞ்சதனிற் பொறாமை தரியாமலும்
வீண் வம்பு புரியாமலும்
மிக்க பெரியோர்கள் சொலும் வார்த்தை தள்ளாமலும்
வெகுளியவை கொள்ளாமலும்
தஞ்சமென நின[து] உபய கஞ்சத் துதித்திடத்
தமியேனுக்கு அருள் புரிந்து
சர்வ காலமும் எனைக் காத்தருள வேண்டினேன்
சலக் கயல்கள் விழியை அனைய
வஞ்சியர் செவ்வாய் நிகரு வாவியாம் பன்மலரும்
வளர்த் திருக்கடவூரில் வாழ் வாமி, சுபநேமி,
புகழ் நாமி, சிவசாமி மகிழ் வாமி, அபிராமி உமையே
பதவுரை
வஞ்சகக் கொடியோர்கள் | தீயோர்களின் |
நட்பு வேண்டாமலும் | இணக்கம் நாடாமலும் |
மருந்தினுக்கா வேண்டினும் | கொஞ்சம் கூட |
மறந்தும் ஓர் பொய்மொழி சொலாமலும் | நினைவு இல்லாமல் கூட, ஒரு பொய் சொல்லாமலும் |
தீமையாம் வழியினில் செல்லாமலும் | தீ நெறியில் செல்லாமலும் |
விஞ்சு நெஞ்சு அதனில் | எண்ணங்களால் விம்மும் இந்த உள்ளத்தில் |
பொறாமை தரியாமலும் | பிறரின் ஏற்றம் கண்டு தன்மனத்தில் பொறாமை கொள்ளாமலும் |
வீண் வம்பு புரியாமலும் | வீணாக வம்புகளும் வாதங்களும் செய்யாமலும் |
மிக்க பெரியோர்கள் சொலும் வார்த்தை தள்ளாமலும் | பெரியோர்கள் கூறும் அறிவுரையை கேட்டு நடந்தும் |
வெகுளி அவை கொள்ளாமலும் | கோபம் கொள்ளாமலும் |
நினது உபய கஞ்சம் தஞ்சம் என துதித்திட | உனது திருவடியே சரணம் என்று துதி செய்ய |
தமியேனுக்கு | அடியேனுக்கு |
அருள் புரிந்து | தயை புரிந்து |
சர்வ காலமும் எனைக் காத்து அருள வேண்டினேன் | எப்பொழுதும் என்னை காப்பாற்றி அருள வேண்டி நின்றேன் |
சலக் கயல்கள் விழியை அனைய | மீன்களைப் போன்ற விழிகளை உடைய |
வஞ்சியர் செவ்வாய்நிகரும் | பெண்களுடைய சிவந்த வாயை ஒத்த |
ஆம்பல் மலரும் வாவி | மென்மையான ஆம்பல் மலர்கள் மலரும் குளங்கள் உள்ள |
வளர் திருக்கடவூரில் வாழ் | திருக்கடையூர் ஸ்தலத்தில் வாழும் |
வாமி | (சிவனின்) வாம(இடது) பாகத்தில் உள்ளவளே |
சுபநேமி | நல்ல சக்ராயுதத்தை ஏந்தியவளே |
புகழ் நாமி | புகழ் பெற்ற நாமம் உள்ளவளே |
சிவசாமி மகிழ் வாமி | பரமசிவன் மகிழும் தேவியே |
அபிராமி | மிக்க அழகுடையவளே |
உமையே | உமா என்ற பெயருடையவளே |
கருத்துரை
நன்றென்று என்ற பதிகத்தில் கூறப்பட்ட செய்யத்தக்கவை, செய்யத்தகாதவை சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறார். பொய் சொல்லாமை, வீண்வம்பு பேசாமை, கெட்டவர்களின் சேர்க்கை,முதலியவற்றை முக்கியமாக எடுத்துரைக்கிறார். “சான்றோர் இனத்திரு” என்கிறார் ஒளவையார். நல்லவை, தீயவைகளுடன் சேர்ந்தால் அவையும் தீமைகளாகிவிடும் என்பது உலக நியதி. ஒரு கூடை நல்ல பழங்களில் ஒன்று கெட்டுவிட்டாலும் அதைத் தொடர்ந்து மற்ற பழங்களும் அழுக ஆரம்பித்துவிடும். அழுகிய பழத்தை ஒதுக்குவதே சிறந்த வழி. நல்லவன் நல்லவனாக இருக்க தீயவர்களை தவிர்க்கவேண்டும்.
பாடல் தாளம் : கண்டசாபு
ஞானந் தழைத்துன் சொரூபத்தை அறிகின்ற
நல்லோர் இடத்தினிற் போய்
நடுவினிலிருந்து வந்து அடிமையும் பூண்டு அவர்
நவிற்றும் உபதேச முட்கொண்டு
ஈனந்தனைத் தள்ளி எனது நானெனு மானம்
இல்லாமலே துரத்தி
இந்திரிய வாயில்களை இறுகப் புதைத்து நெஞ்சு
இருளற விளக்கேற்றியே
ஆனந்தமான விழி அன்னமே! உன்னை என்
அகத் தாமரைப் போதிலே
வைத்து வேறே கவலையற்று மேலுற்ற பர
வசமாகி அழியாததோர்
ஆனந்தவாரிதியில் ஆழ்கின்ற தென்றுகாண்?
ஆதி கடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி! அருள் வாமி! அபிராமியே!
பதவுரை
ஞானம் தழைத்து | அறிவு முற்றி |
உன் சொரூபத்தை அறிகின்ற | உன்னுடைய வடிவை தெரிந்துகொண்டிருக்கின்ற |
நல்லோர் இடத்தினில் போய் | நேயமானவர் உறையுமிடம் சென்று |
நடுவினில் இருந்து உவந்து | அவர்களின் ஊடே இருந்து திளைத்து |
அடிமையும் பூண்டு | அவர்கட்கு பணிவிடையும் செய்து |
அவர் நவிற்றும் உபதேசம் உட்கொண்டு | அவர் சொல்லும் அறிவுறைகளை ஏற்றுக்கொண்டு |
ஈனம்தனைத் தள்ளி | தாழ்வான எண்ணங்களையும், சொற்களையும், செயல்களையும் அகற்றி |
எனது, நான் எனும் | மமகாரம், அகங்காரம் எனும் |
மானம் இல்லாமலே துரத்தி | அபிமானம் என்னிடம் இல்லாமல் விலக்கி |
இந்திரிய வாயில்களை | ஐம்புலன்களின் கதவுகளை |
இறுகப் புதைத்து | இறுக்கமாக தாளிட்டு (மறுபடியும் உள்ளே நுழைய விடாமல்) |
நெஞ்சு இருளற | உள்ளத்தில் உள்ள அஞ்ஞான இருளை நீக்கி |
விளக்கு ஏற்றியே | ஞானம் எனும் தீபத்தை ஏற்றி |
ஆனந்தமான விழி அன்னமே | ஆனந்த மயமான அறிவுநிறைந்த அன்னப்பறவை போன்று ம்ருதுவானவளே |
உன்னை | உன் வடிவத்தை |
என் அகத் தாமரைப் போதிலே | என் இருதய கமலத்தில் |
வைத்து | ஏற்றி வைத்து |
வேறே கவலையற்று | வேறு எந்த வேதனயும் இன்றி |
மேல் உற்ற பரவசம் ஆகி | மேலானதோர் பரவஸ்துவில் லயித்து, மிக்கக் களிப்புற்று |
அழியாதது ஓர் | சாஸ்வதமானதோர் (நிலைத்து இருப்பதான) |
ஆனந்த வாரிதியில் | பேரின்ப சாகரத்தில் |
ஆழ்கின்றது என்று காண் | திளைக்கப் போவது எந்நாளோ? |
அமுதீசர் ஒரு பாகம் அகலாத | அம்ருதகடேஸ்வரரின் ஒரு பக்கத்தில் என்றும் நிலைத்திருக்கும் |
சுகபாணி | நன்மைதரும் கரத்தினளே |
அருள்வாமி | அருள்பாலித்து (சிவனின்)இடது பாகத்தில் அமர்ந்திருப்பவளே |
அபிராமியே | அழகுடையவளே! |
விளக்கவுரை
அபிராமியம்மை பதிகத்தை ஆரமாக கொண்டால், மதாணி போன்றதாகும் இப்பதிகம். மிக உயர்ந்ததோர் அத்வைத தத்வத்தை கூறும் போதே சரணாகதியின் மூலம் மனப்பக்குவத்தை அடையும் வழியையும் ஒருங்கே சொல்லும் ஓர் அருமையான செய்யுள் ஆகும்.
ஞானம் தழைத்து.. ... உட்கொண்டு : சாதகனானவன் அறிஞர்களும் நல்லோர்களுமான பெரியவர்களை நாடிச் சென்று அவரிடம் அன்பு பூணவேண்டும். அவர்கட்கு தொண்டு செய்யவேண்டும். ஸத்ஸங்கத்தில் ஈடுபட்டு சான்றோர்களிடம் உபதேசம் பெற்றால், கீழ்த்தரமான செயல்களை வெறுக்கும் மனோபாவம் தானகவே வந்து விடும். ஞான கர்மேந்திரியங்களை பண்படுத்திய பிறகு ‘நான்’ ‘எனது’, எனும் அபிமானம் இல்லாமலே ஜீவாத்மா தன்னைச் சுற்றிப் படர்ந்த ஆணவ, கர்ம, மாயை ஆகிய மலங்களை நீக்கிய பின், பரமாத்மாவின் ஒளியைத் தரிசித்து அத்துடன் இரண்டற கலக்கும் நிலையை பெறும்.
நெஞ்சு இருளற விளக்கு ஏற்றியே- ஐம்புலன்கள் தோற்றுவிக்கும் ஆசாபாசங்களினால் இருதய குகையில் இருள் மண்டிக்கிடக்கிறது. அது அஞ்ஞானத்தால் வந்த இருள். அதை நீக்க ஞானம் என்ற விளக்கை ஏற்ற வேண்டும்.
ஆனந்தமான விழி அன்னமே ... ஹம்ஸம் என்னும் பறவை வித்யைக்கு உருவகமாகும். ஹம்ஸம் என்பது ஒரு ஸாதகனை நிர்விகல்ப சமாதிக்கு அழைத்துக்செல்லும் மந்தரமும் ஆகும். எல்லாம் ஒடுங்கிய நிலையில் ‘ஹம்ஸ:ஸோகம்’ என்பது மருவி ஓம் ஆகி பின் ‘அஜபா’ (ஜபிக்க ஒன்றுமில்லாமல்) ஆகிவிடுகிறது.