விருத்தம் ராகம் : நாட்டக்குறிஞ்சி
நன்றென்று தீதென்று நவிலுமிவ் விரண்டினுள் நவின்றதே உலகி லுள்ளோர் நாடுவார் ஆதலின் நானுமே அவ்விதம் நாடினேன் நாடினாலும் இன்றென்று சொல்லாமல் நினது திருவுள்ளமது இரங்கி யருள் செய்கு வாயேல் ஏழையேன் உய்குவேன், மெய்யானமொழியிஃதுன் இதயம் அறியாதது உண்டோ? குன்றமெல்லாம் உறைந்து என்றும் அன்பர்க்கு அருள் குமார தேவனை அளித்த குமரி! மரகத வருணி! விமலி! பைரவி! கருணை குலவு கிரிராச புத்ரி! மன்றல் மிகுநந்தன வனங்கள்சிறை அளி முரல வளர்த் திருக்கடவூரில் வாழ் வாமி! சுபநேமி! புகழ் நாமி! சிவசாமி மகிழ் வாமி! அபிராமி உமையே!
பதவுரை
நன்றென்று, தீதென்று | இது நல்லது, இது தீயது, இவை செய்யக்கூடியவை, இவை செய்யக்கூடாதவை என்று |
நவிலும் இவ்விரண்டினுள் நவின்றதே | கூறப்பட்டுள்ள வகையில் |
உலகிலுள்ளோர் நாடுவார் | உலக மாந்தர் செய்குவர் |
ஆதலின் நானுமே அவ்விதம் நாடினேன் | ஆகையினால் நானும் அந்த வகையிலேயே சென்றேன் |
நாடினாலும் | அவ்விதம் செய்தாலும் |
இன்றென்று சொல்லாமல் | இதோ, இன்று இல்லையென்றால் இன்னொரு பொழுது (வந்து அருள் செய்யலாம்) என்றில்லாமல் |
நினது திருவுள்ளமது | உன்னுடைய மனம் |
இரங்கி அருள் செய்குவாயேல் | இளகி எனக்கு (உடனே) அருள் செய்வாயானால் |
ஏழையேன் உய்குவேன் | ஏழையான நான் உய்விக்கப் படுவேன் |
மெய்யான மொழி | இது சத்தியம் |
இது உன் இதயம்அறியாதது உண்டோ | நீ இதை அறிய மாட்டாயா |
குன்றமெல்லாம் உறைந்து | குன்றுதோறும் வாழும் |
என்றும் அன்பர்க்கு அருள் | என்றும் அன்பர்க்கு அருள் செய்கின்ற |
குமார தேவனை அளித்த குமரி | குமரக் கடவுளை அளித்த குமரி(யே) |
மரகத வருணி | பச்சை வண்ணத்தினள்(ளே) |
விமலி | அழுக்கில்லாதவள்(ளே) |
பைரவி | பைரவராகிய சிவனின் பத்தினி(யே) |
கருணை குலவு கிரிராச புத்ரி | மலை ராஜனின் புத்ரி(யே), கருணை கொண்டவள்(ளே) |
மன்றல் மிகு நந்தன வனங்கள் | நறுமணம் சூழ்ந்த பூஞ்சோலைக்குள் |
சிறை அளி முரல | சிறையுண்டு ரீங்காரம் செய்யும் வண்டுகள் நிரம்பியுள்ள |
வளர் திருக்கடவூரில் வாழ் | திருக்கடையூர் ஸ்தலத்தில் வாழும் |
வாமி | (சிவனின்) வாம(இடது) பாகத்தில் உள்ளவளே |
சுபநேமி | நல்ல சக்ராயுதத்தை ஏந்தியவளே |
புகழ் நாமி | புகழ் பெற்ற நாமம் உள்ளவளே |
சிவசாமி மகிழ் வாமி | பரமசிவன் மகிழும் தேவியே |
அபிராமி உமையே | மிக்க அழகுடையவளே! உமா என்ற பெயருடையவளே ! |
விளக்கவுரை நன்றென்று, தீதென்று - தொன்று தொட்டு மனித மனத்தில் சிறிதாவது தெய்வீகத் தன்மை குடி கொண்டுள்ளது. இது மங்காமல் இருக்கவும், அவன் சமூகத்தில் செவ்வனே வாழவும், மற்ற மனிதர்களை வாழ விடவும், சில கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டான். அடிப்படையிலேயே சில செயல்கள் தீயவை என்றும் சில செயல்கள் நன்மை பயக்கும் என்றும் பாகுபாடு வைத்துக் கொண்டான். இதற்கும் மேம்பட்டு யோக வழி மேற்கொண்டவர்கள் மிக கட்டுப்பாடான வாழ்க்கையை மேற்கொண் டார்கள். இதையே பதஞ்சலி முனிவர் ‘யமம்’ ‘நியமம்’ என்று தலைப்பில் செய்யக் கூடியவை என்றும், செய்யக் கூடாதவை என்றும் வகைப்படுத்துகிறார். நாம் நல்ல செயல்களைச் செய்யவும் நல்லறிவைப் பேறவேண்டும். அதற்கு அவள் அருள் வேண்டும். இன்றென்று சொல்லாமல்- உடனேயே வந்து அருள் செய். இன்னொரு சமயம் என்று விடு, இல்லையேல் நான் தவறான வழியில் சென்று விடுவேனோ என ஐயமுறுகிறார். ஆண்டவன் காலம் தாழ்த்தாமல் வெகு விரைவில் அருள் புரிய வேண்டுகிறார்.
பாடல் மறிகடல்கள் ஏழையும் திகிரிஇரு நான்கையும் மாதிரக் கரி யெட்டையும் மாநாகம் ஆனதையும் மாமேரு என்பதையும் மாகூர்மம் ஆனதையு மோர் பொறியரவு தாங்கி வரு புவனமீ ரேழையும் புத்தேளிர் கூட்டத்தையும் பூமகளையுந் திகிரி மாயவனையும் அரையிற் புலியாடை உடையானையும் முறைமுறைக ளாயீன்ற முதியவர்களாய்ப் பழைமை முறைகள் தெரியாத நின்னை மூவுலகி லுள்ளவர்கள் வாலையென்று அறியாமல் மொழிகின்ற தேது சொல்வாய் அறிவுநிறை விழுமியர்தம் ஆனந்த வாரியே! ஆதி கடவூரின் வாழ்வே! அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி! அருள் வாமி! அபிராமியே!
பதவுரை
மறி கடல்கள் ஏழையும் | ஆரவாரம் செய்யும் ஏழு கடல்களையும் |
திகிரி இரு நான்கையும் | எட்டு திசைகளையும் |
மாதிர | நிலம், வானம் (முதலியவைகளயும்) |
கரி எட்டையும் | எட்டு திக் கஜங்களயும் |
மா நாகம் ஆனதையும் | பெரிய நாகமாகிய வாசுகியையும் |
மா மேரு என்பதையும் | மகா மேரு மலையையும் |
மா கூர்மம் ஆனதையும் | பெரிய ஆமையையும் |
ஓர் பொறி அரவு | ஒப்பற்ற அரவம் அச்சாக |
தாங்கிவரு புவனமீரேழையும் | தாங்கிக்கொண்டிருக்கும் இந்த பதினாலு உலகங்களையும் |
புத்தேளிர் கூட்டத்தையும் | தேவர்களையும் |
பூமகளையும் | லஷ்மீ தேவியையும் |
திகிரி மாயவனையும் | (கையில்)சக்கரமேந்தும் மாலவனையும் |
அரையில் புலியாடை உடையானையும் | இடையில் புலித்தோலை ஆடையாக உடுத்திக் கொண்டிருக்கும் சிவனையும் (உருத்திரனையும்) |
முறை முறைகளாய் ஈன்ற (நின்னை) | முறை தவறாமல் படைத்த (உன்னை) |
முதியவர்களாய் பழைமை முறைமை தெரியாத மூவுலகில் உள்ளவர்கள் | வயதானவர்களாயிருந்தும் பழைய நியதிகள் தெரியாத லோக மாந்தர்கள் |
நின்னை | உன்னை |
வாலை | இளம் (கன்னி) பெண்(தான்) |
என்று அறியாமல் | என்பதை அறியாது |
மொழிகின்றது ஏது சொல்வாய் | ஏதேதோ சொல்கின்றார்களே அதைஎன்னவென்று சொல்வது |
அறிவு நிறை விழுமியர்தம் | சிறந்த அறிவு படைத்த நல்ல மனிதர்களின் |
ஆனந்த வாரியே | ஆனந்த கடலே |
ஆதி கடவூரின் வாழ்வே | ஆதி கடவூர் என்ற திருத்தலதில் எழுந்தருளிய |
அமுதீசர் ஒரு பாகம் அகலாத | அம்ருதகடேஸ்வரரின் ஒரு பக்கத்தில் என்றும் நிலைத்திருக்கும் |
சுகபாணி | நன்மைதரும் கரத்தினளே |
அருள்வாமி | அருள்பாலித்து (சிவனின்)இடது பாகத்தில் அமர்ந்திருப்பவளே |
அபிராமியே | அழகுடையவளே |
விளக்கவுரை மானிடத்திற்கான நியதி அம்பிகைக்கு பொருந்தாது என்பது பல வகை நூல்கள் கற்றறிந்த பெரியோர்களுக்கும் தெரிவதில்லை. இந்த அண்ட சராசரங்களையும் அதற்கான நீதியிலும் முறைமையிலும் மும்மூர்த்திகளையும் படைத்த அம்பிகையை இவர்கள் ஏதோ சொல்கிறார்களே என்று துயரப் படுகிறார். அவள் என்றென்றைக்கும் குமரி தான். இந்த உண்மையை அறிந்த அறிவு படைத்தோர்களுக்கு அவள் ஆனந்த வாரிதியை அளிக்கிறாள். வாலை: பத்து வயது கன்னிப் பெண். காலமெல்லாம் அவள் அனைத்துக்கும் அன்னை. அதே வேளையில் அவள் கன்னியென மறை பேசும். எட்டுஅஷ்ட திக் கஜங்கள் - ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புட்பதந்தம், சார்வபௌமன், சுப்ரதீபன். ஏழு கடல்கள் : (1) உவர் நீர், (2) தேன்/மது, (3) நன்னீர், (4) பால், (5) தயிர், (6) நெய், (7) கரும்புச் சாறு