விருத்தம் ராகம் : பந்துவராளி
ஒரு நாள் இரண்டு நாள் அல்ல நான் உலகத்து
உதித்த இந்நாள் வரைக்கும்
ஒழியாத கவலையால் தீராத இன்னல் கொண்டு
உள்ளந் தளர்ந்து மிகவும்
அருநாண் இயற்றிட்ட விற்போல் இருக்கும் இவ்
வடிமை பாற் கருணை கூர்ந்து
அஞ்சேல் எனச் சொல்லி ஆதரிப்பவர்கள் உனை
அன்றியிலை உண்மையாக
இரு நாழிகைப் போதும் வேண்டாது, நிமிடத்தில்
இவ்வகில புவனத்தையும்
இயற்றி யருளுந் திறங்கொண்ட நீ ஏழையேன்
இன்னல் தீர்த்து அருளல் அரிதோ
வருநா வலூரர் முதலோர் பரவும் இனிய புகழ்
வளர்த் திருக்கடவூரில் வாழ் வாமி, சுபநேமி,
புகழ் நாமி, சிவசாமி மகிழ் வாமி, அபிராமி உமையே
பதவுரை
ஒரு நாள் இரண்டு நாள் அல்ல | ஓரிரண்டு நாள் அல்ல (பல நாட்கள்) |
நான் உலகத்து உதித்த இந்நாள் வரைக்கும் | நான் உலகத்தில் ஜனித்த நாள் முதல் இந்நாள் வரைக்கும் |
ஒழியாத கவலையால் | ஓய்ந்து போகாத மனக் கவலையால் |
தீராத இன்னல் கொண்டு | தொடர்ந்து கொண்டிருக்கும் துயரங்களால் |
மிகவும் உள்ளம் தளர்ந்து | மனது மிகவும் நொந்து போய் |
அரு நாண் இயற்றிட்ட விற் போல் இருக்கும் | அம்பை வில்லிலே வைத்து இழுத்த பின் அது வில்லை விட்டுச் பாய்ந்து செல்லும் வரை வில் ஒருவித இறுக்கத்திலேயே இருக்கும். |
இவ்வடிமைபாற் கருணை கூர்ந்து | (அம்மாதிரி மன அழுத்தத்தில் இருக்கும்) அடியேனிடம் கருணை செய்து |
அஞ்சேல் எனச் சொல்லி | பயம் வேண்டாம் என்று கூறி |
உண்மையாக ஆதரிப்பவர்கள் | உள்ளன்புடன் ஆதரவு கொடுத்து அணைப்பவர்கள் |
உனை அன்றியிலை | உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை |
இரு நாழிகைப் போதும் வேண்டாது | இரண்டு நாழிகைகள் அளவு கூட (உனக்கு) வேண்டாம் |
நிமிடத்தில் | ஓரு க்ஷணத்தில் |
இவ்வகில புவனத்தையும் | இந்த பிரபஞ்சத்தை |
இயற்றி அருளும் | தோற்றுவித்து அருள்பாலிக்கும் |
திறம் கொண்ட நீ | திறமை கொண்ட தாயே |
ஏழையேன் இன்னல் | என்னுடைய துன்பத்தை |
தீர்த்து அருளல் அரிதோ | ஒரு நொடியில் தீர்த்து வைக்க முடியாதோ, இது உனக்கு கடினமான செயலோ |
வரு நாவலூரர் முதலோர் | நாயன்மார்களில் தலைசிறந்த மூவரான ஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர் முதலியோர். தேவார ஆசிரியர்கள் மூவருள் நாவுக்கரசர் பிறந்த ஊர் திருவாமூர்; ஞானசம்பந்தர் தோன்றியது சீர்காழி. நாயன்மார்களில் திருநாவலூரை சொந்த ஊராக கொண்டவர்கள் சுந்தரமூர்த்தி நாயனார், அவருடைய தந்தை சடைய நாயனார் மற்றும் தாய் இசைஞானியார், சுந்தரரை எடுத்து வளர்த்தவரும் நாலலுார்ப் பகுதியை ஆண்டவருமாகிய நரசிங்க முனையரைய நாயனார் |
பரவும் இனிய புகழ் வளர் | போற்றிப் பாடிய |
வளர் திருக்கடவூரில் வாழ் | திருக்கடையூர் ஸ்தலத்தில் வாழும் |
வாமி | (சிவனின்) வாம (இடது) பாகத்தில் உள்ளவளே |
சுபநேமி | நல்ல சக்ராயுதத்தை ஏந்தியவளே |
புகழ் நாமி | புகழ் பெற்ற நாமம் உள்ளவளே |
சிவசாமி மகிழ் வாமி | பரமசிவன் மகிழும் தேவியே |
அபிராமி | மிக்கஅழகுடையவளே |
உமையே | உமா என்ற பெயருடையவளே! |
விளக்கவுரை
ஒரு நாள் இரண்டு நாள் அல்ல நான் உலகத்து உதித்த இந்நாள் வரைக்கும்: இங்கு பட்டர் தன்னைப்பற்றி மட்டும் அல்லாது மனிதப்பிறவியையே முன்வைத்து கேள்வி எழுப்புகிறார். இங்கு “நான்” என்பது ‘ego’வைக் குறிக்கும். இந்த மனத்தில் ‘நான்’ இருக்கும் வரை நாண் ஏற்றிய வில்போன்று தான் மனிதவாழ்க்கையும் இருக்கும். வில்லால் எய்துவிடப்பட்ட அம்பு தனது இலக்கை நோக்கி பயணத்த பின் தான் வில் தன் (ஆணவ) இறுக்கத்தை தளர்த்தி நிம்மதிப் பெருமூச்சு விடமுடியும். இந்த அகத்தில் ‘நான்’ என்பது சென்று விட்டால், அது சீராகி இறுக்கம் இற்று விட்ட நிலை எய்தும்.
இரு நாழிகைப் போதும் வேண்டாது நிமிடத்தில் இவ்வகில புவனத்தையும் இயற்றி அருளும்:. இந்த அண்டாண்ட புவனத்தை ஒரு நிமிடத்தில் அம்பிகை படைத்ததாக கூறப்படுகிறது. (“உன்மேஷ நிமிஷோத்பன்ன விபன்ன பு4வனாவலீ” - லலிதாசஹஸ்ரநாமம்). இவ்வரிய ஆற்றலைத்தான் முன்பே ஜகஜ்ஜாலசூத்ரி என்று கூறியிருக்கிறார். மந்திரவாதியின் செயல் போல் தான் இது. இப்பேற்பட்ட திறமை கொண்ட அம்பிகைக்கு என்னுடைய துன்பத்தை தீர்க்க ஒரு நொடி (க்ஷண நேரம்) போதாதா என்று ஏங்குகிறார். நாழிகைக்கு அடுத்த சிறிய அளவில் நிமையம் என்ற அலகு. இமைக்கின்ற அல்லது நொடிக்கின்ற நேரத்தை குறிப்பிடுவது. நிமையம்தான் திரிந்து நிமிடமானது. இன்றைக்கு நாம் குறிப்படும் நிமிடம் நிமையத்தைவிட கால அளவில் பெரியது.
பாடல் தாளம் கண்டசாபு
வாடாமல் உயிரெனும் பயிர் தழைத்து ஓங்கிவர அருள்மழை பொழிந்தும் இன்ப வாரிதியிலே நின்னதன் பெனுஞ் சிறகால் வருந்தாமலே யணைத்துக் கோடாமல் வளர் சிற்றெறும்பு முதல் குஞ்சரக் கூட்ட முதலான சீவ கோடிகள் தமக்குப் புசிக்கும் புசிப்பினைக் குறையாமலே கொடுத்து நீடாழி யுலகங்கள் யாவையும் நேயமாய் நின்னுதர பந்தி பூக்கும் நின்மலீ! அகிலங்களுக்(கு) அன்னை என்றோதும் நீலியென்று ஓதுவாரோ? ஆடாய நான்மறையின் வேள்வியால் ஓங்குபுகழ் ஆதி கடவூரின் வாழ்வே! அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி! அருள் வாமி! அபிராமியே!
பதவுரை
உயிர் எனும் பயிர் | பயிர் போன்ற உயிரானது |
வாடாமல் தழைத்து ஓங்கி வர | வாடாமல் உயிர்ந்து வளர |
அருள் மழை பொழிந்தும் | கருணை எனும் மழையினால் நனைந்தும் |
இன்ப வாரிதியிலே | மகிழ்ச்சிக் கடலில் |
நினது அன்பு எனும் சிறகால் | உன்னுடைய அன்பாகிய சிறகினால் |
வருந்தாமலே அணைத்து | (யாவரும்) வருத்தமுறாமல் அணைத்து |
சிற்றெறும்பு முதல் | சின்ன எறும்பு முதல் |
குஞ்சரக் கூட்டம் முதலான வளர் | யானை வரை வளரும் |
சீவ கோடிகள் தமக்கு | எல்லாவிதமான உயிரினங்களுக்கு |
புசிக்கும் புசிப்பினை | உண்ண வேண்டிய உணவினை |
கோடாமல் குறையாமலே கொடுத்து | மனம் கோணாமல் நிரம்ப அளித்து (அளிக்கின்றாய்) |
நீடாழி உலகங்கள் யாவையும் நேயமாய் | நீண்டு விரிந்திருக்கும் கடல்கள் சூழ்ந்த உலகங்களையும் அன்புடனே |
நின் உதர பந்தி பூக்கும் | உன் திரு வயிற்றில் முறையாக பூத்த அண்ட |
அகிலங்களுக்கு | சராசரங்களுக்கு |
அன்னை என்று ஓதும் | அன்னை என்று கூறப்படும் |
நின்மலீ | களங்கங்கள் இல்லாதவளே (உன்னை) |
நீலி என்று ஓதுவாரோ | (சம்ஹாரம் செய்யும்)காளி (துர்க்கை) என்றும் கூறுவார்களோ |
ஆடாய நான்மறையின் | அறிவு கூர்ந்த நான்கு வேதங்கள் (ஓதி புரியும்) |
வேள்வியால் ஓங்கு புகழ் | யாகங்களினால் உயர்ந்து புகழ் அடைந்த |
ஆதி கடவூரின் வாழ்வே | ஆதி கடவூர் என்ற திருத்தலதில் எழுந்தருளிய |
அமுதீசர் ஒரு பாகம் அகலாத | அம்ருதகடேஸ்வரரின் ஒரு பக்கத்தில் என்றும் நிலைத்திருக்கும் |
சுகபாணி | நன்மை தரும் கரத்தினளே |
அருள்வாமி | அருள்பாலித்து (சிவனின்)இடது பாகத்தில் அமர்ந்திருப்பவளே |
அபிராமியே | அழகுடையவளே! |
விளக்கவுரை
உயிர்களை படைத்து, இரட்சிக்கும் ஓர் அன்னையால் அவைகளை அழிக்க மனம் ஒப்பாது என்பது கவியின் திண்ணம். அவள் ‘அவ்யாஜ கருணாமூர்த்தி’ ஆவாள். காரணமில்லாமளே அருளைப் பொழியக் கூடியவள்
நீடாழி உலகங்கள் யாவையும் -பதினான்கு உலகங்களைத் தன் திருமேனியில் தரிப்பவள். அசைவற்ற நிலையிலிருந்து ஓர் அசைவு தோன்றியது. பரம்பொருளின் ஆற்றல் வெளிப்பட்டு,அண்டாண்ட கோடி ப்ரம்மாண்டங்கள் தோன்றியதால், அவளே படைத்தவள் ஆகிறாள்.