top of page

அபிராமி பதிகம் 9

Updated: Mar 22


விருத்தம் ராகம் : திலங்


எனது இன்னல் இன்னபடியென்று வேறொருவர்க்கு

இசைத்திடவும் அவர்கள் கேட்டு இவ்

வின்னல் தீர்த்து உள்ளத்துஇரங்கி நன்மைகள் செயவும்

எள்ளளவு(ம்) முடியாது நின்

உ(ன்)னத மருவுங் கடைக் கண்ணருள் சிறிது செயின்

உதவாத நுண்மணல்களும்

ஓங்கு மாற்றுயர் சொர்ண மலையாகும், அதுவன்றி

உயர் அகில புவனங்களைக்

கனமுடன் அளித்து முப்பத்திஆரண்டு அறங்களுங்

கவின் பெறச் செய்யு(ம்) நின்னைக்

கருது நல்லடியவர்க்கு எளிவந்து சடுதியிற்

காத்து ரட்சித்தது ஓர்ந்து

வனசநிகர் நின்பாதம் நம்பினேன் வந்தருள் செய்

வளர்த் திருக்கடவூரில் வாழ் வாமி, சுபநேமி,

புகழ் நாமி, சிவசாமி மகிழ் வாமி, அபிராமி உமையே







பதவுரை

எனது இன்னல் இன்னபடி என்று

எனது இடர்கள் இவை இவை தான் என்று

வேறு ஒருவர்க்கு இசைத்திடவும்

இன்னொருவருக்குக் கூறி

அவர்கள் கேட்டு

அவர்களும் அதைக் கேட்டு

இவ்வின்னல் தீர்த்து

இந்த துயர் நீக்க

உள்ளத்து இரங்கி நன்மைகள் செயவும்

உளம் கனிந்து எனக்கு உதவிபுரிய

எள் அளவும் முடியாது

இம்மி அளவும் இயலாது

​நின் உ(ன்)னத மருவும் கடைக் கண்ணருள் சிறிது செயின்

உனது அழகிய கடைக்கண் பார்வை சிறிது பட்டு

​உதவாத நுண் மணல்களும்

உபயோகமில்லாத மணல் திவலைகளும்

ஓங்கு மாற்று உயர் சொர்ண மலையாகும்

மதிப்பு மிக்க தங்க மலையாக மாறி விடும்

அது அன்றி

அது அல்லாமல்

உயர் அகில புவனங்களை

அனைத்து உலகங்களை

கனமுடன்

பெருமையுடன்

முப்பத்திரண்டு அறங்களும் அளித்து

தர்ம நெறியுடன் வாழ வேண்டிய முறைகளும் கொடுத்து

கவின் பெறச் செய்யும்

அழகு பெறச் செய்யும்.

நின்னை கருது(ம்) நல் அடியவர்க்கு

உன்னை நினைக்கும் நல்ல அடியவர்களுக்கு

எளி வந்து

எளிதாகவே வந்து

சடுதியில் காத்து

சீக்கிரமாகவே காப்பாற்றி(யதையும்

இரட்சித்தது ஓர்ந்து

பாதுகாத்த(தையும்) நினைவு கூர்ந்து

வனச நிகர் நின் பாதம் நம்பினேன்

தாமரையொத்த நின் பாதங்களை நம்பினேன்

வந்து அருள் செய்

வந்து ரட்சிப்பாயாக

வளர் திருக்கடவூரில் வாழ்

திருக்கடையூர் ஸ்தலத்தில் வாழும்

வாமி

(சிவனின்) வாம(இடது) பாகத்தில் உள்ளவளே

சுபநேமி

நல்ல சக்ராயுதத்தை ஏந்தியவளே

புகழ் நாமி

புகழ் பெற்ற நாமம் உள்ளவளே

சிவசாமி மகிழ் வாமி

பரமசிவன் மகிழும் தேவியே

அபிராமி

மிக்க அழகுடையவளே

​உமையே

உமா என்ற பெயருடையவளே


விளக்கவுரை

எனது இன்னல் இன்னபடி என்று வேறு ஒருவர்க்கு இசைத்திடவும்: மனிதனின் சாதாரண சுபாவத்தை இங்கு பளிங்கு பிரதிபலிப்பது போல் கூறுகிறார். மனம் துன்பத்தில் ஆழ்ந்திருக்கும் சமயம் அதை மற்றவரிடம் தெரிவிக்கத் துடிக்கும். ஒவ்வொருவருக்கும் துன்பத்திற்கான காரணம் தான் மாறுகிறதே தவிர துன்பம் என்ற அனுபவம் என்றும் மாறுவதில்லை. மனிதன் தான் துன்பப்படுவதிலும் ஒரு விதமான ‘இன்பத்தை’ அனுபவிக்கின்றரோ என்ற ஐயப்பாடுத் தோன்றுகிறது. இல்லையென்றால் ஏன் துன்பத்திற்கான காரணத்தை விலக்க முயற்சிச் செய்வதில்லை? ஆதி தெய்வீக காரணத்தைத் தவிர, மற்ற காரணங்களைத் தவிர்க்க முயற்சியாவது செய்ய வேண்டும் அல்லவா? ஆனால் அப்படி செய்வதில்லை. தன் துன்பத்தை வெளிப்படையாக இன்னொருவரிடம் சொல்லி அவர் தரும் ஆறுதலிலேயே ஒரு சுகம் இருப்பதாக கருதியே காரணத்தை விலக்க முயற்சி செய்வதில்லையோ என்று கூட தோன்றுகிறது.


உதவாத நுண் மணல்களும் ஓங்கு மாற்று உயர் சொர்ண மலையாகும்: அம்பிகை விரும்பினால் நடக்காதது எது? அண்ட சராசரங்களையும் ஆக்கி அழிப்பவள் அல்லவா அவள்!


முப்பத்திரண்டு அறங்கள்: ஆதரவற்றவர்களுக்கு ஆடை அளிப்பது, பசுவுக்கு வாயுறை அளிப்பது, திருமுறை ஓதுவாருக்கு உணவு அளிப்பது போன்றவை.


பாடல் தாளம் : கண்டசாபு


சலதி யுலகத்திற் சராசரங்களை யீன்ற

தாயாகினா லெனக்குத்

தாயல்லவோ? யான் உன் மைந்தனன்றோ? எனது

சஞ்சலம் தீர்த்து நின்றன்

முலைசுரந் தொழுகு பாலூட்டி என்முகத்தை உன்

முன்தானை யால் துடைத்து

மொழிகின்ற மழலைக் குகந்து கொண்டிள நிலா

முறுவல் இன்புற் றருகில் யான்

குலவி விளையாடல்கொண்டு அருள்மழை பொழிந்து அங்கை

கொட்டி வாவென்(று) அழைத்துக்

குஞ்சரமுகன் கந்தனுக்(கு) இளையன் என்றெனைக்

கூறினால் ஈனம் உண்டோ?

அலைகடலிலே தோன்றுமாறாத அமுதமே!

ஆதி கடவூரின் வாழ்வே!

அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!அருள் வாமி! அபிராமியே!




பதவுரை


சலதி உலகத்தில்

கடல் சூழ்ந்த இந்த உலகத்தில்

சராசரங்களை ஈன்ற

அனைத்து உலகங்களையும் படைத்த

தாயாகினால்

(நீ)அன்னை(ஜகன் மாதா) என்பதால்

எனக்குத் தாய் அல்லவோ?

எனக்கும் அம்மா தானே

யான் உன் மைந்தன் அன்றோ

நான் உனது மகவுதானே

எனது சஞ்சலம் தீர்த்து

என்னுடைய உள்ளத் தடுமாற்றத்தை விலக்கி

நின்றன் முலை சுரந்து ஒழுகு பால் ஊட்டி

உன் ஸ்தனங் களிலிருந்து சுரக்கும் ஞான அமுதை உண்ணச்செய்து (அப்படி உண்ணச்செய்யும் பொழுது வழியும் பாலை)

என் முகத்தை

என்னுடைய முகத்தை

உன் முந்தானையால் துடைத்து

உன் சீலைத்தலைப்பால் துடைத்து

மொழிகின்ற மழலைக்கு

மழலை மொழி பேசும் என் மேல்

உகந்து கொண்டு

விருப்பம் கொண்டு

இள நிலா முறுவல் இன்புற்று

இளம் சந்திரனை போல் பிரகாசிக்கும் புன்னகை சிந்தி பரவசம் அடையும் பொழுது

அருகில்

(உன்) அருகில் (உன் இரு குமாரர்களுடன்)

யான் குலவி விளையாடல் கொண்டு

நான் உலாவி விளையாடும் தருணத்தில்

அருள் மழை பொழிந்து

கருணை காட்டி (வாத்ஸல்ய பாவத்துடன்)

அங்கை கொட்டி வா என்று அழைத்து

அழகான கைகளை தட்டி (ஒசைசெய்து நீ) வா என்று அழைத்து

குஞ்சர முகன், கந்தனுக்கு இளையன்

யானைமுக விநாயகனுக்கும், முருகனுக்கும் பின்பிறந்தவன் (இவன்)

என்று எனைக் கூறினால்

என்றவாறு என்னைச் சொன்னால்

ஈனம் உண்டோ

(அது) உனக்கு இழுக்காகுமோ

அலை கடலிலே தோன்றும் மாறாத அமுதமே

பாற்கடலில் உதித்த மாறுபடாத அமுதம் போன்றவளே

​அமுதீசர் ஒரு பாகம் அகலாத

அம்ருதகடேஸ்வரரின் ஒரு பக்கத்தில் என்றும் நிலைத்திருக்கும்

சுகபாணி

நன்மைதரும் கரத்தினளே

அருள்வாமி

அருள்பாலித்து (சிவனின்)இடது பாகத்தில் அமர்ந்திருப்பவளே

அபிராமியே

அழகுடையவளே!


விளக்கவுரை


தயாசதகத்தில் வேதாந்த தேசிகர் வேங்கடேசனின் அருள் பெற தாயாரை முன் வைத்து போற்றுகிறார். தந்தை சற்று முன்பின் இருந்தாலும், அன்னை என்றுமே மன்னிக்கும் குணம் கொண்டவள் அல்லவா? அதைப் போலவே இப்பதிகத்தில் கவிஞர் அம்பிகையை ஏற்று சரண் புகுந்தபின் தன்னை அவள் பெற்ற பிள்ளையாகவே பாவிக்கிறார். அதற்குப் பிறகு அவருடைய அனுபூதி நிலை, கற்பனைகளை எல்லாம் கடந்து விடுகிறது. ஞானசம்பந்தரைப் போலவே தான் அன்னையின் அருட்பாலை பருகுவதாகவும், பின் அன்னை அவளுடைய புடவைத் தலைப்பால் தன் வாயைத் துடைத்து விடுவதாகவும், அது மட்டுமல்லாது விநாயக பெருமானுக்கும், முருக பெருமானுக்கும் பிறகு பிறந்த மூன்றாவது குமாரனாக தன்னை பாவித்துக் கொண்டு அவர்களுடன் தானும் கைலாயத்தில் விளையாடுவதாகவும், உமையம்மை தன்னை ‘வா’ என்று அழைப்பதாகவும் உள்ளக்கண் கொண்டு ஆனந்திக்கிறார். கற்பனைக்கும் எட்டாத அற்புத காட்சியொன்றை கவின்பெறக் காட்டுகிறார்.


பால் ஊட்டி : உலகில், தாய் தன் குழந்தைக்குத் தன் முலைப்பால் கொடுத்து வளர்ப்பாள். அம்பிகையோ தத்துவங்களைப் பற்றிய ஞானமாகிய திருமுலைப்பால் கொடுத்து சேதனர்களை நல்வழி பெற செய்கிறாள்.

பச்சிளம் பாலகனுக்கு தன் தாயின் மடியைத் தவிர வேறோர் ஆனந்தமும் வேண்டாம். அவள் முந்தானையின் சுவாசத்தை எல்லாப் பொருள்களின்றும் தனிமைப் படுத்தி அதையே பிடித்துக் கொள்ளவும் செய்யும்.

ஜகன்மாதாவான உனக்கு மும்மூர்த்திகள் முதல் மானிடர்கள் வரை எல்லோரும் குழந்தைகள்தான்.ஆனால் மூடனான பிள்ளையை தாய்க்குச் செல்லப் பிள்ளை என்று உலகோர் சொல்வார்களே! ஆதலால் நான் தான் உனக்குச் செல்லப் பிள்ளை. என்னை எப்போது எடுத்து உன் மடியில் வைத்து லாலனை செய்யப் போகிறாய்? என்று ஏக்கத்துடன் வினவுகிறார்.



94 views0 comments

Recent Posts

See All

அபிராமி பதிகம் 10

விருத்தம் ராகம் : மனோலயம் கருநீல வடிவமார் மாடேறி உத்தண்ட கனதண்ட வெம் பாசமுங் கைக்கொண்டு சண்டமா காலன்முன் எதிர்க்கமார்க் கண்டன் வெருண்டு நோக்க இரு நீலகண்ட னெனும் நின்பதியை உள்ளத்தில் இஆன்ப

அபிராமி பதிகம் 8

வஞ்சகக் கொடியோர்கள் நட்புவேண்டாமலும் மருந்தினுக்கா வேண்டினும் மறந்தும் ஓர் பொய்மொழி சொலாமலும் தீமையாம் வழியினிற் செல்லாமலும் விஞ்சு நெஞ்சதனிற் பொறாமை தரியாமலும் வீண் வம்பு புரியாமலும் மிக்க பெரியோர்கள

bottom of page