அபிராமி பதிகம் 3
விருத்தம் ராகம்: ஹிந்தோளம்
வாச மலர் மருவளக பாரமும் தண்கிரண
மதிமுகமும் அயில் விழிகளும்
வள்ளநிகர் முலையு மான்நடையு நகை மொழிகளும்
வளமுடன் கண்டு மின்னார்
பாச பந்தத்திடை மனங் கலங்கித் தினம்
பல வழியும் எண்ணி யெண்ணிப்
பழிபாவம் இன்னதென்று அறியாமல் மாயப்ர
பஞ்ச வாழ்வு உண்மை என்றே
ஆசை மேலிட்டு வீணாக நாய் போல் திரிந்து
அலைவதல்லாமல் உன்றன்
அம்புயப் போதெனுஞ் செம்பதந் துதியாத
அசடன் மேற்கருணை வருமோ
மாசிஆலாது ஓங்கிய குணாகரி! பவானி! சீர்
வாமி! சுபநேமி! புகழ்நாமி! சிவசாமி மகிழ்
வாமி! அபிராமி உமையே!
பதவுரை
வாச மலர் மருவளக பாரமும் | வாசனை மலர்கள் சூடிய திரண்ட கூந்தலை உடையவளும், |
தண்கிரண மதிமுகமும் | சீதள கிரணங்கள் பொழியும் சந்திரனைப் போன்ற முகக் காந்தி உடையவளும் |
அயில் விழிகளும் | அழகிய கண்களும் |
வள்ள நிகர் முலையும் | வள்ளல் தன்மை கொண்ட குசமும் |
மான் நடையும் | மானை ஒத்த அழகு நடையும் |
நகை மொழிகளும் | புன்சிரிப்புடன் கூடிய பேச்சும் |
வளமுடன் கண்டு | மகிழ்ச்சியுடன் பார்த்து |
மின்னார் பாசபந்தத்திடை மனம் கலங்கி | முன் வினைகளால் சொந்த பந்தங்களில் கட்டுண்டு, அதனால் வருந்தி |
தினம் பல வழியும் எண்ணி எண்ணி | இதிலிருந்து விடுபட வேண்டி பல பாதைகளையும் தேடித் தேடி |
பழி பாவம் இன்னதென்று அறியாமல் | எது பாவம் எது பழிச் செயல் என்று தெரியாமல் (இறுதியில் தோற்றுப் போய்) |
மாய ப்ரபஞ்ச வாழ்வு | இன்று இந்த ப்ரபஞ்சத்தில் வாழும் வாழ்க்கைதான் உண்மை - நிதர்சனம் என்ற முடிவுக்கு வந்து |
ஆசை மேலிட்டு வீணாக நாய் போல் திரிந்துஅலைவதல்லாமல் | உலகாயத ஆசைகளை பூர்த்தி செய்வதிலேயே அலைந்து திரிந்து நாயினும் கேடாகி (அப்படி) உழலாமல் |
உன்றன் அம்புயப் போது எனும் செம்பதம் | உன்னுடைய தாமரை போன்ற திருவடியை |
துதியாத அசடன் மேற் கருணை வருமோ | போற்றிப் புகழாத இந்த அசடன் மேல் உன் கருணை வருமோ? |
மாசு இலாது ஓங்கிய குணாகரி | குற்றமற்ற, உயர்ந்த குணங்களைக் கொண்டவளே |
பவானி | பவானியே |
சீர் வளர் | பெருமையான |
திருக்கடவூரில் வாழ் | திருக்கடையூர் ஸ்தலத்தில் வாழும் |
வாமி | (சிவனின்) வாம(இடது) பாகத்தில் உள்ளவளே |
சுபநேமி | நல்ல சக்ராயுதத்தை ஏந்தியவளே |
புகழ் நாமி | புகழ் பெற்ற நாமம் உள்ளவளே |
சிவஸ்வாமி மகிழ் வாமி | பரமசிவன் மகிழும் தேவியே |
அபிராமி | மிக்க அழகுடையவளே |
உமையே | உமா என்ற பெயருடையவளே |
பொருளுரை
நகை மொழிகள்: தேவியின் பேச்சு மிகவும் மென்மையானதும், புன்னகையுடன் கூடியதுமாகும். இதையே ஆதி சங்கரர் “ விபஞ்ச்யா கா3யந்தி” என்ற ஸெளந்தர்யலஹரி ஸ்தோத்திரத்தில் மிக அழகாக எடுத்துரைக்கிறார். தேவி ராஜ ராஜேச்வரியாக கொலு மண்டபத்தில் எழுந்தருளி இருந்தபோது ஸரஸ்வதி தேவி சிவஸ்துதி செய்கிறாள். அப்பொழுது அம்பிகை பதியின் பெருமை கேட்டு புளகாங்கிதம் அடைந்து ‘ஸாது’ (நல்லது) என கூற ஆரம்பித்ததுமே, அவளுடைய மதுரமான மொழியினால் வாணியின் வீணா நாதம் மங்கியது. ஸரஸ்வதி வெட்கி தன் வீணையை உறைக்குள் போட்டு மூடி விடுகிறாள். தேவியின் வாக்கு அத்தனை மதுரம். நாய் போல் - நாய் ஓயாமல் அலைவது மட்டும் இல்லை, அதற்கு மற்றொரு குணமும் உண்டு. எலும்புத்துண்டை கடைசி வரை கடித்துக் கொண்டு இருக்கும். சுவை ஒன்றும் இராது. ஒரு கட்டத்தில் தன் ஈறுகளில் வழியும் உதிரத்தையே சுவைக்க ஆரம்பித்துவிடும். மனித வாழ்வும் இதே போல்தான்.
பவானி - பவம் என்பது ஸம்ஸாரம். அதற்கு உயிர் கொடுப்பவளாய் இருப்பவள் பவானி. ப4வன் (भवन् - உலக உற்பத்திக்கு காரணமானவன்) எனப் பெயர் பெற்ற பரமசிவனுடைய பத்தினி பவானி
பாடல் தாளம் : கண்டசாபு
மகரவார் குழல் மேல்அடர்ந்து குமிழ் மீதினில்
மறைந்து வாளைத் துறந்து
மைக்கயலை வேண்டிநின் செங்கமல விழியருள்
வரம் பெற்ற பேர்க ளன்றோ
செகமுழுதும் ஒற்றைத் தனிக்குடை கவித்து மேற்
சிங்கா தனத்தி லுற்றுச்
செங்கோலும் மனுநீதி முறைமையும் பெற்றுமிகு
திகிரியுல காண்டு பின்பு
புகர் முகத்(து) ஐராவதப் பாகராகி நிறை
புத்தேளிர் வந்து போற்றிப்
போக தேவேந்திரன் எனப் புகழ விண்ணில்
புலோமிசை யொடுஞ் சுகிப்பர்
அகர முதலாகி வளர் ஆனந்த ரூபியே!
ஆதி கடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி! அருள் வாமி! அபிராமியே!
பதவுரை
மகர வார் குழல் மேல் | அலங்கார முடி அணிந்த பெண்கள் மீது (இச்சை பூண்டு) |
அடர்ந்து | (அதனால்) வருந்தி |
குமிழ் மீதினில் மறைந்து | நீர்க் குமிழ் போன்ற இந்த வாழ்வில் மறைந்து போய்(விடாமல்) |
வாளைத் துறந்து | (பாசக்) கயிற்றை நீக்கி |
மைக் கயலை வேண்டி | (உன்) மை தீட்டிய அழகிய கண்களை நோக்கி |
நின் செங்கமல விழி | உன் சிவந்த பத்மம் போல் விழிகளின் |
அருள் வரம் பெற்ற பேர்கள் | கருணை பெற்ற அன்பர்கள் |
செக முழுதும் | உலகனைத்தும் |
ஒற்றைத் தனிக் குடை கவித்து | ஒரே குடையின் கீழ் |
மேற்சிங்கா தனத்தில் உற்று | சிம்மாசனத்தின் மேல் அமர்ந்து |
செங்கோலும் | அரசாணையைப் பிறப்பிக்கும்படியும் |
மனு நீதி முறைமையும் பெற்று | நீதி வழுவாமல் ஆட்சி செய்ய வேண்டிய முறைகளைப் பெற்று (தெரிந்து கொண்டு) |
மிகு திகிரி உலகு ஆண்டு பின்பு | சுழலும் இப்பூமியை ஆட்சி செய்து, பின்னர் |
புகர் முகத்து ஐராவதப் பாகர் | வெள்ளை யானையாகிய ஐராவதத்தை செலுத்தும் இந்திரன் |
ஆகி | (இந்திரப் பதவியை) அடைந்து |
நிறை புத்தேளிர் வந்து போற்றி | எல்லா தேவர்களும் வந்து துதி செய்து |
போக தேவேந்திரன் எனப் புகழ | இவன் தேவர்களுக்கெல்லாம் இந்திரன் தானோ என்று புகழ |
விண்ணில் புலோமசையொடும் | தேவலோகத்தில் (தனக்குரிய ராணியாகிய) இந்திராணியுடன் |
சுகிப்பர் அன்றோ | சுகமாக இருப்பர் அன்றோ |
அகரம் | அந்தணர் வாழும் இடத்தை |
முதலாகி வளர் | முதன்மையாகக் கொண்டு விளங்குகின்ற |
ஆதி கடவூரின் வாழ்வே | ஆதி கடவூர் என்ற திருத்தலதில் எழுந்தருளிய |
அமுதீசர் ஒரு பாகம் அகலாத | அம்ருதகடேஸ்வரரின் ஒரு பக்கத்தில் என்றும் நிலைத்திருக்கும் |
சுகபாணி | நன்மைதரும் கரத்தினளே |
அருள்வாமி அபிராமியே | அருள்பாலித்து (சிவனின்)இடது பாகத்தில் அமர்ந்திருப்பவளே! அழகுடையவளே! |
விளக்கவுரை
உலக இச்சையில் மூழ்குபவர்களுக்கு பிறப்பும் இறப்பும் நிச்சயமாகி விடுகிறது. இவற்றையெல்லம் நீக்குவது அபிராமியின் கடைக்கண்களே. அது மட்டுமல்ல, அவள் கயல்மீன் போன்ற கண்களின் கடாட்சத்திற்கு பாத்திரமாகிவிட்டால், அந்த சாதகன், இந்த அகில புவனத்திற்கும் சக்கரவர்த்தியாகி, பின்னர் தேவேந்திரப் பதவியையும் அடைகிறான்.