பரம் பொருள்
Updated: Oct 9, 2022
உலகில் உள்ள அனைத்துப் பொருள்களும் அழியும். அழியக் கூடிய அனைத்தும் பொய். அழியாத ஒன்றே பரம்பொருள். அதுவே மெய்ப்பொருள். அது தோன்றுதல், அழிதல், வளர்தல், தேய்தல் முதலிய மாற்றங்களுக்கு உட்படாது.

அந்த ஒப்பற்ற உயர்ந்த பரம்பொருளை சொல்லாலும் பொருளாலும் மனித அறிவுக்கு தோன்றிய அறிவாலும்.அவர்கள் கண்டுபிடித்த அளக்கும் கருவிகளாலும் அளக்கவோ. கணக்கிடவோ. பார்க்கவோ முடியாது. அந்த பரம்பொருள் எல்லா ஆன்மாக்களிலும் உள் ஒளியாக உள்நின்று இயங்கிக் கொண்டுள்ளது.
இவ்வாறு வாக்கு மனத்திற்கு அப்பாற்பட்டவனாய், அறிதற்கரிய நுண்ணிய அறிவுப் பொருளாய் இருத்தல் பற்றி அவன் சிவம் என்பதற்குச் சித்து என்பது பொருள். அவனருளாலே கண்டு அனுபவிக்கப்படும் பொருளாய், என்றும் மாறுதல் உறாமல் நிலைத்த செம் பொருளாய் உள்ளமை பற்றி அவன் சத்து எனப்படுவான்.
சைவ சித்தாந்தம் தோன்றுதல், அழிதல், வளர்தல், தேய்தல் முதலிய மாற்றங்களுக்கு உட்படுகின்ற பொருள்களை அசத்து என்று குறிப்பிடும். அஃதாவது, காணப்படுகின்ற உலகப் பொருளனைத்தும் இவ்விலக்கணப்படி அசத்தேயாகும்.
பதியாகிய முதற்பொருள் ஒரு வகையாலும் உணரப்படாத பொருளும் அன்று; உலகம் போல உணரப்படும் பொருளும் அன்று. சிவமாகிய அச் சத்து ஒரு வகையில் உணரப்படாததாய், பிறிதொரு வகையில் உணரப்படுவதாய் நிற்கும் இரு தன்மையும் உடையது.
இறைவன் அறியப்படுபவன் என்று கூறினால், உயிர்களால் அறியப்படுகின்ற ஏனைய பொருள்கள் நிலையாது அழிதல் போல அவனும் நிலையாத பொருளாய், அசத்தாகி விடுவான். ஆகையால் அவன் நம்மறிவால் அறியப்படுபவன் அல்லன்.
இனிமுதல்வன் எவ்வாற்றாலும் அறியப்படாதவன் என்று கூறினால், அறியப்படாத இல்பொருள்கள் போல அவனும் இல்பொருளாகி விடுவான். ஆகையால் அவன் அறியப்படாதவன் என்று கூறுதலும் கூடாது.
வேறு எவ்வாறு இதற்கு விளக்கம் காண்பது?
முதல்வன் அறியப்படாமையும், அறியப்படுதலும் ஆகிய இரு தன்மையும் உடையன் என்பதே இதற்கு விளக்கம். அறியப்படாமை என்றால் , நமது கருவி காரணங்களால் வருகின்ற பாச ஞானத்திற்கும் பசு ஞானத்திற்கும் (அதாவது வாக்கு மனத்திற்கும்) எட்டாது நிற்கும். அறியப்படுதல் என்றால் பதிஞானமாகிய திருவருளால் மட்டுமே அவனை அறிய முடியும்.