top of page

அமிர்தம் கடைதல் - கதை விளக்கம்

Updated: Oct 10, 2022


தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் எடுப்பதற்காக பாற்கடலை கடைந்த கதை எல்லாருக்கும் பரிச்சயம் ஆனது என்றாலும் இந்த கதையை விளக்கமாக பார்ப்போம்.ஒரு காலத்தில் துர்வாச முனிவர் தேவர்களின் அரசனான இந்திரனுக்கு சிறந்த மலர் மாலை கொடுத்தார். இந்திரன் அலட்சியமாக அந்த மாலையை வாங்கி தன்னுடைய யானைக்கு அணிவித்தான். யானையோ அதை தன் தும்பிக்கையால் பிய்த்து எறிந்தது. இதை பார்த்து கொண்டு இருந்த முனிவர் கடுங்கோபம் கொண்டு தேவர்களின் வலிமையும் அதிர்ஷ்டமும் மறைந்து போகும்படி சாபம் அளித்தார். அந்த சாபத்தின் மூலம் தேவர்கள் மிகவும் வலிமை குறைந்தவர்கள் ஆகி விட்டனர். இதனால் தேவர்கள் படை அசுர தலைவன் மஹாபலியின் படையெடுப்பில் தோற்று போனது. எல்லா அண்ட சராசரமும் அசுரர்கள் ஆட்சிக்கு கீழ் வந்தது.


தோற்று போன தேவர்கள் பகவான் விஷ்ணுவை நோக்கி பிரார்தித்தனர். இவர்களின் வலிமையை மறுபடியும் மீட்டு கொண்டு வர அமிர்தம் ஒன்றே வழியாக இருந்தது. விஷ்ணு பகவானும் அவர்களுக்கு அமிர்தத்தை பெறுவதற்கு உதவ முன்வந்தார். பாற்கடலை கடைவதற்கு மந்தார மலை பாற்கடலுக்கு நடுவே வைக்க பட்டது. வாசுகி என்ற பாம்பு மந்தார மலைக்கு நடுவே கட்டப்பட்டது. தேவர்கள் வாலை பிடிக்க அசுரர்கள் பாம்பின் தலையை பிடித்து கொண்டு பாற்கடலை கடைய ஆரம்பிததார்கள். ஆனால், மந்தார மலை கடலுக்கு இடையில் நிலையாக நில்லாமல் நழுவி கடலுக்கு அடியில் செல்ல ஆரம்பித்தது. பகவான் விஷ்ணு ஒரு ஆமையின் உருவம் கொண்டு அந்த மலையை தாங்கி பிடித்தார்.


கடல் கடையப்படும் போது, பல பொருட்கள் வெளிவர தொடங்கின. முதலில் மிகவும் கொடிய ஆல கால விஷம் வெளி வந்து தன் நெடியால் எல்லோரையும் தாக்கி பலரை மயக்கமடைய செய்தது. தேவர்களின் துன்பங்களை போக்க, சற்றும் யோசிக்காமல் சிவ பெருமான் ஆல கால விஷத்தை, தன் வாய் வழியே பருக ஆரம்பித்தார். பார்வதி தேவி, சிவபெருமானின் கழுத்து பகுதியை பிடிக்க, அந்த விஷம் சிவபெருமானின் கழுத்துலேயே தங்கியது. கொடிய விஷத்தின் கொடுமை மறைந்தது. இனி, ஐஸ்வர்யங்கள் கடலில் இருந்து வெளிப்பட தொடங்கின.


விஷத்துக்கு அடுத்த படியாக, உச்சிஷிரவஸ், கௌச்துபம் , சந்திரன், லக்ஷ்மி தேவி, அப்சரஸ் தேவதைகள், காம தேனு, பாரிஜாதம், கற்பகவிருக்ஷம், ஐராவதம், எல்லாம் வந்தன. கடைசியாக, தன்வந்திரி தேவன் அமிர்த குடுவையுடன் வெளியே வந்தார்.


அமிர்தம் கிடைத்தவுடன் யார் முதலில் பருகுவது என்று தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போட்டி. விஷ்ணு பகவான் அழகிய "மோகினி" என்ற பெண் வடிவம் எடுத்து அமிர்தம் பகிர்ந்து கொடுக்க முன் வந்தாள். மோகினி தேவர்கள் மெலிந்து கிடப்பதை காரணம் காட்டி முதலில் தேவர்களுக்கு அமிர்தம் கொடுத்து விடலாம் என கருத்து கூறினாள். அசுரர்களும் ஏற்றுக்கொள்ள, முதலில் தேவர்களுக்கு அமிர்தம் பரிமாறப்பட்டது. இதில் சந்தேகம் அடைந்து, தேவர்களின் உள்ளே அமர்ந்து தானும் அமிர்தம் பருகி விட்டான், அசுரனான ராகு. இதை, சூரியனும், சந்திரனும் கண்டுபிடித்து, விஷ்ணுவிடம் கூறினார். உடனே, ராகுவின் தலையை, தன் சக்ரஆயுதத்தால், வெட்டி எறிந்தார். பின், மோகினி, தன் மாயையில், அசுரர்களுக்கு அமிர்தம் கொடுப்பது போல ஒரு பிரமையை ஏற்படுத்தி, உண்மையில் அமிர்தத்தை தேவர்களுக்கு மட்டுமே கொடுத்தாள்.


இந்த கதையில் வரும் எல்லா கதா பாத்திரங்களும் ஒரு உருவகம். அதன் விளக்கங்கள்,


இந்திரன் - இந்திரியங்கள் (உடல் மற்றும் உறுப்புகள்)

தேவர்கள் - நல்ல பண்புகள்

அசுரர்கள் - கெட்ட பண்புகள்

துர்வாசரின் மாலை - சான்றோர்கள் கருத்து

இந்திரனின் யானை - புலன்கள்

விஷ்ணு பகவான் - ஆத்மா

பாற்கடல் - மனது

பர்வத மலை மற்றும் வாசுகி பாம்பு - மனதை அலச உதவும் சாதனங்கள்

ஆமை (கூர்மம்) - புலன்களை அடக்கும் யுக்தி

ஆல கால விஷம் - காம இச்சைகள்

சிவபெருமான் - குரு

மகாலட்சுமி - ஐஸ்வர்யம்(செல்வங்கள்) மற்றும் மகிழ்ச்சி

மோகினி - புலன் இன்ப விஷயம்

அமிர்தம் - முக்தி (சமாதி) நிலை.


எப்போது துர்வாசர் போன்ற சான்றோர்களின் சொல்படி கேளாது, அவர்கள் அளிக்கும் மலர்மாலை போன்ற அறிவு புகட்டும் சான்றுகளை நம் மனம் மற்றும் உடல் (இந்திரன்) புறக்கணிக்கிறதோ, அப்போது, அது தாழ்ந்த கீழான நிலை பெற்று பலவீனம் அடைகிறது. தனக்கு எதனால் இந்த பலவீனம் என தன்னை (ஆத்மா) தானே விளக்கம் கேட்டுக்கொள்ளும் போது, பகவான் விஷ்ணு (ஆத்மா) நம் மனதை கடைந்து முக்தி என்னும் அமிர்த (என்றும் அழியாத) நிலை அடைய நம்மை தூண்டுகிறார்.


நம் புலன்களை அடக்காமல் மனதை ஆராய்வது(கடைவது) என்பது இயலாத காரியம். நம் 5 புலன்களையும் (ஆமை எப்படி தன் உடலை, தன் ஓட்டில் மறைக்கிறதோ அப்படி) அடக்கி இதை செயல்படுத்த வேண்டும். புலன்கள் அடக்கப்படும் போது தான் மனது ஒழுங்காக கடையப்படுகிறது. ஆக கட்டுப்பாடு என்னும் கூர்மம் (ஆமை), மனதில் உருவாகும் போது தான், அதன் கடைதல் நிகழ்ச்சி வெற்றி பெரும்.


நம் மனதில் நல்லவை கெட்டவை என்று எல்லா எண்ணங்களும் ஒளிந்து கொண்டு, அது கடையப்படும் போது ஒவ்வொன்றாக வெளிவருகிறது. முதலில் நம் மனதில் உள்ள காம இச்சைகள் (ஆல கால விஷம்) ஒவ்வொன்றாக வெளிவருகிறது. அதனால், நம் நல்ல பண்புகள் (தேவர்கள்) எல்லாம் காம இச்சைகளிடம் சிக்கி துன்புறுகிறார்கள் . குரு என்னும் தக்ஷிணா மூர்த்தியான சிவபெருமான் நம் காம இச்சைகளை அடக்கி, நம்மை அந்த ஆல கால விஷத்தில் இருந்து காத்து அருள்கிறார். பின் மனது மேலும் கடையப்படும் போது, மற்ற சில நல்ல குணங்களும், மகாலக்ஷ்மி, (எல்லா செல்வங்களும் மன திருப்தியும்) அடுத்ததாக நமக்கு கிடைக்கிறது. செல்வங்கள் அனைத்தும், தேவர்களிடமோ (நல்ல குணங்கள்), அசுரர்களிடமோ (கெட்ட குணங்கள்) சிக்கி விடாது. அவை ஒருவரிடம் இருப்பது போலோ இல்லாதது போலோ காட்சி அளித்தாலும், உண்மையில் எல்லா செல்வங்களும், பகவானுக்கே சொந்தம். அதுவே நாராயணன் லக்ஷ்மியை மணப்பது. இறுதியில், அழியாத இன்பமான முக்தி (சமாதி) நிலை நம்மை அடையும். ஆனால், அப்போதும், சில கெட்ட குணங்கள் (ராகு போன்றவர்கள்), தேவ வடிவில் காட்சி அளித்து, அதை அடைய விடாமல் தடுக்க நினைக்கும். இதையும் பகவானிடம் முழுவதுமாக சரண் அடைந்து விட்டால் அவர் அதை வெட்டி எரிந்து விடுவார். பின்னர், மோகினியாகவும் இருந்து, அழியாத முக்தி நிலையினை தேவர்களுக்கு மட்டுமே கொடுத்து அருள்வார்.


இதில் அமிர்தம் என்பது, முக்தி நிலை என்றும் பொருள் கொள்ளலாம். அல்லது, நிலையான வாழ்க்கை என்றும் பொருள் கொள்ளலாம். ஆசைகளில் அகப்படாமல் மனதை ஆள தெரிந்த ஒரு நிலை எனவும் கொள்ளலாம்.

நல்ல குணங்கள் மற்றும் கெட்ட குணங்கள் இரண்டுமே உற்பத்தி ஆன இடம் மனது தான். எனவே, இருவருக்கும் ஒரே பெற்றோர்களே!


தேவர்கள் (நல்ல குணங்கள்), தான் செய்யும் நன்மையின் விளைவை எண்ணி அகங்காரம் கொண்டாலும், அதன் விளைவு பிறருக்கு தீமை அளிப்பதில்லை. மாறாக, அதன் பண்பே அடிபடுகிறது. எனவே, இவர்கள் கடவுளுக்கு எதிரிகளாக கருதுப்படுவது இல்லை. அசுரர்கள் என்ன தான் பக்தியில் தேவர்களை மிஞ்சினாலும், அவர்கள் காரணம் கருதியே பக்தியில் ஈடுபடுகின்றனர். எனவே கடவுள் இடத்தே ஒரு ஆத்ம சம்பந்தம் அசுரர்களிடத்தில் உண்டாவது இல்லை.


Also Read Symbolism of Churning the Milky Ocean
52 views0 comments

Recent Posts

See All
bottom of page