மூன்று குணங்கள்
Updated: Oct 11, 2022

உலகத்தை படைக்க எண்ணங்கொண்ட கடவுள் முதலில் பிரகிருதியையும், ஜீவனையும் சேர்க்கிறார். பிரகிருதி என்பது மகாமாயை . 'ப்ர' என்றால் சிறந்தது. 'க்ருதி' என்றால் ஸ்ருஷ்டி என்று அர்த்தம். அதாவது அண்ட சராசரங்கள் அனைத்தையும் படைத்தவள். படைத்தல், காத்தல் நிகழ வேண்டுமாயின் மகாமாயை முக்குணம் கொண்டவளாய்த் திகழ வேண்டும். 'ப்ர' சத்வகுணம், 'க்ரு' ரஜோ குணம். 'தி' தமோ குணம். பிரகிருதி அல்லது இயற்கை என்பது மூன்றுவகை குணங்களால் ஆனது. குணம் எனும் பதத்திற்கு பண்பு, தன்மை, இயல்பு என்ற பொருள்கள் உள்ளன. ஆத்மாவில் பிணைக்கப்பட்ட சத்வ, ரஜஸ், தமோ குணங்களால் ஆன பிரகிருதி முந்தை வினைக்கேற்ப பலவித ரூபங்களைப் பெறுகிறது.
அவற்றுள் சத்வம் மனிதனுக்கு ஞானவொளியையும் நன்மார்க்கத்தில் விருப்பத்தையும் அளிக்கிறது. ரஜஸ் அவா, பற்றுதல் முதலிய குணங்களையளித்து கர்மங்களில் தூண்டுகிறது; தமஸ் மயக்கம், சோம்பல், உறக்கம் முதலியவற்றையளிக்கிறது. இம்மூன்று குணங்களுள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சமயங்களில் தலையெடுத்து நிற்கும். அப்போது மனிதனுக்கு அதற்கேற்ற குணங்கள் உதிக்கின்றன.
உலகம் படைக்கப்படுவதற்கு முன்னர் சத்துவம்,ரஜஸ், தமஸ் ஆகிய மூன்றுமே சமநிலையில் எந்தவித வேறுபாடுமின்றி ஒன்றை யொன்று மிஞ்சாத அளவில் இருந்தன.படைப்புத்தொழில் துவங்கின உடன் பரிணாம வளர்ச்சி முறைக்கு உட்பட்டு இயற்கையானது படிப்படியாக பலவகைப்பட்டதான பிரபஞ்சமாக ஆகியது. இந்த உலகில் காணப்படும் பொருள்கள் சக்தி, மனம் ஆகிய அனைத்துமே இயற்கையினால் உருவாக்கப்பட்டவையே.
இந்த மூன்று அடிப்படை குணங்களும் எல்லா ஜீவராசிகளிடமும் வெவ்வேறு அளவில் இருப்பதனால் ஒவ்வொன்றும் வெவ்வேறு தனிப்பட்ட இயல்புடையதாக உள்ளன. முக்குணங்களும் மனிதனின் செயல், எண்ணம், வாக்கு போன்ற பல்வேறு அம்சங்களில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.
இந்த குணங்களில் ஏதோ ஒன்றோ அல்லது இரண்டோ மட்டும் தான் ஒருவரிடம் இருக்கும் என்று கிடையாது. எல்லோரிடமும் இந்த மூன்று குணங்களும் கண்டிப்பாக வெவ்வேறான அளவில் அமைந்திருக்கும். இந்த முக்குணங்களின் கலவை வேறுபடுவதால் தான் மனிதர்களின் இயல்பும் பழக்கவழக்கமும் வேறுபடுகின்றது.
சத்வ குணத்தை வெள்ளைநிறமாகவும், ரஜஸ் குணத்தை சிவப்பு நிறமாகவும், தமஸ் குணத்தை கறுப்பு நிறமாகவும் உவமைப்படுத்தி குறிப்பிடுவர். வெள்ளை தூய்மையையும், சிவப்பு செயலாற்றலையும், கறுப்பு அறியாமையையும் குறிக்கும்.
பலன்களின் மீது ஆசைக் கொள்ளாத, தன் கடமையை நேர்மையாக செய்வது சாத்வீக குணமுடைய செயல். பலன்களை மட்டுமே எதிர்பார்த்து, தன் சுயநல எண்ணங்களுக்காக செய்வது ரஜோகுணமுடைய செயல். விளைவுகளைப் பற்றி ஆராயாமல், மயகத்திலும் அறியாமையிலும் செய்யப்பட்டு மற்றவர்களையும் தன்னையும் துன்புறுத்தும் செயல் தமோகுணமுடைய செயல். சத்வகுணத்தில் செய்யப்பட்ட செயல்கள் நன்மையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை; ரஜோகுணத்தில் செய்யப்பட்ட செயல்கள் துன்பத்தை ஏற்படுத்தக்கூடியவை; தமோகுணத்தில் செய்யப்பட்ட செயல்கள் அழிவை ஏற்படுத்தக்கூடியவை.
இந்த மூன்று குணங்களையும் கடந்து பிறப்பு, இறப்பு, பிணி, மூப்பு என்பனவற்றினின்றும் விடுபட்டவன் அமிர்த நிலையடைகிறான்.