1. விந்தை குறமாதின் கந்தனருள் பெறவே
எந்தை அருணகிரி இயம்பு திருப்புகழை
சந்தம் தவறாது சந்ததமும் இசைக்க
சிந்தை மகிழ்ந்தளித்த தேவே! குருநாதா
2. ஏறுமயிலேறி வரும் ஈசன் இசைபாட
ஆறுமுகமங்கலத்தே அவதரித்த அண்ணால்!
மாறிலாத தணிகேசன் பேர்பாடிய தூய!
ஊறிலாத நும் பதங்கள் எம் சென்னி மீதே.
3. இம்மை பிறவிதனில் யாம் செய்த புண்ணியத்தால்
உம்மை குருவெனவே உவந்தளித்தான் உத்தமனும்
எம்மை ஊக்குவித்து ஏத்து புகழ் சொல்லி வைத்து
தம்மை எமக்கீந்த நும் தாள் எம் சென்னியதே.
4. தேசுடைய தேன்மதுரத் திருப்புகழ் தொண்டரே
ஆசையுடன் ஆறுமுகன் அருளோதிய அன்பரே
நேசமுடன் நல்லிசையும் நேமமுடன் நல்கினீர்
பாசமுடன் பணிந்தெழுவோம் நும் பதங்கள் தன்னிலே.
5. சாந்தகுணச் செம்மலே! எம் சந்த திலகமே!
காந்தநிறைத் திருப்புகழை கருணையோடு கற்பித்தீர்
மாந்தருக்குத் திருப்புகழே வேதமெனச் சொன்னீர்
வேந்தனே! நும் பதகமலம் எம் சென்னி வைப்போம்.
6. எத்தனை ராகம்! எத்தனை தாளம்!
எத்தனை இனிமை! எத்தனை நளினம்!
அத்தனையும் நீர் அரவணைத்தன்புடன்
அத்தனே தந்தீர் அழகுற வாழவே
அத்தனையும் நீர் ஸ்ரீ ராகவ குருஜீ
அத்தனே தந்தீர் அழகுற வாழவே
வேண்டுதல்
ஆழிசூழுலகில் அருமருந்தன்ன திருப்புகழுணர்த்தும்
அன்பு, அவிரோதம், அறம், அகில உலக நலன், ஆசையறல்
ஆன்மீகம் மற்றுமுள நல்லனயாவும் தெளிவுற போதித்து
வாழ்வாங்கு வாழ எமக்கு வழி சொன்ன ஆசான்
சீலத்திரு ராகவ குருஜி ஆற்றிய பணி அறாது ஓங்க
அருள்வாய் அலைவாயமர்ந்த ஆறுமுக தெய்வமே
பூஜ்யஸ்ரீ ராகவ குருஜி திருவடிகளே சரணம் சரணம்