அபிராமி அந்தாதி 71-75

71. அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி, அரு மறைகள் பழகிச் சிவந்த பதாம்புயத்தாள், பனி மா மதியின் குழவித் திருமுடிக் கோமளயாமளைக் கொம்பு இருக்க இழவுற்று நின்ற நெஞ்சே இரங்கேல், உனக்கு என் குறையே?

அபிராமித் தேவி எவருக்கும் ஒப்புமையில்லாத திருமேனியழகுடைய பெண். வேதப் பொருளிலே திருநடம் புரியும் சிவந்த பாதத் தாமரைகளை உடையவள். (வேதங்களைத் தனது சிலம்பாக அணிந்ததால் அன்னையின் திருப்பாதங்கள் சிவந்தன.) குளிர்ச்சியான நிலவின் குழந்தை எனும்படியான சிவபெருமான் சிரசில் அணியும் இளம் பிறையைத் தன் திருமுடிகளில் சூடிய கோமளவல்லி. நீ பற்றிப் படர உன்னைத் தாங்க கொம்பு போன்ற துணையாக அன்னை தேவி இருக்க, இழப்பை நினைத்து வேதனையுறும் நெஞ்சே! ஊக்கம் குறைந்து, ஏக்கம் கொள்ளாதே! உற்ற இடத்தில் ஊன்று கோலாக அன்னை இருக்க உனக்கு ஏன் குறை?

72. எங்குறை தீரநின்று ஏற்றுகின்றேன், இனி யான் பிறக்கில், நின் குறையே அன்றி யார் குறை காண்? இரு நீள் விசும்பின் மின் குறை காட்டி மெலிகின்ற நேர் இடை மெல்லியலாய் தன் குறை தீர, எம்கோன் சடை மேல் வைத்த தாமரையே.

அன்னையே! என்னுடைய குறைகளெல்லாம் தீர உன்னையே வணங்குகின்றேன். எனக்கு மீண்டும் ஒரு பிறவி உண்டானால் அது என் குறையே அல்ல. உன்னுடைய குறையேயாகும். நீண்டு விரிந்த ஆகாயத்தில் தோன்றுகின்ற மின்னலையும் குறைசொல்லும்படி மெலிந்த சிறந்த இடையினைக் கொண்ட மென்மையான நுண்ணிய இடையையுடையவளே! எம்முடைய தந்தை சிவபெருமான், தன் குறை தீர, தனது திருமுடி மேல் சாத்திய அழகிய பாதத் தாமரைகளையுடையவளே!

73. தாமம் கடம்பு, படை பஞ்ச பாணம், தனுக் கரும்பு, யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது, எமக்கு என்று வைத்த சேமம் திருவடி, செங்கைகள் நான்கு, ஒளி செம்மை, அம்மை நாமம் திரிபுரை, ஒன்றோடு இரண்டு நயனங்களே.

அபிராமி தாயே! உன்னுடைய மாலை, கடம்ப மாலை; படைகளோ பஞ்ச பாணங்கள் (ஐவகை மலர் அம்புகள்); வில்லோ கரும்பு; உன்னுடைய நெற்றிக் கண்களோ, அருட் கண்கள்; நான்கு கரங்களோ செந்நிறமாகும். உன்னை வயிரவர்கள் வணங்கும் நேரமோ நள்ளிரவாகும். திரிபுரை என்ற பெயரும் உண்டு. நீ எனக்கு மேலாக வைத்திருக்கும் செல்வம் நின்னுடைய திருவடித் தாமரைகளேயாகும்.

74. நயனங்கள் மூன்றுடை நாதனும், வேதமும், நாரணனும், அயனும் பரவும் அபிராம வல்லி அடி இணையைப் பயன் என்று கொண்டவர், பாவையர் ஆடவும் பாடவும், பொன் சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே.

முக்கண்களையுடைய சிவன், திருமால், பிரும்மா முதலானோரும் வணங்கக்கூடிய தேவி அபிராமியாகும். அவளுடைய பாதங்களிலே சரண் என்றடைந்த அடியார்கள் இந்திர போகத்தையும் விரும்ப மாட்டார்கள். அரம்பை முதலான தேவ மகளிர் பாடி, ஆட, பொன் ஆசனமே கிட்டினும், அன்னையின் பாதச் சேவையையே பெரிதென நினைவார்கள்.

75. தங்குவர், கற்பக தாருவின் நீழலில், தாயர் இன்றி மங்குவர், மண்ணில் வழுவாய் பிறவியை,மால் வரையும், பொங்கு உவர் ஆழியும், ஈரேழ் புவனமும், பூத்த உந்திக் கொங்கு இவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே.

பெரிய மலைகளையும், நுரைக் கடலையும், பதினான்கு உலகத்தையும் பெற்றெடுத்த அன்னை அபிராமியே! மணம் வீசும் பூவையணிந்த குழலுடையவளே! உன்னுடைய திருமேனியை இடையுறாது சிந்தையிலே தியானிப்பவர் சகலத்தையும் தருகின்ற கற்பக மரத்தின் நிழலையும் பெற்று இன்புறுவர். இடைவிடாது தோன்றும் மானிடப் பிறவியும் இல்லாமல் போவர். அத்தகைய பல பிறவிகளில் பெற்றெடுக்கும் மானிடத் தாயாரும் இல்லாமல் போவர் (என்றும் நிலையாகிய தாய் நீயே).

10 views0 comments

Recent Posts

See All

96. கோமளவல்லியை, அல்லியந் தாமரைக் கோயில் வைகும் யாமள வல்லியை, ஏதம் இலாளை, எழுதரிய சாமள மேனிச் சகலகலா மயில்தன்னை, தம்மால் ஆமளவும் தொழுவார், எழு பாருக்கும் ஆதிபரே. இளமையும் மென்மையும் கொண்ட கொடி போன்ற எ

91. மெல்லிய நுண் இடை மின் அனையாளை விரிசடையோன் புல்லிய மென் முலைப் பொன் அனையாளை, புகழ்ந்து மறை சொல்லியவண்ணம் தொழும் அடியாரைத் தொழுமவர்க்கு, பல்லியம் ஆர்த்து எழ, வெண் பகடு ஊறும் பதம் தருமே. அபிராமித் தே

86. மால் அயன் தேட, மறை தேட, வானவர் தேட நின்ற காலையும், சூடகக் கையையும் கொண்டு, கதித்த கப்பு வேலை வெங் காலன் என்மேல் விடும்போது, வெளி நில் கண்டாய் பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே. பாலையும்,