ராகம் : சாரங்கா
86. மால் அயன் தேட, மறை தேட, வானவர் தேட நின்ற காலையும், சூடகக் கையையும் கொண்டு, கதித்த கப்பு வேலை வெங் காலன் என்மேல் விடும்போது, வெளி நில் கண்டாய் பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே.
பாலையும், தேனையும், பாகையும் ஒத்த இனிய மொழியுடையவளே! இயமன் கோபித்துப் பல கிளைகளைக் கொண்ட சூலத்தை என்மீது செலுத்தும்போது, திருமாலும், பிரம்மனும், வேதங்களும், வானவர்களும் தேடியும் காணாத திருப்பாதங்களையும் சங்கையணிந்த திருக்கரங்களையும் கொண்டு நீ என் முன்னே காட்சி தந்தருள வேண்டும்.
சூடகக் கையையும் கொண்டு – வளையல்கள் சூடிய திருக்கைகளையும் கொண்டு; கதித்த கப்பு வேலை = பல கிளைகளை கொண்ட வேலை (சூலத்தை); பணிமொழி = மென்மொழி.
87. மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தம், என்தன் விழிக்கும் வினைக்கும் வெளி நின்றதால், விழியால் மதனை அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை அண்டம் எல்லாம் பழிக்கும்படி ஒரு பாகம் கொண்டு ஆளும் பராபரையே.
பேரழகுடைய சிவ சக்தி திருவுருவம் கொண்ட தாயே! நெற்றிக்கண் கொண்டு மன்மதனை எரித்த எம்பிரானாகிய சிவபெருமானின் அழியாத, முடிவில்லா யோக நிலை உள்ள விரதத்தை எவ்வுலகத்தவரும் அம்மையிடம் தோற்று விட்டதாய் பழிக்குமாறு அவனது இடப்பக்கத்தில் இடம்கொண்டு ஆள்பவளே! உன் அளப்பற்ற பெருமைகள் மொழியின் அல்லது எண்ணங்களின் எல்லைக்குள் அடங்காதது. இருந்தும், எளியோனாகிய என்னுடைய முன்வினைகளின் தடைகளையும் மீறி எந்தன் விழிகள் காணும்படி என் முன் நிற்கின்றதே! (இது என்ன வியப்பு! இது என்னுடைய முயற்சியாலும் தவத்தாலும் ஏற்பட்டது இல்லை. உன்னுடைய அளவில்லாத பெருங்கருணையாலே மட்டும் நடக்கின்றது.)
88. பரம் என்று உனை அடைந்தேன், தமியேனும், உன் பத்தருக்குள் தரம் அன்று இவன் என்று தள்ளத் தகாது தரியலர்தம் புரம் அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய, போதில் அயன் சிரம் ஒன்று செற்ற கையான் இடப் பாகம் சிறந்தவளே.
பகைவர்களது முப்புரத்தை எரிக்க மேருமலையை வில்லாகக் கொண்டவரும், திருமாலின் உந்தித் தாமரையில் தோன்றிய பிரம்மனின் சிரம் ஒன்றைக் கிள்ளி அழித்தவருமான சிவபெருமானின் இடப்பாகத்தில் சிறந்து வீற்றிருப்பவளே! யாருமே துணையில்லாத நான், நீயே கதியென்று சரணடைந்தேன். ஆகையால் எளியோனாகிய என்னிடத்தில் உன் பக்தருக்குள்ள தரம் இல்லையென்று நீ தள்ளி விடுதல் தகாது. அது உன் அருளுக்கும் அறமன்று.
செற்ற = அறுத்த; தரியலர் = பகைவர்; தனக்கும் ஐந்து தலைகள் சிவனுக்கும் ஐந்து தலைகள்; அதனால் தானும் சிவனும் ஒரே தரத்தவர் என்று தகாதன பிரமன் பேசினான். அதனால் சினந்த சிவபெருமான் அவன் ஐந்தாவது சிரத்தை அறுத்தார். ‘கையான்’ என்பது சினம் கொண்டு அறுத்த சிரம் சிவபெருமானின் கைகளிலேயே ஒட்டிக்கொண்டதைக் குறிக்கிறது. தகாதன செய்த திரிபுராசுரர்களைக் கொன்றவனும் தகாதன பேசிய பிரம்மனின் ஐந்தாவது தலையை அறுத்தவனும் ஆன சிவபெருமானின் இடப்பாகத்தில் சிறந்து விளங்கும் நீயும் ‘தகாதன செய்தவன் இவன்; நம் பத்தருக்குள் இருக்கத் தகுதி இல்லாதவன்’ என்று என்னைத் தள்ளக் கூடாது. நானும் உன்னையே கதி என்று அடைந்தேன்.
89. சிறக்கும் கமலத் திருவே நின்சேவடி சென்னி வைக்கத் துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும், துரியம் அற்ற உறக்கம் தர வந்து, உடம்போடு உயிர் உறவு அற்று அறிவு மறக்கும் பொழுது என் முன்னே வரல் வேண்டும் வருந்தியுமே.
அபிராமித் தாயே! சிறந்த தாமரையில் வீற்றிருக்கும் செல்வமே! என்னுடைய உயிருக்கும், உடலுக்கும் தொடர்பற்று, அறிவு மறதி மிகுந்து இருக்கும் வேளையில் உன்னுடைய சேவடி என்னுடைய சென்னியில் படர வேண்டும். மேலும், பற்றின்மையை அனுக்கிரகிக்கும் உன்னுடைய துணைவரும் வந்து மோன நிலையில் நான் அறிதுயிலில் அமரும் பேற்றை அருள வேண்டும்.
துறக்கம்=பற்றின்மை;சுவர்க்கம்; துறக்கம் தரும் நின் துணைவரும் = வானுலகத்தை வரமாக அருளும் உன் துணைவரான சிவபெருமானும்; துரியம் அற்ற உறக்கம் தர வந்து = விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம், சமாதி என்ற நான்கு நிலைகளையும் கடந்த உறக்கத்தை எனக்குத் தருவதற்காக வந்து; விழிப்பு என்பது சாதாரண நிலையை தாண்டி, ஆழ்ந்த உறக்கமற்ற நிலையில் மனத்தில் உள்ள எண்ணங்கள் கனவாக வருகின்றது. தன்னை மறந்து உறங்குவது மூன்றாம் நிலை. சமாதி நிலை என்பது விழிப்புமற்ற, கனவுமற்ற, ஆழ்ந்த உறக்கமுமற்ற ஆழ்நிலைத் தியானம். அந்நிலை விழிப்பும் உறக்கமும் உணர்வும் கலந்து அவைகளையும் கடந்த நான்காவது நிலை. இந்த சமாதி நிலையையும் தாண்டிய நிலையை தரவேண்டும் என்கிறார். நீயும் உன் கணவராகிய சிவபெருமானும் எனக்கு அந்த ஐந்தாம் நிலை உறக்கத்தைத் தந்து அதன் பின்னர் என் உடம்பை விட்டு உயிர் பிரிந்து நான் சுய அறிவினை இழந்து கிடக்கும் சமயத்தில் நீ உனது சேவடியை எனது தலை மீது வைப்பதற்காக என் முன்னே வர வேண்டும். இதற்காக இப்பொழுதே உன்னை வருந்தியழைக்கின்றேன் அம்மா.
90. வருந்தாவகை, என் மனத்தாமரையினில் வந்து புகுந்து, இருந்தாள், பழைய இருப்பிடமாக, இனி எனக்குப் பொருந்தாது ஒரு பொருள் இல்லை விண் மேவும் புலவருக்கு விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே.
விண்ணில் வாழும் அறிவிற் சிறந்த அமரர்களுக்கு விருந்தாக பாற்கடலில் கிடைத்த அருமருந்தான அமுதத்தை அளிக்கும் மென்மையான தாய் அபிராமியானவள் அவளே வந்து நான் பிறப்பு, இறப்புகளால் துன்பமும் வருத்தமும் அடையா வண்ணம் என் இதயக் கமலத்தில் புகுந்து அதுவே அவளது பழைய இருப்பிடமாக எண்ணி அமர்ந்தாள். இனி எனக்கு கிடைக்காத பொருளென்று எதுவும் இல்லை.