ராகம் : சுருட்டி
91. மெல்லிய நுண் இடை மின் அனையாளை விரிசடையோன்
புல்லிய மென் முலைப் பொன் அனையாளை, புகழ்ந்து மறை
சொல்லியவண்ணம் தொழும் அடியாரைத் தொழுமவர்க்கு,
பல்லியம் ஆர்த்து எழ, வெண் பகடு ஊறும் பதம் தருமே.
அபிராமித் தேவி! நீ மின்னல் போலும் நுண்ணிய இடையினை உடையவள்; விரிந்த சடைமுடி நாதர் சிவபிரானோடு இணைந்து நிற்கும் மென்மையான முலைகளையுடையவள்; பொன்னைப் போன்றவள். இவ்வாறாகிய உன்னை வேதப்படி தொழுகின்ற அடியவர்கள், பல்வகை இசைக்கருவிகள் இனிதாக முழங்கிவர, வெள்ளை யானையாகிய ஐராவதத்தின் மேலே ஊர்ந்து செல்லும் இந்திரப் பதவி முதலான செல்வ போகங்களைப் பெறுவர்.
புல்லுதல் - தழுவுதல், பொருந்துதல்; பல்லியம் · பல்வகை வாத்தியங்கள் சேர்ந்து ஒலிக்கும் இசை; பகடு = காளை, எருது, ஆண் யானை.
92. பதத்தே உருகி, நின் பாதத்திலே மனம் பற்றி, உன்தன் இதத்தே ஒழுக அடிமை கொண்டாய், இனி யான் ஒருவர் மதத்தே மதி மயங்கேன் அவர் போன வழியும் செல்லேன் முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும்முகிழ் நகையே.
முதல் தேவர் என்று கூறப்படும் மும்மூர்த்திகளும் மற்றுமுள்ள தேவர்களும் போற்றித் தொழுகின்ற புன்னகையையுடையவளே! உன்னுடைய ஞானத்திற்காகவே உருகிநின்ற என்னை உன் பாதத்திலேயே பற்றும்படி செய்து, உன் வழிப்படியே யான் நடக்கும்படி அடிமையாகக் கொண்டவளே! இனி நான் வேறொரு மதத்திலே மன மயக்கம் கொள்ள மாட்டேன். அவர்கள் செல்லும் வழியிலேயும் செல்ல மாட்டேன்.
93. நகையே இது, இந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு, முகையே முகிழ் முலை, மானே, முது கண் முடிவுயில், அந்த வகையே பிறவியும், வம்பே, மலைமகள் என்பதும் நாம், மிகையே இவள்தன் தகைமையை நாடி விரும்புவதே.
இந்த உலகங்களை எல்லாம் ஈன்றெடுத்த தாய்க்கு தாமரை அரும்பு போன்று குவிந்த நகில்கள் என்றும், அருளால் நிரம்பி முதிர்ந்த கண்களை மருட்சியுடன் தோன்றும் மானின் கண்களுடன் ஒப்பிடுவது போன்ற, ஒன்றுக்கு ஒன்று ஒவ்வாத முரண்பாடுகளுடைய இயல்புகளை கூறுவது சிரிப்புக்கு இடம் தருகின்றன. பரமேஸ்வரிக்கு முடிவும் பிறப்பும் இல்லாதவளை மலைக்கு மகள் என்று கூறுவதும் இது போன்றே. இவையெல்லாமே மாறுபட்ட கூற்றுகள். இவைகளை நினையும் போது எனக்கு நகைப்பே உண்டாகிறது. இனிமேல் நாம் செய்யக்கூடியது இத்தகைய கற்பனைகளைத் தள்ளி அவளின் உண்மை நிலையை அறிதலேயாகும்.
94. விரும்பித் தொழும் அடியார் விழிநீர் மல்கி, மெய் புளகம் அரும்பித் ததும்பிய ஆனந்தம் ஆகி, அறிவு இழந்து சுரும்பின் களித்து, மொழி தடுமாறி, முன் சொன்ன எல்லாம் தரும் பித்தர் ஆவர் என்றால் அபிராமி சமயம் நன்றே.
அபிராமி அம்மையைப் பக்தியோடு விரும்பித்தொழும் அடியவர்களின் கண்களில் நீரானது பெருகி, மெய்சிலிர்த்து, ஆனந்தம் ததும்பி, அறிவு மறந்து, வண்டைப் போல் களித்து, மொழி தடுமாறி, முன்பு சொல்லிய பித்தரைப் போல் ஆவார்கள் என்றால், அப்பேரானந்தத்திற்கு மூலமான அம்பிகையின் சமயமே மிகச்சிறந்ததாகும்.
சுரும்பு=வண்டு.
கண்களில் நீர் மல்க உடம்பெல்லாம் மயிர்க்கூச்சலெடுக்க, ஆனந்தம் மேன்மேலும் பொங்க ஆன்மா போதத்தை இழந்து தேனுள் மயங்கிய வண்டு போல மயங்கி வார்த்தை குழறி முன்னே தாம் நினையாது சொன்னவையும் பொருள் உடையானவாகத் தரும் பித்தர் ஆவரென்றால் அவர் கடைப்பிடிக்கும் அபிராமி சமயம் நன்மையை பயக்கக் கூடியது. ( இது பட்டர் சரபோஜி மன்னரிடம் அமாவாசை தினத்தை பௌர்ணமி என்று பகர்ந்ததை குறிக்கிறது. அம்மையின் அருள் அனுபவத்தில் தன்னை மறந்து கூறின சொல்லை பலிக்க வைத்த தேவியின் கருணையும் அவளது வழிபாட்டையும் போற்றும் பாடல்.)
95. நன்றே வருகினும், தீதே விளைகினும், நான் அறிவது ஒன்றேயும் இல்லை, உனக்கே பரம் எனக்கு உள்ளம் எல்லாம் அன்றே உனது என்று அளித்து விட்டேன் அழியாத குணக் குன்றே, அருட்கடலே, இமவான் பெற்ற கோமளமே.
அபிராமியே! என்றுமே மறையாத நற்குணங்களின் குன்றே! அருட்கடலே! மலையரசன் பெற்றெடுத்த மென்மையான கோமள வல்லியே! எனக்கு உரிமை என்று எப்பொருளும் இல்லை. அனைத்தையும் அன்றே உனக்கு அர்ப்பணித்து எனக்கு நீயே கதி என்று உன் அடைக்கலம் புகுந்தேன். இனி எனக்கு நல்லதே வந்தாலும், தீமையே விளைந்தாலும், அவற்றை உணராது விருப்பு, வெறுப்பற்றவனாவேன்.