ராகம் : தர்பாரி கானடா
மங்கலை செங்கலசம் முலையாள் மலையாள் வருணச் சங்கு அலை செங்கைச் சகல கலாமயில் தாவுகங்கை
பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள்
பிங்கலை, நீலி, செய்யாள்,வெளியாள், பசும் பெண்கொடியே.
நித்திய மங்கலையாகிய அபிராமி தேவி, சிவந்த கலசத்தைப் போன்ற தனபாரங்களை உடையவள்; உயர்ந்த மலையிலே உதித்தவள்; வருணனின் இருப்பிடமான கடல் தந்த சங்குகளால் ஆன வளையல்கள் அணிந்து அவை அங்கும் இங்கும் அலையும் செம்மையான கைகளை உடையவள்; எல்லா கலைகளும் அறிந்த மயில் போன்றவள்; பாய்கின்ற கங்கையின் பொங்குகின்ற அலைகள் தங்கும் மேல்தூக்கி முடித்த சடையை உடைய சிவபிரானது வாம பாகத்தை ஆட்கொண்டவள்; பொன் நிறம் படைத்த பிங்கலை; நீலநிறம் படைத்த காளி; செந்நிறம் பெற்ற லலிதாம்பிகை; வெண்ணிறம் பெற்ற வித்தியாதேவி; பச்சை நிறம் பெற்ற உமாதேவி.
அம்பிகை பஞ்ச வர்ணங்களையும் உடையவள் .
பிங்கலை -- ஸ்வாதிஷ்டானத்தில் ஆறிதழ்த் தாமரையில் அமர்ந்திருக்கும் அம்பிகையின் திருமேனி பொன்னிறமுடையது.
நீலி -- மூலாதார சக்கரத்தில் கரிய நிறத்தோடு எழுந்தருளியிருக்கும் அம்பிகை;
செய்யாள் - – சிவந்த நிறம் கொண்ட லலிதாம்பிகை
வெளியாள்: ஆக்ஞையில் வெண்ணிறத்துடன் கலைமகளாக உள்ளவள்;
பசும் பெண் கொடி: அநாகதத்திலுள்ளவள் .
22. கொடியே, இளவஞ்சிக் கொம்பே, எனக்கு வம்பே பழுத்த
படியே மறையின் பரிமளமே, பனி மால் இமயப்
பிடியே, பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே.
அடியேன் இறந்து இங்கு இனிப் பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே.
கொடியானவளே! இளமையான வஞ்சிப் பொற் கொம்பே! பக்குவமற்ற எனக்குத் தானே முன் வந்து அருளளித்த கனியே! மணம் பரப்பும் வேத முதற் பொருளே! பனி உருகும் இமயத்தில் தோன்றிய பெண் யானை போன்றவளே! பிரமன், திருமால், இந்திரன் முதலியோர்களைபெற்றெடுத்த தாயே! அடியேன் இப்பிறவியில் இறந்தபின், மீண்டும் பிறவாமல் தடுத்தாட் கொள்ள வேண்டும்.
23. கொள்ளேன், மனத்தில் நின் கோலம் அல்லாது, அன்பர் கூட்டந்தன்னை
விள்ளேன், பரசமயம் விரும்பேன், வியன் மூவுலகுக்கு
உள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே, உள்ளத்தே விளைந்த
கள்ளே, களிக்குங்களியே, அளிய என் கண்மணியே.
அபிராமித் தாயே! நின்னுடைய கோலமில்லாத வேறொரு தெய்வத்தை மனத்தில் கொள்ளேன். நின்னுடைய அடியார்கள் கூட்டத்தைப் பகைத்துக் கொள்ள மாட்டேன். உன்னையன்றி பிற சமயங்களை விரும்ப மாட்டேன். மூன்றுலகங்கட்கு (மண், விண், பாதாளம்) உள்ளே நின்று அனைத்தையும் இயக்குபவளே! இவற்றையும் தாண்டி இந்த பிரபஞ்சம் எல்லாம் தாண்டியும் இருப்பவளே (அணுவிற்குள் அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய் இருப்பவளே)! எம்முடைய உள்ளத்திலே ஆனந்தக் களிப்பை உண்டாக்கும் கள்ளே! எல்லாவிதமான இன்பத்தையும் அனுபவிக்கும் ஆனந்தவடிவானவளே!
எளியேனாகிய எனக்கும் அருள் பாலித்த என் கண்மணி போன்றவளே!
வியன் = ஆகாசம்; வியன் மூவுலகு = ஆகாயம் போல் பரந்த மூவுலகு;
24. மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த
அணியே, அணியும் அணிக்கு அழகே, அணுகாதவர்க்குப்
பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெரு விருந்தே
பணியேன், ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்தபின்னே.
அபிராமித்தாயே! மணியாக விளங்குபவளே! அம் மணியில் உண்டாகும் ஒளியாகவும் விளங்குபவளே! ஒளி பொருந்திய நவமணிகளால் இழைக்கப்பட்ட அணியாகவும், அந்த அணிக்கு அழகாகவும் திகழ்பவளே! நின்னை அணுகாதவர்க்குப் பிணியென நிற்பவளே! நின்னை அண்டிவரும் ஆத்மாக்களின் பிணிக்கு மருந்தாகவும் நிற்பவளே! தேவர்களுக்கு பெரும் விருந்தாய்த் தோன்றும் அன்னையே! நின் அழகிய தாமரை போலுள்ள சேவடியைப் பணிந்த பின்னே வேறொரு தெய்வத்தை வணங்க மனத்தாலும் நினையேன்.
25. பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணி பிறப்பு அறுக்க
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் முதல் மூவருக்கும்
அன்னே. உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே
என்னே? இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே.
அம்மையே! மும்மூர்த்திகளின் தாயாக விளங்குபவளே! மூவுலகத்திற்கும் கிடைத்த அருமருந்தே! இனி நான் பிறவாமல் இருக்க, முன்னதாகவே தவங்கள் பல முயன்று செய்து கொண்டேன். அதற்காகவே நின் அடியார்கள் பின் திரிந்து அவர்களுக்குப் பணி செய்து வருகின்றேன். அம்மா! அபிராமித்தாயே! நான் முன் செய்த தவப் பயனே, இப்பிறவியில் உன்னை மறவாமல் நல்வழி நின்று வணங்குகின்றேன். இன்னும் வணங்கிக் கொண்டேயிருப்பேன்.
அபிராமி அந்தாதி பாடல்களை இங்கே கற்கவும்.