ராகம் : மோஹனம்
26. ஏத்தும் அடியவர், ஈரேழுலகினையும் படைத்தும்,
காத்தும், அழித்தும் திரிபவராம்,கமழ்பூங்கடம்பு
சாத்தும் குழல் அணங்கே, மணம் நாறும் நின் தாளிணைக்கென்
நாத் தங்கு புன்மொழி ஏறியவாறு, நகையுடத்தே.
உன்னை என்றும் போற்றிப் புகழ்பவர்கள் யார் என்று கேட்டால் இந்த ஈரேழு பதினான்கு உலகங்களையும் படைத்தும் காத்தும் அழித்தும் திரிகின்ற மும்மூர்த்திகளான பிரம்ம விஷ்ணு மஹேஸ்வரர்கள். மணம் கமழும் கடம்ப மாலையை கூந்தலில் சூடிக் கொண்டிருக்கும் அழகில் சிறந்த தெய்வப்பெண்ணே! தேவர்களில் எல்லாம் சிறந்தவர்களான மும்மூர்த்திகளாலும் போற்றிப் புகழப்பட்டு அந்தப் புகழ் மணம் கமழும் உன் இணைத்தாள்களுக்கு என் (ஒன்றுக்கும் பற்றாத எளியேனுடைய) நாவில் இருந்து தோன்றிய பொருட் பொலிவும் சொற்பொலிவும் அற்ற சொற்கள் புகழ்ச்சியாகப் போனது எனக்கே நகைப்பை விளைவிக்கின்றது.
27. உடைத்தனை வஞ்சப் பிறவியை, உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை, பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை, நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருட்புனலால்
துடைத்தனை, சுந்தரி நின் அருள் ஏதென்று சொல்லுவதே.
அடியேனது கன்மத்தால் வந்து என்னை வஞ்சிக்கும் ஆறுவித எதிரிகளான (காமம் - ஒரு பொருளின் மீது செல்லும் விருப்பம், குரோதம் - அப்பொருள் கிடையாத போதுண்டாகும் கோபம், உலோபம் - தானும் அநுபவிக்காமல் பிறருக்கும் கொடாமலிருக்கும் குணம், மோகம் - மாதர் மீதுண்டாகும் இச்சை, மதம் - செருக்கு, மாற்சரியம் - பொறாமை) பகைகளை அழித்து அவற்றால் தோன்றிய பிறவிப் பிணிப்பை உடைத்தாய். உன்னையும் உன் அன்பையும் எண்ணி எண்ணி உருகும் அன்பினை என்னுள் உண்டாக்கினாய். தாமரை போன்றை உன் இரு திருவடிகளையே பணிந்து கொண்டிருக்கும் தொண்டை எனக்கென்றே ஒப்பித்தாய். என் நெஞ்சத்திலேயிருந்த அழுக்கையெல்லாம் துப்புரவாக உன்னுடைய அருள் வெள்ளத்தால் துடைத்தாய். அழகியே! இப்படி அடியேனை தானாக வந்து ஆட்கொண்ட உன் அருளை என்னவென்று புகழுவேன்?
28. சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே, நின் புதுமலர்த்தாள்
அல்லும் பகலும் தொழும் அவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே.
ஒவ்வொரு சொல்லிலும் அந்தச் சொல்லின் பொருள் எப்படி இணைந்து கூடி இருக்கிறதோ அது போல் ஆனந்த நடனமாடும் உன் துணைவராம் சிவபெருமானுடன் இணைந்து ஓருடலாய் நிற்கும், மணம் வீசும் அழகிய பூங்கொடி போன்றவளே! அன்றலர்ந்த தாமரை போன்ற உனது இரு திருவடிகளை இரவும் பகலும் எப்போதும் தொழும் அடியார்களான அவர்களுக்கே என்றும் அழியாத அரச போகமும் உன் திருவடிகளை அடைந்து முக்தி பெறும் வழியான தவநெறியும் அந்தத் தவத்தின் பயனான சிவலோக முக்தியும் கிடைக்கும்.
29. சித்தியும், சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும் பரா
சத்தியும், சத்தி தழைக்கும் சிவமும், தவம் முயல்வார்
முத்தியும், முத்திக்கு வித்தும், வித்தாகி முளைத்தெழுந்த
புத்தியும், புத்தியினுள்ளே புரக்கும் புரத்தையன்றே.
அட்டமாசித்திகளும், அச் சித்திகளைத் தரும் தெய்வமாகி விளங்குகின்ற பராசக்தியும், சக்தியைத் தம்மிடத்தே தழைக்கச் செய்த பரமசிவமும், தவம் புரிவார் பெறும் மோக்ஷ ஆனந்தமும், அம்முக்தியால் ஏற்படுகின்ற விதையும், அவ்விதையில் ஏற்பட்ட ஞானமும் ஞானத்தின் உட்பொருளும் ஆகிய எல்லாமுமாக இருப்பவள், அறிவினுக்குள்ளே நின்று பாதுகாக்கும் திரிபுரசுந்தரியே ஆகும்.
30. அன்றே தடுத்தென்னை ஆண்டுகொண்டாய், கொண்டதல்ல என்கை
நன்றே உனக்கினி நான் என் செயினும், நடுக்கடலுள்
சென்றே விழினும், கரையேற்றுகை நின் திருவுளமே,
ஒன்றே, பலஉருவே, அருவே, என் உமையவளே.
முன் ஒரு நாள் என்னைத் தடுத்தாட்கொண்டருளினை; அங்ஙனம் ஆட்கொண்டதை அல்ல என்று மறுத்தல் உனக்கு நியாயமா? இனிமேல் அடியேன் என்ன குற்றம் செய்தாலும், கடலுக்கு நடுவே சென்று விழுந்தாலும், என் குற்றத்தை மறந்து கரையேற்றப் பாதுகாத்தல் நின் திருவுளப்பாங்குக்கு ஏற்றதாகும். இறை என்னும் போது ஒன்றாகவும், அவரவர் தம் மனத்திற்கு ஏற்ற வகையில் வணங்கும் பல உருவங்களாகவும், இறைவனுக்கு உருவம் இல்லை என்று உருவமற்ற இறைவனை வணங்குபவர்களுக்கு அருவமாகவும் இருக்கும் என் அன்னை உமையவளே!
அபிராமி அந்தாதி பாடல்களை இங்கே கற்கவும்.