top of page

அபிராமி அந்தாதி : பாடல் 31-35

Updated: Oct 28, 2022

உமையும், உமையொரு பாகனும் ஏக உருவில் வந்துஇங்கு

எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார்; இனி எண்ணுதற்குச்

சமயங்களும் இல்லை; ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை

அமையும் அமையுறு தோளியர் மேல்வைத்த ஆசையுமே.


அபிராமித் தேவியே! நீயும், உன்னைப் பாகமாகவுடைய எம்பிரானும், ஓருரு வான அர்த்தநாரீஸ்வர நிலையில் காட்சியளித்ததோடு அல்லாமல், என்னை உங்களுக்குத் தொண்டு செய்யும்படியாகவும் அருள்புரிந்தீர்கள். ஆகவே எனக்கு உன்னையன்றி இனிச் சிந்திப்பதற்கு ஒரு மதமும் இல்லை. என்னை ஈன்றெடுக்க ஒரு தாயும் இல்லை. வேய் (மூங்கில்) போன்ற தோளையுடைய பெண்ணின் மேல் வைத்த ஆசையும் இல்லாமல் ஒழிந்தது. (அமை =மூங்கில்;)


32. ஆசைக்கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கைப்

பாசத்தில் அல்லலற்பட இருந்தேனை நின் பாதம் என்னும்

வாசக்கமலம் தலைமேல் வலியவைத்து ஆண்டுகொண்ட

நேசத்தை என் சொல்லுவேன்? ஈசர்பாகத்து நேரிழையே!


அபிராமித்தாயே! எந்தன் ஈசன் இடப்பாகத்தில் தானொரு பகுதியாக அமைந்தவளே! அம்மா! நான் கொடிய ஆசையென்னும் துயரக் கடலில் மூழ்கி இரக்கமற்ற எமனின் பாச வலையில் சிக்கியிருந்தேன். அத் தருணத்தில் பாவியாகிய என்னை மணம் பொருந்திய உன்னுடைய பாதத் தாமரையே வலிய வந்து என்னை ஆட்கொண்டது! தாயே! நின் அரும்பெரும் கருணையை என்னென்று உரைப்பேன்!


33. இழைக்கும் வினைவழியே அடும் காலன் எனைநடுங்க

அழைக்கும் பொழுதுவந்து அஞ்சல் என்பாய்; அத்தர் சித்தமெல்லாம்

குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே!

உழைக்கும் பொழுது உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே.


நான் செய்த தீய வழிகளுக்காக என்னை நெருங்குகின்ற எமன் என்னைத் துன்புறுத்தி, வதைக்கும் பொழுது, தாயே உன்னை அழைக்க, அஞ்சேல் என ஓடிவந்து காப்பவளே! சிவ பெருமானின் சித்தத்தையெல்லாம் குழையச் செய்கின்ற சந்தனம் பூசிய குவிந்த முலைகளையுடைய இளமையான கோமளவல்லித் தாயே! மரண வேதனையில் நான் துன்புறும் போது உன்னை, ‘அன்னையே’ என்பேன். ஓடிவந்து என்னைக் காத்தருள்வாய்! யாமளை என்பது யாமம் என்கிற நடு இரவு பொழுதில் துதிக்கப்படுவதனால் காளியைக் குறித்தது.


34. வந்தே சரணம் புகும் அடியாருக்கு வானுலகம்

தந்தே பரிவொடு தான்போய் இருக்கும் சதுர்முகமும்

பைந்தேன் அலங்கற் பருமணி ஆகமும் பாகமும் பொன்

செந்தேன் மலரும் அலர்கதிர் ஞாயிறும் திங்களுமே.


உன்னைச் சரணமென்று வந்தடையும் பக்தர்களைத் துயரங்களிலிருந்து நீக்கி, வானுலக வாழ்வைக் கொடுப்பவள் நீயே. தாயே! நீ நான்முகங்களையுடைய பிரம்மனின் படைப்புத் தொழிலில் இருக்கின்றாய்! பசுமையான தேன் கலந்த துபள மாலையையும், நவமணி மாலைகளையும் அணிந்த மார்பினனாகிய திருமாலின் மார்பில் இருக்கின்றாய்! சிவபெருமானின் இடப்பாகத்திலும், பொன் தாமரை மலரிலும், விரிந்த கதிர்களுடைய சூரியனிடத்திலும், சந்திரனிடத்தும் தங்கியிருக்கின்றாய்.

அபிராமி தன்னிடம் அடைக்கலம் புகும் அடியவர்களுக்கு போகப்பொருள்கள் நிறைந்திருக்கும் பரந்த வானுலகத்தை விட்டு தான் மற்ற குறுகிய இடங்களில் வசிப்பாள் என்று கவிதை நாயம்பட கூறுகிறார்.


35. திங்கட் பகவின் மணம்நாறும் சீறடி சென்னிவைக்க

எங்கட்கு ஒருதவம் எய்தியவா! எண்ணிறந்த விண்ணோர்

தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ? தரங்கக் கடலுள்

வெங்கட் பணியணைமேல் துயில்கூரும் விழுப்பொருளே.


பிறைச் சந்திரனின் மணம் பொருந்திய அழகிய பாதங்களை எம்மேல் வைக்க நாங்கள் செய்த தவம்தான் என்னவோ! விண்ணுலகத் தேவர்களுக்கும் இந்தப் பாக்கியம் கிட்டுமோ! அன்னையே! அபிராமியே! திருப்பாற்கடலிற் சிவந்த கண்களையுடை பாம்புப் படுக்கையில் திருமாலை இடமாகக் கொண்டு வைஷ்ணவி என்னும் பெயரால் யோக நித்திரை புரிபாவளே!

சிவபிரான் தேவியின் ஊடலை தீர்க்கும் பொருட்டு வணங்கும் பொழுது அவரது திருமுடியில் இருக்கும் சந்திரனின் பிறையின் மணம் தேவியின் பாதங்களில் திகழ்கிறது. விழுப்பொருள் = மேலான பொருள்;


அபிராமி அந்தாதி பாடல்களை இங்கே கற்கவும்.

17 views0 comments

Recent Posts

See All

96. கோமளவல்லியை, அல்லியந் தாமரைக் கோயில் வைகும் யாமள வல்லியை, ஏதம் இலாளை, எழுதரிய சாமள மேனிச் சகலகலா மயில்தன்னை, தம்மால் ஆமளவும் தொழுவார், எழு பாருக்கும் ஆதிபரே. இளமையும் மென்மையும் கொண்ட கொடி போன்ற எ

91. மெல்லிய நுண் இடை மின் அனையாளை விரிசடையோன் புல்லிய மென் முலைப் பொன் அனையாளை, புகழ்ந்து மறை சொல்லியவண்ணம் தொழும் அடியாரைத் தொழுமவர்க்கு, பல்லியம் ஆர்த்து எழ, வெண் பகடு ஊறும் பதம் தருமே. அபிராமித் தே

86. மால் அயன் தேட, மறை தேட, வானவர் தேட நின்ற காலையும், சூடகக் கையையும் கொண்டு, கதித்த கப்பு வேலை வெங் காலன் என்மேல் விடும்போது, வெளி நில் கண்டாய் பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே. பாலையும்,

bottom of page