top of page

அபிராமி பதிகம் 10

Updated: Mar 22


விருத்தம் ராகம் : மனோலயம்


கருநீல வடிவமார் மாடேறி உத்தண்ட

கனதண்ட வெம் பாசமுங்

கைக்கொண்டு சண்டமா காலன்முன் எதிர்க்கமார்க்

கண்டன் வெருண்டு நோக்க

இரு நீலகண்ட னெனும் நின்பதியை உள்ளத்தில்

இஆன்பு கொண்டு அருச்சனை செய

ஈசன் அவ்ஆலிங்கம் பிளப்ப நின்னொடு தோன்றி

யமனைச் சூலத்தி லூன்றிப்

பெருநீல மலையென நிலத்தில் அன்னவன் விழப்

பிறங்கு தாளால் உதைத்துப்

பேசுமுனி மைந்தனுக் கருள் செய்தது உனதரிய

பேரருளின் வண்ண மலவோ?

வரு நீல மடமாதர் விழியென்ன மலர்வாவி

வளர்த் திருக்கடவூரில் வாழ் வாமி, சுபநேமி,

புகழ் நாமி, சிவசாமி மகிழ் வாமி, அபிராமி உமையே





பதவுரை


கருநீல வடிவமார்

கருமையான உருவம் கொண்ட

மாடேறி

எருமை வாகனத்தின் மீது அமர்ந்து

உத்தண்ட

கொடூரமான

கனதண்ட

மிகப் பலம்பொருந்திய தண்டமும்

வெம் பாசமும்

நெருப்பை பொழிவது போன்ற பாசக் கயிற்றையும்

கைக் கொண்டு

கைகளிலே எடுத்துக் கொண்டு

சண்ட மாகாலன் முன் எதிர்க்க

ஆரவாரம் செய்து கொண்டு யமராஜன் எதிரே வர

​மார்க்கண்டன் வெகுண்டு நோக்க

(சிறுவன்) மார்க்கண்டேயன் பயந்து பார்க்க

இரு நீல கண்டன் எனும் நின் பதியை

திரு நீலகண்டனான உன் கணவனை

உள்ளத்தில் அன்பு கொண்டு அருச்சனை செய

உள்ளத்திலே அன்புடன் தியானிக்க

ஈசன் அவ் லிங்கம் பிளப்ப

ஈசனாகிய (அம்ருதகடேசராக ஆவிர்ப்பவித்திருந்த) அந்த இலிங்கம் இரண்டாக விரிய

நின்னொடு தோன்றி

உன்னுடன் சேர்ந்து ப்ரசன்னமாகி

யமனைச் சூலத்தில் ஊன்றி

(தன்)சூலாயுதத்தினால் யமனை தாக்கி

பெரு நீல மலையென

பெரிய கரிய மலை போன்று

நிலத்தில் அன்னவன் விழ

நிலத்தில் அந்த அவன் (யமன்) விழ

பிறங்கு தாளால் உதைத்து

(தனது) உயர்த்திய காலால் (அவனை உதைத்துத்) தள்ளி

பேசு முனி மைந்தனுக்கு

மார்க்கண்டனுக்கு

அருள் செய்தது

​வரம் அளித்தது

உனது அரிய பேர் அருளின் வண்ணம் அல்லவோ

உன்னுடைய மகத்தான அருளின் மகிமையன்றோ

வரு நீல மட மாதர் விழி அன்ன

அழகிய மாதர்களின் நீலக் கண்களையொத்த

மலர்வாவி

மலர்கள் அடர்ந்த குளங்கள் நிறைந்த

வளர் திருக்கடவூரில் வாழ்

திருக்கடையூர் ஸ்தலத்தில் வாழும்

வாமி

(சிவனின்) வாம(இடது) பாகத்தில் உள்ளவளே

சுபநேமி

நல்ல சக்ராயுதத்தை ஏந்தியவளே

புகழ் நாமி

புகழ் பெற்ற நாமம் உள்ளவளே

சிவசாமி மகிழ் வாமி

பரமசிவன் மகிழும் தேவியே

அபிராமி

மிக்க அழகுடையவளே

உமையே

உமா என்ற பெயருடையவளே

விளக்கவுரை

பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்ற பழமொழி உண்டு. அதை சற்று மாற்றி இந்த பதிகத்திற்கு ஒரு புது மொழி அளிக்கலாம். பணி செய்ததொருவர்-புகழ்அடைந்ததொருவர்என்று.மார்க்கண்டேயனை காப்பதற்கு சடுதியில் வந்து சிவன் தன் இடது காலை உயர்த்தி யமனை உதைத்தார் என்பது எல்லோரும் அறிந்ததே. ஓர் அடியாரை காப்பாற்றிய செயலுக்கு புகழையும் பாராட்டையும் தட்டிச் சென்றுவிட்டார். ஆனால் உண்மையில் உதைத்தது அம்பிகைக்கு உரித்தான இடது காலல்லவா! அது போல் நெற்றியின் மத்தியில் உள்ள கண்ணால் மன்மதனை எரித்ததில் சிவனுக்குப் பாதி பங்குதான் உண்டு. அதில் அவர் கீர்த்தியை முழுவதும் அபகரித்துக் கொண்டார்.


இதைப் போலவே வெற்றியையும் அரனுக்கே அளித்த இன்னொரு சம்பவம் உண்டு. சும்ப, நிசும்ப, ரக்த பீஜர்களை வதைத்து உக்ரத்துடன் காளியாக இருந்த போது அவளை சாந்தம் கொள்ளச் செய்வதற்காக நாட்டியப் போட்டிக்கு பரமசிவன் அழைக்கிறான். அண்ட சராசரங்கள் அதிர இருவரும் ஆடுகின்றனர். ஒரு தருணத்தில் பரமசிவன் தன் வலது காலால் காதிலுள்ள குண்டலத்தைக் கழற்றி வீசியெறிந்து, பின், அதை காலாலேயே அணிகிறார். காளி பெண்ணானதால் இச்செயலை செய்ய முடியாமல் நாணித் தலை கவிழ்ந்து விடுகிறாள் என்பது கதை. கூர்ந்து கவனித்தோமானால் இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. பத்தினிப் பெண்கள் காதணியை கழட்டலாகாது என்பது ஒன்று. மற்றொன்று, ஏற்கனவே வலது காலை தூக்கிய பிறகு சிவன் நிற்பதோ வாமபாகத்திலிருக்கும் அன்னையின் காலில்தான். அன்னை அதையும் தூக்கினால் அண்ட சராசரங்களும் வீழ்ந்து விடாதா? பெயருக்கு சிவனும் சத்தியும் வேறு வேறாகத் தோன்றினாலும் இருவருமே ஒருவர் தானே. ஆகையால் மனமுவந்து வெற்றிக் கனியை அரனுக்கு அளித்து விடுகிறாள் அம்பிகை.


பாட்டு தாளம்; கண்டசாபு

கைப்போது கொண்டு உன் பதப்போது தன்னில்

கணப்போதும் அர்ச்சிக்கிலேன்

கண் போதினால் உன் முகப்போது தன்னை யான்

கண்டு தரிசனை புரிகிலேன்;

முப்போதில் ஒருபோதும் என் மனப்போதிலே

முன்னி உன்ஆலயத்தின்

முன்போதுவார் தமதுபின் போத நினைகிலேன்;

மோசமே போய் உழன்றேன்

மைப்போத கத்திற்கு நிகரெனப் போதுஎரு

மைக்கடா மீதேறியே

மாகோர காலன் வரும்போது தமியேன்

மனங் கலங்கித் தியங்கும்

அப்போது வந்துஉன் அருட்போது தந்தருள்;

ஆதி கடவூரின் வாழ்வே!

அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!அருள் வாமி! அபிராமியே!






பதவுரை

கைப் போது கொண்டு

கை நிறைய மலர் கொண்டு

உன் பதப் போது தன்னில்

உன் மலரனைய பாதங்களை

கணப் போதும் அர்ச்சிக்கிலேன்

ஒரு பொழுதும் அர்ச்சனை செய்யவில்லை

கண் போதினால்

(என்) விழி மலர்களால்

உன் முகப் போது தன்னை

மலராகிய உன் முகத்தினை

யான் கண்டு தரிசனை புரிகிலேன்

நான் பார்த்து தரிசனை செய்யவில்லையே

முப்போதில் ஒரு போதும்

காலை, மாலை, இரவு என்ற மூன்று பொழுதுகளில் ஒரு பொழுது கூட

என் மனப் போதிலே முன்னி

(உன்னை) என் இருதயக் கமலத்தில் நிறுத்தி வைத்து

உன் ஆலயத்தின் முன்

உன் கோயிலுக்கு சென்று

போதுவார் தமது பின்

உன் புகழ் ஓதும் அடியார்களை பின்பற்ற

​போத நினைகிலேன்

விரும்பாமல் இருக்கின்றேனே

மோசமே போய் உழன்றேன்

வஞ்சிக்கப்பட்டு துன்பப்படுகிறேன்

மைப்போதகத்திற்கு நிகர் எனப்போது

கரிய யானையொத்த இரவு பொழுதுக்கு சமமான

எருமைக் கடா மீது ஏறியே

எருமை கடாவின் மேல் ஏறி

மா கோர காலன் வரும்போது

பயங்கர உருவத்தினனான யமராஜன் வரும் சமயம்

தமியேன் மனம் கலங்கித் தியங்கும்

திக்கற்றவனாகிய நான் மனம் சஞ்சலப்பட்டு அறிவுத் திறன் மங்கி இருக்கும்

அப்போது

அந்த தருணத்தில்

வந்து உன்

(என்னிடம்) வந்து உன்னுடைய

அருட்போது தந்து அருள்

அருளாகிய மலரை தந்து அருள்வாயே

விளக்கவுரை


மிக அழகான பதப் பிரயோகம் கொண்ட செய்யுள் இது. போது என்ற சொல்லைக் கொண்டு ஒரு வார்த்தை ஜாலம் செய்கிறார். போது என்பதற்கு பொழுது (காலம்), மலர் என்ற இரு பொருள் உண்டு. தாவர உலகின் மாற்றங்களும் இயற்கையின் சீரான கால ஒட்டத்தை ஒட்டியே நிகழ்கின்றன. விதை பூவாகி, காயாகி, பழமாவது காலத்திற்கேற்ப என்பது நாம் அறிந்ததே. மலர் மலர்வது கூட அப்படித் தான். மலர் மலர்ந்து நேரத்தை அறிவிப்பதை “போது தெரியாமையில் குமுதமொடு சத இதழ் போதுமே இரு போதையும் தெரிக்கும் தடம் பணை உடுத்த தமிழ் வேளூர” என்ற முத்து குமாரசாமியின் ‘பிள்ளைத் தமிழ்’ தெரிவிக்கிறது. சில பூக்கள் காலையில் பூக்கின்றன. சில மாலையில் பூக்கின்றன. சில ஆதவனைக் கண்டதும் மலர்கின்றன. இரவின் நடு ஜாமத்திற்கு முன் முல்லை மலரும். நொச்சி பூவோ நள் இரவில் பூக்கும். இப்படி மலர்கள் பொழுதை குறிப்பதாலே பூவிற்கு போது என்ற காரணப் பெயர் உண்டு.

கணப் போதும் : க்ஷணம் என்பது தான் மருவி ‘கணம்’ ஆயிற்று.க்ஷணம் என்பது ஒரு கண் இமைக்கும் நேரம்.

331 views0 comments

Recent Posts

See All

அபிராமி பதிகம் 9

விருத்தம் ராகம் : திலங் எனது இன்னல் இன்னபடியென்று வேறொருவர்க்கு இசைத்திடவும் அவர்கள் கேட்டு இவ் வின்னல் தீர்த்து உள்ளத்துஇரங்கி...

அபிராமி பதிகம் 8

வஞ்சகக் கொடியோர்கள் நட்புவேண்டாமலும் மருந்தினுக்கா வேண்டினும் மறந்தும் ஓர் பொய்மொழி சொலாமலும் தீமையாம் வழியினிற் செல்லாமலும் விஞ்சு...

bottom of page