ராகம் : மத்தியமாவதி தாளம்: கண்டசாபு
மிகையுந் துரத்த வெம் பிணியுந் துரத்த
வெகுளி யானதுந் துரத்த
மிடியுந் துரத்த நரை திரையும் துரத்த மிகு
வேதனைகளுந் துரத்த
பகையுந் துரத்த வஞ்சனையுந் துரத்த
பசி யென்பதுந் துரத்த
பாவந் துரத்த பதிமோகந் துரத்த
பல காரியமுந் துரத்த
நகையுந் துரத்த ஊழ் வினையுந் துரத்த
நாளுந் துரத்த வெகுவாய்
நாவறண்டோடி கால் தளர்ந்திடும் என்னை
நமனுந் துரத்துவானோ?
அகில உலகங்கட்கும் ஆதார தெய்வமே!
ஆதி கடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!அருள் வாமி! அபிராமியே!
பதவுரை
மிகையும் துரத்த | கேடுகளும் வெருட்ட; மிகுதி என்னும் பொருளது மிகை. அதற்குக் குற்றம் என்னும் பொருள் கொள்வதுண்டு ஏனெனில் எதிலும் அளவு வேண்டும் என்பது நெறிமுறை; அளவை விஞ்சுதல் குற்றமாம். |
வெம் பிணியும் துரத்த | கொடிய வியாதியும் துரத்த |
வெகுளியானதும் துரத்த | கோபமும் வெருட்ட |
மிடியும் துரத்த | வறுமையும் என்னை பின்தொடர |
நரை திரையும் துரத்த | மூப்பும் அதன் விளைவாக கண்களில் திரை விழ |
மிகு வேதனைகளும் துரத்த | உடல் மற்றும் மனவருத்தங்களும் எழ |
பகையும் துரத்த | எதிர்ப்புணர்வும் விரட்ட |
வஞ்சனையும் துரத்த | கபடங்களும் பயமுறுத்த |
பசி என்பதும் துரத்த | உணவு வேட்கை கொள்ள |
பாவம் துரத்த | தீச்செயல்களும் விரட்ட |
பதி மோகம் துரத்த | பந்த பாசங்களும் வெருட்ட |
பல காரியமும் துரத்த | கர்ம வினைகளும் வெருட்ட |
நகையும் துரத்த | இகழ்ச்சியும் துரத்த |
ஊழ்வினையும் துரத்த | முன் இழைத்த வினையும் துரத்த |
வெகுவாய் நாவறண்டோடி | மிகுந்த நீர்வேட்கை கொண்டு |
கால் தளர்ந்திடும் என்னை | மிக்க சோர்வுற்று இருக்கும் என்னை |
நமனும் துரத்துவானோ | யமன் வேறு விரட்டுவானோ |
அகில உலகங்கட்கும் | அனைத்து உலகங்களுக்கும் |
ஆதார தெய்வமே | பற்றுக்கோடாக இருக்கும் தெய்வமே |
விளக்கவுரை
‘ஜன்ம ம்ருத்யு ஜரா வ்யாதி’ என்று காலச்சுழலக்குள் அடைப் பட்டிருக்கும் ஒரு ஜீவனின் அல்லலை மிக உருக்கமாக இப்பாடலில் கூறுகிறார். இவ்வளவு துன்பங்களுக்கும் ஆசை தான் காரணம் என்பதை அவன் அறிவதில்லை. அறிந்தாலும் அதை வெற்றி கொள்ள முயற்சிப்பதும் இல்லை. கிணற்றுக்குள் வாயைத் திறந்தபடி ஒரு முதலை; பாதி கிணற்றினில் ஒரு பச்சை கொடியை பிடித்துக் கொண்டு விழப் போகும் அபாயத்தில் இருக்கும் ஒருவன்; மரத்தினில் தொங்கிக் கொண்டிருக்கும் தேனடையிலிருந்து விழும் தேன்: அந்த சொட்டுத்தேனுக்கு ஆசைப்பட்டு வாயைத் திறக்கிறானாம் அவன். அதைப் போல மனித வாழ்க்கையில் ஏற்படும் பல ப்ரச்னைகளுக்கிடையில் அவன் ஐம்புலன்களின் ஆசைகளை தீர்த்துக் கொள்வதிலேயே வாழ்நாளை கழிக்கின்றான். இவ்வாறு அல்லாமல் பேரின்ப நிலையை அடைய வேண்டும் என்ற விவேகம் என்றைக்கு வருமோ என ஆதங்கப் படுகிறார்.
விருத்தம்
சகல செல்வங்களுந் தரும் இமய கிரிராச
தனயை! மாதேவி! நின்னைச்
சத்யமாய் நித்ய முள்ளத்தில் துதிக்கும் உத்
தமருக்கு இரங்கி மிகவும்
அகிலமதில் நோயிஆன்மை கல்விதன தானியம்
அழகு புகழ் பெருமை இளமை
அறிவு சந்தானம் வலிதுணிவு வாழ்நாள் வெற்றி
ஆகு நல்லூழ் நுகர்ச்சி
தொகைதரும் பதினாறு பேறும் தந்தருளி நீ
சுகானந்த வாழ் வளிப்பாய்
சுகிர்த குணசாலி! பரிபாலி! அநுகூலி! திரி
சூலி! மங்கள விசாலி!
மகவுநான் நீதாய் அளிக்கொணாதோ? மகிமை
வளர்த் திருக்கடவூரில் வாழ் வாமி, சுபநேமி,
புகழ் நாமி, சிவசாமி மகிழ் வாமி, அபிராமி உமையே
பதவுரை
சகல செல்வங்களும் தரும் | எல்லாவிதமான ஐசுவரியமும் கொடுக்கின்ற |
இமயகிரிராச தனயை | மலயரசனின் மகளே |
மாதேவி | பெருமை மிக்க அம்பிகையே |
நின்னை சத்யமாய் | உன்னை உண்மையுடன் |
நித்யமுள்ளத்தில் துதிக்கும் உத்தமருக்கு | தினம்தோறும் உள்ளத்தில் தியானிப்பவருக்கு |
மிகவும் இரங்கி | மிகவும் மனம் கசிந்து |
அகிலமதில் | இந்த உலகத்தில் |
நோயின்மை கல்வி தன தானியம் | பிணி இல்லாமையும், அறிவாற்றலும்,,செல்வமும், தான்ய வகைகளும் |
அழகு புகழ் பெருமை இளமை | அழகும், புகழும், பெருமையும், இளமையும் |
அறிவு சந்தானம் வலிதுணிவு | அறிவும், மக்கட்பேறும், ஆற்றலும் துணிவும் |
வாழ்நாள் வெற்றி | நீண்ட ஆயுளும், வாழ்வில் வெற்றியும் |
ஆகு நல்லூழ் நுகர்ச்சி | தவப்பயனும், அதனால் அடையும் அனுபவங்களும்; ஊழ் = வினைப்பயன்; |
தொகைதரும் பதினாறு பேறும் | இந்த வகையான பதினாறு வகையான அடையத் தக்கவைகளும் |
தந்தருளி | தந்து அருள்வாயே |
நீ சுகானந்த வாழ்வளிப்பாய் | மேலான வாழ்க்கையை தருவாய் |
சுகிர்த குணசாலி | நன்மை செய்யும் நற்குணமுடையவளே |
பரிபாலி | பாதுகாப்பவளே |
அநுகூலி | உதவி புரிபவளே |
திரிசூலி | திரி சூலாயுத்தை தாங்கியிருப்பவளே |
மங்கள விசாலி | நன்மை தருபவளே, பெருமையுடையவளே |
மகவு நான் நீ தாய் | நான் பிள்ளை, நீ தாய் |
அளிக்கொணாதோ | (நான் வேண்டுவதை) கொடுக்கக் கூடாதோ |
மகிமை | பெருமை பொருந்திய |
வளர் திருக்கடவூரில் வாழ் | திருக்கடையூர் ஸ்தலத்தில் வாழும் |
வாமி | (சிவனின்) வாம(இடது) பாகத்தில் உள்ளவளே |
சுபநேமி | நல்ல சக்ராயுதத்தை ஏந்தியவளே |
புகழ் நாமி | புகழ் பெற்ற நாமம் உள்ளவளே |
சிவசாமி மகிழ் வாமி | பரமசிவன் மகிழும் தேவியே |
அபிராமி | மிக்க அழகுடையவளே |
உமையே | உமா என்ற பெயருடையவளே |
பலஸ்ருதியாக அமைந்துள்ள இந்த பாடலில் அம்பிகையை ஆராதனை செய்வதால் ஏற்படக்கூடிய பலன்களை பட்டியலிட்டுக் கூறுகிறார். பெறர்கரிய பேறுகளில் பதினாறை குறிப்பிடும் போது நோயின்மையையும் கல்வியையும் கூறி பின்பு செல்வம் வரட்டும் என்கிறார். அறிவுள்ளவனிடம் சேர்ந்த பணம் நல்ல வழியில் செலவழிக்கப்படும்.
அன்பர்கள் யாவரும் அபிராமி அன்னையின் புகழ் பாடி அவள் அருளால் இப்பதினாறு பேறுகளையும் பெற்று அதற்கு மேலும் சுகானந்த வாழ்வைப்பெற அபிராமி அம்மையை வேண்டுகிறோம்.