விருத்தம் ராகம்: ரஞ்சனி
தெரிந்தோ அலாது தெரியாமலோ இவ்வடிமை
செய்திட்ட பிழையிருந்தால்
சினங் கொண்டுஅது ஓர் கணக்காக வையாதுநின்
திருவுளம் இரங்கி மிகவும்
பரிந்துவந்து இனியேனும் பாழ்வினையில் ஆழ்ந்துஇனற்
படாது நல்வரம் அளித்துப்
பாதுகாத்து அருள் செய்யவேண்டும் அண்டாண்டவுயிர்
பரிவுடன் அளித்த முதல்வி!
புரந்தரன் போதன் மாதவனாதியோர்கள் துதி
புரியும் பாதாம் புயமலர்ப்
புங்கவி! புராந்தரி! புரந்தகி! புராதனி!
புராணி! திரிபுவனே சுவரி!
மருந்தினும் நயந்த சொற்பைங்கிளி! வராகி! எழில்
வளர்த் திருக்கடவூரில் வாழ் வாமி, சுபநேமி,
புகழ் நாமி, சிவசாமி மகிழ் வாமி, அபிராமி உமையே
பதவுரை
தெரிந்தோ அலாது தெரியாமலோ | அறிந்தோ அல்லது அறியாமலோ |
இவ்வடிமை செய்திட்ட பிழையிருந்தால் | அடியேன் குற்றம் ஏதாவது புரிந்திருந்தால் |
சினம் கொண்டு | கோபம் கொண்டு |
அது ஓர் கணக்காக வையாது | அதைக் கருத்தில் கொள்ளாமல் |
நின் திருவுளம் இரங்கி | உன் உள்ளத்தில் கருணை கொண்டு |
பரிந்து வந்து | ஆதரவு செய்து |
இனியேனும் பாழ் வினையில் ஆழ்ந்து | இனிமேலாவது அழிவுப்பாதையை நோக்கி (செல்லாமல்) |
மிகவும் இனற்படாது | அதிக இடர் படாமல் (இருக்க) |
நல் வரம் அளித்து | நல்ல பலன் அளித்து |
பாதுகாத்து அருள் செய்ய வேண்டும் | காப்பாற்றி அருள வேண்டும் |
அண்டாண்ட உயிர் பரிவுடன் அளித்த முதல்வி | அகில உலகத்திலும் உள்ள ஜீவராசிகளை அன்புடன் தோற்றுவித்த முதன்மையானவளே |
புரந்தரன் | இந்திரன் |
போதன் | மலர் மீதிருக்கும் ப்ரம்மா |
மாதவன் | திருமால் |
ஆதியோர்கள் | முதலியோர்கள் |
துதி புரியும் | புகழ்ந்து பாடும்
|
பாதாம்புய மலர்ப்புங்கவி | தாமரை மலரன்ன பாதங்களை யுடைய தெய்வப்பெண்ணே! |
புராந்தரி | சிவையே |
புரந்தகி | திரிபுரத்தை அழித்தவளே |
புராதனி | பழமையானவளே |
புராணி | ஆதியானவளே |
திரிபுவனேசுவரி | மூன்று புவனங்களுக்கும் தலைவியானவளே |
மருந்தினும் நயந்த சொற் பைங்கிளி | அமுதத்தினும் இனிய சொற்களையுடைய பைங்கிளியே |
வராகி | வராகியே |
எழில் | பொலிவான |
வளர் திருக்கடவூரில் வாழ் | திருக்கடையூர் ஸ்தலத்தில் வாழும் |
வாமி | (சிவனின்) வாம(இடது) பாகத்தில் உள்ளவளே |
சுபநேமி | நல்ல சக்ராயுதத்தை ஏந்தியவளே
|
புகழ் நாமி | புகழ் பெற்ற நாமம் உள்ளவளே |
சிவசாமி மகிழ் வாமி | பரமசிவன் மகிழும் தேவியே |
அபிராமி | மிக்க அழகுடையவளே |
உமையே | உமா என்ற பெயருடையவளே
|
விளக்கவுரை
புங்கவி - வியாபித்திருக்கின்ற உலகம் யாவும் அந்த பர ப்ரம்மத்துக்கே உரியது. அந்த பரவஸ்துவே இந்த ப்ரபஞ்சமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. எழிலாய் திகழ்கின்றது. அந்த பரப்பிரம்மே புங்கவன். பரப்பிரம்மத்தின் சக்தி வடிவமே புங்கவி.
புராதனி - முன்னைப் பழம்பொருட்ககு முன்னைப் பழம் பொருளாகி விளங்குபவளாதலின் அவள் புராதனி (தொன்மையானவள்) ஆகின்றாள்.
பாடல் தாளம் : கண்டசாபு
நீடுலகங்களுக்(கு) ஆதாரமாய் நின்று
நித்தமாய் முத்தி வடிவாய்
நியமமுடன் முப்பத் திஆரண்டறம் வளர்க்கின்ற
நீ மனைவியாய் இஆருந்தும்
வீடு வீடுகள் தோறும் ஓடிப் புகுந்து கால்
வேசற்(று) இலச்சை யும்போய்
வெண்டுகில் அரைக்கணிய விதியற்று நிர்வாண
வேடமுங் கொண்டு கைக்கோர்
ஓடேந்தி நாடெங்கும் உள்ளந் தளர்ந்து நின்று
உன்மத்த னாகி அம்மா!
உன் கணவன் எங்கெங்கும் ஐயம் புகுந்தேங்கி
உழல்கின்ற தேது சொல்வாய்
ஆடுகொடி மாடமிசை மாதர் விளையாடி வரும்
ஆதி கடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி! அருள்வாமி! அபிராமியே!
பதவுரை
நீடு உலகங்களுக்கு ஆதாரமாய் நின்று | நெடுங்காலமாகக் புவனங்களுக்கு பற்றுக்கோடாயிருந்து |
நித்தமாய் | நித்யமாய் |
முத்தி வடிவாய் | மோக்ஷத்தின் உருவாய் |
நியமமுடன் | விதியுடன் |
முப்பத்திரண்டு அறம் | முப்பத்திரண்டு வகையதான தர்மங்களை |
வளர்க்கின்ற நீ | ரட்சிக்கின்ற நீ |
மனைவியாய் இருந்தும் | இல்லத்தரசியாக இருந்தும் |
வீடு வீடுகள் தோறும் | வீடுவீடாய் |
ஓடிப் புகுந்து | புகுந்து வெளிவந்து |
கால் வேசற்று | கால் சோர்வுற்று |
இலச்சையும் போய் | வெட்கம் கெட்டு |
வெண் துகில் அரைக்கு அணிய விதியற்று | இடுப்பில் சுற்றிக்கொள்ள (ஒரு) வெள்ளைத்துணிக்குக் கூட விதியில்லாமல் |
நிர்வாண வேடமும் கொண்டு | ஆடையில்லாமல் |
கைக்கு ஓர் ஓடு ஏந்தி | கையில் பிட்சை பாத்திரம் ஏந்தி |
நாடு எங்கும் | எல்லா இடமும் (அலைந்து) |
உள்ளம் தளர்ந்து நின்று | மனம் சோர்ந்து போய் |
உன்மத்தன் ஆகி | பைத்தியமாகி (அம்மா) |
உன் கணவன் எங்கெங்கும் | உன்னுடைய மணவாளன் எல்லா இடத்திலும் |
ஐயம் புகுந்து ஏங்கி | பிச்சைக்காக ஏங்கி |
உழல்கின்றது ஏது சொல்வாய் | ஏன் துன்பப்படுகிறான் என்று கூறமாட்டாயா |
மாடமிசை ஆடு கொடி | மாடங்களில் கொடிகள் அசைந்தாட |
மாதர் விளையாடி வரும் | மகளிர் உல்லாசமாக சுற்றிவரும் |
ஆதி கடவூரின் வாழ்வே | ஆதி கடவூர் என்ற திருத்தலத்தில் எழுந்தருளிய |
அமுதீசர் ஒரு பாகம் அகலாத | அம்ருதகடேஸ்வரரின் ஒரு பக்கத்தில் என்றும் நிலைத்திருக்கும் |
சுகபாணி | நன்மைதரும் கரத்தினளே |
அருள்வாமி | அருள்பாலித்து (சிவனின்)இடது பாகத்தில் அமர்ந்திருப்பவளே |
அபிராமியே | அழகுடையவளே! |
விளக்கவுரை
கவிஞருக்கு சிறிது சந்தேகம் ஏற்படுகிறது. அம்பிகையின் மணாளனுக்கே பிட்சை கேட்கும் கதியென்றால் தன் கதி என்னவாகும் என்று கலக்கமுறுகிறார். ஆனால் பிட்சாடனராக வரும் சிவனும் அவளிடம் கையேந்தி நிற்கிறார் என்பதெல்லாம் கவித்துவத்தின் ஒர் பிரதிபலிப்பே தவிர இங்கு பரனையும் பரசக்தியையும் ஒருவருக்கு ஒருவரை எதிராக வைத்து ஒப்பிடுவதற்கல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
முப்பத்தி ஆரண்டு அறம் வளர்க்கின்ற நீ: திருவையாறு தலத்தில் அம்மனின் திருநாமம் தர்ம ஸம்வர்த்தினி.
-